டிசம்பர் சீஸன் களை கட்டுவது சங்கீதத்தால் மட்டுமல்ல, சங்கீதத்துடன் இரண்டறக் கலந்த காண்டீன் சமாசாரத்தாலும் என்பது உலகறிந்த உண்மை. வயிறு வாழ்த்தாவிட்டால் செவிக்கு உணவு கிட்டி என்ன பயன்…? சக்கனி ராஜாவும் வேண்டும், சர்க்கரைப் பொங்கலும் வேண்டும். சங்கீதத்தை மட்டும் விமர்சித்து விட்டு காண்டீனை விட்டு விடுவது நியாயமாகப்படாததால், இப்பகுதியை உங்களுக்குப் பரிமாறுகிறேன்.
ஒரே மேள கர்த்தாவில் அமைந்த ராகங்கள் என்றாலும் வாயும் வயிறும் வேறு. சுத்த தன்யாசியில் தன்யாசி இருந்தாலும் இரண்டிற்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது. தன்யாசியை எவ்வளவு சுத்தமாகப் பாடினாலும் அது சுத்த தன்யாசி ஆகிவிடாது. புளியோதரைக்கும் லெமன் ரைஸுக்கும் ஜன்யம் ஒன்றுதான். அதாவது மூலப்பொருள் சாதம் தான். காண்டீனில் இரண்டின் கலர்தான் வேறாக இருந்ததே தவிர டேஸ்ட் ஒன்றாக இருந்தது. பைரவி அழுதால் முகாரி. மிளகாய் பஜ்ஜியை சாப்பிட்டுவிட்டு ஒப்பரியே வைத்தனர். மறந்து போய் ஊசி மிளகாயில் பஜ்ஜி போட்டு விட்டார்களோ…?
பல வருடங்களாக எழுதி வருகிறேன். அடைக்கு அவியலும், திருவாதிரை களிக்கு புளிக்கூட்டும் பொருந்தாத கூட்டணி. யாரோ எப்பவோ செய்தார்கள் என்பதற்காக இதை கர்மசிரத்தையாக பின்பற்ற வேண்டாமே… மைக்கேல் ஜாக்ஸன் ’ எந்தரோ மஹானுபாவா ’ பாடிய மாதிரி இருந்தது.
நேற்று சபா காண்டீனில் லெக்சர் கம் டெமான்ஸ்ட்ரேஷன்…. வழக்கத்துக்கு மாறாக ஆண்களை விட பெண்கள் கூட்டம் அலை மோதியது. சப்ஜெக்ட்.. தயிர்சாதம். மணிரங்கு, மத்யமாவதி, ஸ்ரீராகம், பிருந்தாவன சாரங்கா… இவை ஒரே மாதிரி இருந்தாலும் கொஞ்சம் மெனக்கிட்டால் கண்டுபிடித்து விடலாம். தயிர் சாதமும் வெவ்வேறு மாகாணங்களில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை தயிர் தயாரிப்பிலிருந்து தாளித்து கொட்டுவது வரை அம்மாகாணத்திலிருந்து வந்த தத்திகள்… சாரி… நளன்கள் விலாவரியாக விளக்கினார்கள்.
கர்னாடக சங்கீதத்திலும், ஹிந்துஸ்தானி இசையிலும் ஒரே ஸ்வரங்களில் அமைந்த ராகங்கள் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு மோஹனம் – பூப், ஹிந்தோளம் - மால்கோன்ஸ், சுபபந்துவராளி – தோடி ( நம்ம தோடி மாதிரி ஹிந்துஸ்தானியில் ராகமே கிடையாது. ஆனந்த பைரவியும் அங்கு இல்லை என்பது கொசுறுத் தகவல்.)
இதை எதுக்கு சொல்றேன்னா, நம்ம இட்லியை குஜராத்திகள் டோக்ளா என்கிறார்கள். பொங்கல் – கிச்சடி. இட்லியை டோக்ளான்னு இங்கே குடுத்தா நாம என்ன இளிச்சவாயன்களா…? தேஷ்ல பாடறதுக்கு பாட்டுக்களா இல்லை…அந்த ராகத்துல கவ்வாலி பாடினா பங்களா தேஷ் ஆயிடும். வாயில் போட ஸ்வீட்டுக்களா இல்லை…. ஸ்வீட் என்ற பெயரில் வெல்லப்பாகில் குங்குமப்பூவைத் தூவிக்கொடுத்தால் எதனுடம் சேர்ப்பது…?
முன்பே எழுதியிருந்த மாதிரி, இஷ்டத்துக்கு ஸ்வரஙளை மாத்தி, ஆபேரியில் ஆரம்பித்து சாவேரியில் சங்கமித்து, புதுசா கண்டுபிடிச்ச ராகம்னு சில வித்வான்கள் தொடை தட்டுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்கவும் முடியாது. ஆந்தோளிகா மாதிரி ஆபோளிகான்னு புது ராகம் பாடினாரான்னு நீங்க கேட்பேள்னு தெரியும். ஆபோளிகான்னு புது ஸ்வீட் போட்டிருந்தார்கள். போளியில உள்ள வெல்ல சமாசாரத்துக்கு பதிலா, கஸ்டர்டு மாதிரி ஒரு கொழ கொழாவை கல்பனா சங்கதிகள் சேர்த்து ஸ்டஃப் பண்ணியிருந்தார்கள். பரவாயில்லை… இன்னும் இம்ப்ரூவ் பண்ணினா ஆபோளிகாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
சில வித்வான்கள் பாடும்போது பார்க்க சகிக்காது. சிக்கின நூல்கண்டை பிரிப்பது, குஸ்தி போடுவது, பட்டம் விடுவது, கும்மியடிப்பது போன்ற சேஷ்டைகளால் ஆடியன்ஸ் அலறி ஓடுவார்கள். இன்னொரு லெக்சர் டெமோவில், சாப்பாட்டு வகைகளை அலங்காரம் பண்ணுகிறேன் பேர்வழி என்று, வெஜிடபிள் கட்டிங் ஸ்டைலில், ஆமை வடையை ஆமை ஷேப்பிலும், கட்லெட்டை தேள் மாதிரியும், சாதா தோசையை படமெடுத்த பாம்பு ஷேப்பிலும், பக்கோடா துக்கடாக்களை, பல்லி, பூரான், கரப்பு மாதிரியும் டெகொரேட் பண்ணி நம் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். அடுத்த ஆண்டு முதல் இவர்களுக்கு சான்ஸே கொடுக்கலாகாது… கொடுத்தால், காண்டீனோடு சபாவே நாறிடும். ஊத்துக்காட்டின் அலை பாயுதேவை கானடாவில் பாடாமல் அடாணாவில் பாடினால் அடிக்க வரா மாதிரி இருக்கும். மைசூர் போண்டாவை மைதாவில் போட்டால்.. ஊத்திக்கும்.
மிருதங்கத்துக்கு தனி ஆவர்த்தனம் தரவில்லை என்ற கோபத்தை தம்பூரா தாத்தாவிடம் காட்டினாராம்… நேற்று சரக்கு மாஸ்டருக்கு யார் மீது கோபமோ.. அதை காஞ்சிவரம் இட்லியில் காட்டிவிட்டார். இந்த இட்லியில் யாரவது கரம் மசாலாவைப் போடுவார்களோ…? மனுசன் புஹாரி ரேஞ்சுக்கு போட்டுட்டாரே… முன்னாடி முனியாண்டில இருந்திருப்பார் போலிருக்கு.
சைல்டு ப்ராடிஜிகள் சங்கீதத்தில்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சாப்பாட்டிலும் இருக்கலாம் என்பதை நிரூபித்தான் நாலு வயது கூட நிரம்பாத நாராயணன். பால் பொங்கி வழியும் முகம். மோர்க்குழம்பில் ஊறிய பூசணிக்காய் மாதிரி பொத பொதவென்ற உடல்வாகு. மேஜை நிறைந்த ஐம்பது அயிட்டங்களை அரை நொடியில் நோட்டம் விட்டுவிட்டு, கண்ணைக் கட்டிக்கொண்டு, குழந்தை ஒப்பிக்கறது மட்டுமல்ல… டேஸ்ட் பார்க்காமலேயே வாளியில் இருப்பது மிளகு ரசமா… லெமன் ரசமா… அதன் இங்கிரேடியண்ட்ஸ் எல்லாத்தையும் நாக்கின் நுனியில் வைத்திருக்கிறான். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… அடுத்த வருஷமே இவனுக்கு ‘ இலை மாமணி ‘ பட்டம் கிடைக்கும்.
இறுதியாகப் பாடும் துக்கடாக்களில் வித்வான்கள் நிறைய லிபர்ட்டி எடுத்துக்கொள்வார்கள்…. தப்புன்னு சொல்லலை….ராகங்களில் எடுத்துக்கலாம்… ஆனா, சாஹித்யத்துல எடுத்துக்கலாமோ ஸ்வாமி…. எப்படிப்பாடினாரோன்னு ஆரம்பிச்சு… அப்படி போடு போடுன்னு முடிக்கும் பிரகஸ்பதிகளிடம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். நானும் லிபர்ட்டி எடுத்துக்கறேன் பேர்வழின்னு ரசவடை என்ற பெயரில் வடையை ஹாலோவாக செய்து அதில், ரசத்தை இன் ஜெக்ட் செய்து பானி பூரி ஸ்டைலில் பரிமாறினாலும் கூட்டத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. சேஷகோபாலன் ஸ்டாண்டர்டை மெயிண்டெயின் பண்ணுவது போல, சில காண்டீன்களில், வெஜிடபுள் பிரியாணி, சேமியா உப்புமா – கத்தரிக்காய் கொத்ஸு காம்பினேஷன் வகையறாக்களில் டேஸ்ட் கியாரண்டி.
ஹிந்துஸ்தானி இசையில் கோடி கொடுத்தாலும் காலையில் பாடவேண்டிய ராகத்தை மாலையிலோ, மாலை ராகத்தை மத்யானத்திலோ, பாட மாட்டார்கள்.
இது சபா காண்டீனுக்குப் பொருந்தாது. கச்சேரிக்கு செல்லும் சாக்கில் சில நாட்களாவது தர்மபத்தினி சமையலிலிருந்து தப்பிக்க நினைக்கும் கணவன்மார்களுக்கு, எப்போதும் எங்கேயும் சங்கீதம் மாதிரி எல்லா அயிட்டங்களும் எப்போதும் கிடைக்க சபா ஆவன செய்ய வேண்டும்.. செய்வார்களா…?
இவ்வளவு அயிட்டங்களையும் உள்ளே தள்ளி விட்டு உயிருடன் இருந்தால், அடுத்த சீஸனிலும் பரிமாறுவேன்…
Leave a comment
Upload