தொடர்கள்
கதை
எட்டுக்கல் பேஸரி 1/2 இரண்டு வார சிறுதொடர்கதை  - கி. ரமணி          

20250011085743364.jpg



சுதா அத்தையின் கணவர் கிருஷ்ணாவுக்கு 90 வயது முடிந்தது. அவர் ஓய்வு பெற்ற சென்னை ஹைகோர்ட் ஜட்ஜ்.

மயிலாப்பூர் லஸ் அருகே இருக்கும் அவர்கள் வீட்டுக்கு எங்களை அழைத்திருந்தனர்.

ஒரு சின்ன கெட்- டுகெதர். மனைவியுடன் போனேன். சென்னையில் உள்ள சில நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்திருந்தார்கள்.

என் ஒன்றுவிட்ட அத்தை சுதா. அவளுக்கு 84 வயது ஆகிறது. எப்பவும் போல் கதர் புடவையில், எளிமையின் அவதாரமாக, வந்தாள். கழுத்தில் மெல்லிய கருகமணி கோர்த்த தாலிச் சங்கிலி. காதில் சிறிய முத்துத் தோடு. நெற்றியில் குங்குமம்.

மின்னல் அடிக்கும் வைர எட்டுக்கல் பேஸரி போட்ட அந்த எடுப்பான மூக்கு மட்டும் கே பாலச்சந்தரின் "அடுத்தாத்து அம்புஜத்தை" நினைவூட்டியது.
எளிமை பொங்கும் சுதா அத்தையின் மொத்த உருவத்தில், அந்த மூக்கு நுனியில் மட்டும் ஏன் இந்த டால் அடிக்கும் மாறுபாடு?

அந்தக் கால கதையை மறைந்த என் அம்மா, பெருமை கலந்த மரியாதையுடன், நிறைய முறை என்னிடம் சொன்னது என் நினைவுக்கு வந்தது.

1961ல்:

1961ல் சுதா சித்தி 21 வயதில் எம். ஏ முடித்து, டாக்டரேட், ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பிரில் பண்ணிக் கொண்டிருந்தாள். தமிழில் பாரதியார் ரசிகை,உபாசகி, காதலி,
அப்பா மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் கணிதப் பேராசிரியர். அம்மா வீட்டு அம்மா தான். திருவல்லிக்கேணி டி.பி கோவில் தெருவில் வீடு.

" சுதாவுக்கு நடிகை பானுமதியின் ஜாடை உண்டு. அழகு, உருவம், கூர்மையான புத்தி, தைரியம், சுய மரியாதை, எல்லாமே பானுமதி போல. பாடினால், குரலும் அப்படியே பானுமதி தான்.
சுதா கிட்ட ரெண்டு வார்த்தைக்கு மேல சேர்ந்து நான் பேசினதே இல்லை. பேச முடியாது. பேசினால் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான். எனக்கு பொண்ணா மாமியாரான்னே
தெரியல. " என்று பெருமையுடன் முடிப்பாள் அவள் அம்மா.
1960களில் தமிழ்நாட்டில் பெண்களின் கல்வி, முன்னேற்றப் பாதையில் இருந்தது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் "ஓரளவு படிக்க வைத்து விட்டு நல்ல இடமாக பார்த்து கல்யாணம் செய்து விடு." என்கிற ஃபார்முலா தான் பெரும்பாலும்... வசதியுள்ள குடும்பங்களிலும் சேர்த்து... பின்பற்றப்பட்டது.

எம். ஏ முடிச்சும் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல், மேலே,முனைவர் பட்டம் படிக்கும் சுதாவை அக்கம் பக்கத்தில் அதிசயமாகப் பார்த்தார்கள்.
அதற்கு ஏற்றபடி தான் சுதாவும் இருந்தாள். அவளை ஒரு பெண்ணியவாதி என்று ஒரு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்ட ஜாடிக்குள் மட்டும் அடைத்து மூடி போட முடியாது.

'நான் இந்த உலகில் யாருக்கும் குறைந்தவள் அல்ல. எனக்கு சரி என்று தோன்றுவதை மட்டும் தான் நான் செய்வேன். என் உரிமை என் இஷ்டம். என் கடமை என் உள்ளுணர்வின் குரல்.' என்கிற பாரதியின் குணம், ஞானம்.

அம்மாவுக்கு ஏக டென்ஷன்.' 20 தாண்டின பெண்ணுக்கு உடனே கல்யாணம் பார்த்து முடிக்கணும். ஊருக்கு பதில் சொல்லணும்.'

அப்போதுதான் இந்த வரன் வந்தது.
சுதாவின்,அப்பாவின் நண்பரும் வக்கீலுமான ராமபத்திரன், தன் கஸினின் பிள்ளை கிருஷ்ணாவின் ஜாதகத்தைக் கொடுத்தார்.

மிகச் சிறப்பாகப் பொருத்தம் அமைந்திருக்கிறது என்று திருவல்லிக்கேணி சடகோப ஜோசியரே சொல்லி விட்டார்.
"ரொம்ப நல்ல இடம். ஏகத்துக்கும் பணம், பதவி, பெருமை, என்பதுடன்
தங்கள் பையனுக்கு நிறையப் படித்த பெண் தான் வேண்டும் என்கிற தேடலும் கொண்ட குடும்பம்." என்றும் ராமபத்திரன் சொல்லி இருந்தார்.

ஒருவழியாக சுதாவிடம் பயத்துடன் இதைச் சொல்லி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது அவள் தன் பெற்றோருக்கு செய்ய வேண்டிய தலையாய கடமை என்றும் ஒப்புக்கொள்ள வைத்தாகி விட்டது.

சுதா பதிலுக்கு பெற்றோரிடம் இரண்டு கண்டிஷன் தான் போட்டாள்.
"1) பைசா வரதட்சணையோ, ஒரு திருகாணி தங்க நகையோ பிள்ளை வீட்டார் நம்மிடம் கேட்கக் கூடாது.
2) நான் டாக்டரேட் படித்து முடிக்கும் வரை, எந்த தொந்தரவும் அவர்கள் வீட்டில் யாரும்அதற்குக் கொடுக்கக் கூடாது."
இந்த கண்டிஷன் எல்லாம் சுதா கிட்ட இருந்து நாம எதிர்பார்த்ததுதானே. நல்ல காலமா இதற்கு மேல அவ ஒன்றும் கேட்கலை. என்று நிம்மதி ஆனார்கள் பெற்றோர்கள்.

"சரிம்மா. நாளைக்கு நானும் அம்மாவும் கிளம்பி மாப்பிள்ளை வீட்டுக்கு போய் அவருடைய அப்பா அம்மாவை பார்த்து விட்டு வருகிறோம். அப்புறம் எல்லாம் உனக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால் மேலே பயணிக்கலாம். இல்லையா?" என்றார் அப்பா.

" சம்பந்தம் பேசவே இன்னும் ஆரம்பிக்கல. அதுக்குள்ள மாப்பிள்ளையா? சரி ஏதோ பண்ணுங்க. " என்றாள் விட்டேத்தியாக, சுதா.

அடுத்த நாள் காலையில் மயிலாப்பூரில் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று விட்டு, சில மணி நேரங்கள் கழித்து தங்கள் வீட்டுக்கு திரும்பினார் சுதாவின் அப்பாவும் அம்மாவும்.

சுதாவை அழைத்து அம்மா,
" ரொம்ப நல்ல பீப்பிள். லஸ்ஸுல நாகேஸ்வரராவ் பார்க்குக்கு பின்னாடி ரெண்டு மாடி பங்களா, பிளைமவுத் கார்,
டிரைவர்,கூர்க்கா,எல்லாம் உண்டு.

வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே ஹால்ல பெரிய ஜப்பான் கடிகாரம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கடிகாரத்துல மரக் கதவு திறந்து, பொம்மைக்குயில் ஒன்னு எட்டிப் பார்த்து, குக்கூ, குக்கூ என்று கத்துறது.

பையனோட அம்மா கேசரியும், ஸ்ட்ரா போட்டு , வெட்டின இளநீரும் கொடுத்தா. அவங்க தோட்டத்துல விளைஞ்சுதாம்." என்றாள்.


" பையன் கிருஷ்ணா அட்வகேட். எட்டு தலை முறைக்கு சொத்து இருக்கு. பையனோட அப்பா ஹைகோர்ட்ல கிரிமினல் லாயர். அப்பாவோட அப்பா ஓய்வு பெற்ற ஜட்ஜ். ஒரே கோர்ட்டுக் குடும்பம். " என்று சிரித்தார் அப்பா.

"பையனோட ஒன்னு விட்ட சித்தப்பாவோ யாரோ பம்பாய்ல ரூபாய் நோட்டுல கையெழுத்து போடுறவரா இருக்காராம்." என்றாள் அம்மா.

"ஒழுங்கா சொல்ல மாட்டியா? உன்னையும், அவரையும் பைத்தியம்னு நினைச்சுக்க போறா சுதா. அவர் ரிசர்வ் பேங்க் கவர்னர் மா. "என்றார் அப்பா.

" நல்லா பேசிட்டு இருந்தோம். பையன் இப்போ ஊர்ல இல்ல. டில்லி ல இருக்கானாம். ஒரு கேஸ் விஷயமா.
அவனுக்கு உன்ன பாக்க வேண்டிய அவசியம் இல்லையாம். அவன் அப்பா அம்மா சொன்னது போதுமாம். உனக்கு அவனைப் பாக்கணும்னு சொன்னா, பிளைட்டுல வந்துட்டு போவானாம்.".. என்றாள் அம்மா.

" அவனுக்கு என்னை பார்ப்பதற்கு அவசியம் இல்லை என்கிற போது எனக்கு மட்டும் அவன் தரிசனம் எதற்கு?
தவிர கல்யாணத்துக்கே, உங்க மானம் கப்பல் ஏறாமல் இருக்கணும் என்று தினமும் அழறீங்களே... அதற்காகத்தான் ஒத்துக்கிறேன்.
அதனால உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் விட்டு விடுகிறேன். பார்த்து செய்யுங்கள். சரி என் கண்டிஷன் எல்லாம் என்ன ஆச்சு? "

"அதுவா? பையனோட அப்பா அம்மா
எல்லா கண்டிஷனுக்கும் ஒத்துக் கொண்டு விட்டார்கள்... ஆனால்..." என்று இழுத்தர் அப்பா

"என்ன ஆனால்?"

பையனோட பாட்டி, அதாவது அப்பாவுடைய அம்மா என்று ஒரு கிழவி இருக்கிறாள். அவ ஒரு தமிழ் புலவி. ரொம்ப புத்திசாலி போல் இருக்கு. ஸ்கூல் படிப்பு தானாம். ஆனால், நிறைய கவிதை எல்லாம் எழுதி இருக்காளாம். ராமானுஜர் பத்தி புக் எல்லாம் வெளியிட்டு இருக்காளாம். அவதான் அவங்க வீட்டுக்கு தலைவலி... சீ... தலைவி போல் இருக்கு

" ஸோ,என் வருங்கால மாமியாரே அவளுடைய மாமியார் கண்ட்ரோலில் தானா.? அட பாவமே! உருப்பட்ட மாதிரிதான் போ!" என்று சிரித்தாள் சுதா.
( தொடரும்) ..............................................................................