தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 43 “ஜோதி மயம் பல்ப்.” - மோகன் ஜி

20250004165541756.jpg

இது நடந்து ஐம்பது வருஷம் ஆகியிருக்கும்….

அந்நாட்களில் எங்கள் சபரிமலைக் குழுவில் ‘ஜோதி முதலியார்’ என்றோரு சீனியர் ஐயப்பன் இருந்தார். ஆஜானுபாகுவான தோற்றம், வழுக்கைத் தலை, வாயில் வெற்றிலைச் சிவப்பு, கம்பீரமான குரல்.

எங்களுக்கெல்லாம் அவர் முதலியார் குருசாமி; பெரிய குருசாமிக்கு மட்டும் ஜோதி.

அவருக்கான பிரதானமான பணிகள் எனப்படுபவையாவன : -

பணவரவு செலவு, இருமுடிகளின் பொறுப்பு, மற்றும் சாமி வந்து ஆடுபவர்களைத் தாங்குவது.

அந்த வருஷம் மகர ஜோதி தரிசனம் எல்லோருக்கும் திவ்யமாக ஆனது.

அந்த மாலைவேளை, ஜோதி தரிசனம் கண்ட பரவசத்தை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட சளசளப்பான தருணம்…

எங்கள் குருசாமியானால் அதே நேரம் ஏதோ அவசரத்தில் ஜோதி முதலியாரைத் தேடுகிறார்…

“ஓய்… லக்ஷ்மணன்! ஜோதியைக் கண்டீரா?”

“ஆஹா குருசாமி! ஆனந்த தரிசனம் கண்டேன். இன்னொரு ஜென்மா எனக்கு வேண்டாம்!”

குருசாமி அலுப்புடன், ‘’ஒண்ணு கேட்டா ஒண்ணைச் சொல்லும்! நல்ல ஜன்மம் போங்க” என்றபடி வேறொருவரிடமும் கேட்டார்.

அவரோ, குருசாமியின் காலைக் கட்டிக் கொண்டு “உங்களோட அனுக்கிரஹம் குருநாதா! கண்ட ஜோதி கண்ணுலயே நிக்குது ஸ்வாமி!”

“அதை கண்லேருந்து இறக்கி வச்சுட்டு ராத்ரி ஆஹார ஏற்பாடுகளைப் பாரும் வே!” என்று நகர்ந்தார்.

இன்னும் ஓரிருவரை குருசாமி கேட்க, அவர்களும் ஜோதி தரிசனம் பற்றியே பிரஸ்தாபித்தனர்.

அவர்களில் ஒருவர், “ஜோதியை ஆட்கள் தான் அங்கே ஏத்துறதா சொல்றாங்களே.. நிஜமா குருசாமி?” என்ற கேள்வியுடன் அவரை மேலும் ஆயாசப்படுத்தினார்.

குருசாமி ஏதும் சொல்வதற்குள், ஜோதி முதலியார் அங்கே வந்து நின்றார். குருசாமி அவரிடம் விசாரிக்க நினைத்ததைச் சற்று தள்ளிப் போய் நின்று கேட்டார்.

அவரும் ஏதோ பதிலைச் சொன்னார்.

“குருசாமி! இந்த வருஷம் யாத்திரை முடிஞ்சதும் மங்கள பூஜையை அமர்க்களமாக நடத்திடலாம். என்ன சொல்றீங்க?” என்றார் ஜோதி முதலியார்.

“அதெல்லாம் இந்த யாத்திரை நல்லபடியா முடிஞ்சப்புறம் பேசிக்கலாம். மங்களபூஜையில் இன்னோரு காரியமும் இருக்கு ஜோதி!”

“என்ன குருசாமி அது?”

“முதல்ல உம்ம பேரை மாத்தி, உமக்கு வேற நாமகரணம் பண்ணணும். உம்மைப் பத்திக் கேட்டா பத்து நிமிஷத்துல என்னை இங்கே படுத்திட்டாங்கப்பா!”

“குருசாமி! ஜோதி தர்சனம் முடிஞ்சப்புறம் ஜோதியைப் பாத்தியான்னா முதலியார் ஞாபகம் யாருக்கு வரும் குருசாமி?”

இதைக் கேட்டது முந்திரிக் கொட்டையாகிய நான்.

“நீ தான் நம்ம ஜோதிக்கு ஒரு புதுப்பேரைச் சொல்லேன் மயிலு!”

“வேணும்னா முதலியார் குருசாமியை ‘கேப்டன்’னு கூப்பிடலாம் குருசாமி!”

“இது நல்லாருக்கே மோகா!”

ஜோதி முதலியார் என் காதைத் திருகிய படி, “உனக்கு இன்னும் நீல வேட்டியையே சரியா கட்டிக்க வரலை…. எனக்கே பேரு வைக்கிறயா மயிலு!” என்றார்.

ஆனாலும் அதற்குப் பின் ஜோதி முதலியார் ‘கேப்டன்’ என்றே அழைக்கப் பட்டார்.

பி. கு :

மோகன் ஜியின் குறிப்பு பின் வருமாறு.

ஜோதி முதலியாருடன் பல்ப் ஸீரீஸ்க்கு தற்காலிகமாய் மங்களம் பாடிடலாம்.

சபரி மலைக்குப் போய் ஜோதி பார்த்துவிட்டுத் திரும்பியதும், குண விசேஷங்களையும் பிரச்சினைகளை எதிர்கொள்வது போன்ற மனோவியல் சமாச்சாரங்களாக எழுத உத்தேசம்.

உதாரணமான தலைப்புகள்:

1.கவலையை விடுங்க ப்ரோ!

2. மன அழுத்தமாவது மாங்கொட்டையாவது?