தொடர்கள்
பொது
காலை/காளை பிடித்த பாக்கியசாலி – சிந்தனையும், சித்திரமும் தேவா

20250006140928515.jpg

ஜல்லிக்கட்டு போட்டியில் அலங்காமல் நல்ல ஊர் ஒன்றில் முதற்பரிசாக குட்டி விமானம் ஒன்றை பரிசாகப்பெற்றான் Dr. மன்னன்.

மன்னனைச் சுற்றி நிருபர்கள் படையெடுக்க, ஒரு பிரஸ் மீட் துரிதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

20250006140907997.jpg

நிருபர்: ஜல்லிக்கட்டில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

மன்னன்: சிறு வயதில் எனக்கு படிப்பு ஏறாததைக் கண்ட என் அப்பா, "நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு" என்று அடிக்கடி சொல்லுவார். அவர் தீர்க்கதரிசி; அவர் சொல்வதில் உண்மையான உள் அர்த்தம் இருக்கும் என்றெண்ணி, விடுமுறை நாட்களில் மாடு மேய்க்க துவங்கினேன். ஊரில் நடந்த மாடு மேய்க்கும் போட்டியில் முதற்பரிசு வென்றேன். தொடர்ந்து, பள்ளியிலேயே, டிஸ்ட்ரிக்ட் லெவல், ஸ்டேட் லெவல் போட்டிகளுக்கு அனுப்பினார்கள். எல்லாவற்றிலும் பரிசு. நேஷனல் லெவெல்மாடு மேய்க்கும் போட்டியில் வெற்றி பெற்றதும் பெருமை புகழ் தான்,. விமான நிலையத்திலிருந்து மாலை போட்டு வெளியே தாரை தப்பட்டை முழங்க தூக்கி வந்தார்கள்.

அர்ஜென்டைனாவில், மாடு மேய்க்கும் நவீன யுக்திகள் கற்றுக்கொள்ள, உள்ளூர் எம் எல் ஏ வின் காலைப்பிடித்து வாய்ப்பு பெற்றேன். கற்றுத் தெளிந்தேன். அப்புறம் என்ன, பல நாடுகள் சென்று கெஸ்ட் விரிவுரைகள்.

மாஸ்கோ (MaasCOW)வில் கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றேன்

நிருபர் : அதெல்லாம் சரி. மாடு பிடிக்க எப்படி ஆர்வம் வந்தது?

மன்னன்: நல்ல கேள்வி. மாடு மேய்க்கும் போதே சில மாடுகள் முரண்டு பிடிக்கும். அவைகளை அடக்க வேண்டும். யோசித்தேன். என் தொழிலை விரிவு படுத்த நியூ ஜெர்சி யில் மாடு பிடிக்கும் கலையை சொல்லித்தரும் அகடெமியில் சேர்ந்தேன். மாடுபிடிவீரர்களில் கைதேர்ந்தவர்கள், கலையை progressive ஆக சொல்லித்தந்தனர். கன்றுக்குட்டி பிடிப்பது, நோஞ்சான் மாடு, நலிவுற்ற மாடு ,கொழுத்த மாடு என்று மாடு பிடிக்கும் டெக்னீக்ஸ் புரிந்து கொண்டேன். அதன் அனுபவம் இன்று ஜல்லிக்கட்டில் வெற்றிப்பாதை தொடர்கிறது.

நிருபர்: உங்கள் எதிர்காலத்திட்டம்?

மன்னன்: ஜல்லிக்கட்டு விளையாட்டில் வீரர்களுக்கு, காயங்கள், சில முறை உயிர்சேதமும் ஏற்படுகிறது. உயிர்சேதமில்லா ஜல்லிக்கட்டு என்ற பெருமையை நம் நாடு பெரும் வகையில், ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு பயிற்சிப்பட்டறை அமைத்து, அவை மாடு பிடிவீரர்களை அணுகும்போது துன்புறுத்தாமல் எப்படி எதிர்கொள்வது என்று பயிற்சி அளிக்க உள்ளேன்.

இரண்டாவதாக, அறிவு பூர்வமாக சிந்தித்து, உடல் பலத்துடன் எதிர்கொள்ளும் ஜல்லிக்கட்டு விளையாட்டை, எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் குட்டி விமானத்தில் பிரேசில், அர்ஜன்டைனா , நியூ ஜெர்சி போன்ற நாடுகளுக்கு பறந்து சென்று, பரப்பி, ஜல்லிக்கட்டினை உலகக்கோப்பை போட்டி நடத்தும் அளவுக்கு பிரபலப்படுத்தவேண்டும் என்பது எதிர்காலத்திட்டம். பிரபல தொழில் நிறுவனங்கள் மாடுபிடி வீரர்களை ஏலத்தில் எடுக்கும் அளவிற்கு, அதான் நம்ம ஐபிஎல் ரேஞ்சுக்கு, இந்த விளையாட்டை ஓங்கச்செய்வேன்.

பேட்டி முடிந்தது. எல்லோருக்கும் மாடுலேஷன் தோய்ந்த குரலில் நன்றி கூறினார் நம்ம மன்னர்.