இந்திய விண்வெளி (இஸ்ரோ) ஆய்வு மையத்தின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக் காலம், வரும் 14-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ ஆய்வு மையத்தின் புதிய தலைவராக – தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த விண்வெளி விஞ்ஞானி வி.நாராயணனை ஒன்றிய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது.
முன்னதாக – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன், திருவனந்தபுரம் அருகே வலியமலாவில் உள்ள எல்பிஎஸ்சி-யின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். தற்போது இஸ்ரோ ஆய்வு மையத்தின் புதிய தலைவராக வி.நாராயணன் வரும் 14-ம் தேதி பதவியேற்கிறார். இப்பதவியில் அவர் தொடர்ந்து 2 ஆண்டுகள் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரோவில் 1984-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த வி.நாராயணன், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்துள்ளார். தற்போது திருவனந்தபுரம் அருகே வலியமலாவில் இயங்கும் திரவ உந்துவியல் மையத்தில், கடந்த 6 ஆண்டுகளாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். மேலும், இஸ்ரோவில் பிஎஸ்எல்வி சி-57, சூரியன் ஆய்வுக்கான ஆதித்யா எல்-1, ஜிஎஸ்எல்வி எம்கே-3, சந்திரயான் 2, 3 உள்பட பல்வேறு திட்டங்களில் நாராயணன் முக்கிய பங்குவகித்துள்ளார்.
தற்போது இயக்குநர் வி.நாராயணன் தலைமையிலான எல்பிஎஸ்சி குழு, இஸ்ரோவின் பல்வேறு விண்கல திட்டங்களுக்கு 183 திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கியுள்ளது. மேலும் ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவராக, புதிய இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் அறியப்படுகிறார். விண்வெளி துறையில் தமிழ்நாட்டை சேர்ந்த வி.நாராயணனின் பணியைப் பாராட்டி, இஸ்ரோ உயரிய பொறுப்பான ‘Distinguished Scientist’ என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கெனவே தமிழ்வழி கல்வியில் படித்த வி.நாராயணன், ஐஐடி கோரக்பூரில் கிரையோஜெனிக் மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ளார். அங்கு எம்.டெக்-கில் முதல் ரேங்க் பெற்றதற்காக வி.நாராயணன் வெள்ளி பதக்கம் பெற்றிருக்கிறார். இந்திய விண்வெளி (ஏஎஸ்ஐ) சங்கத்தின் தங்கப் பதக்கம், என்டிஆர்எப் வழங்கும் தேசிய வடிவமைப்பு விருது உள்பட பல்வேறு விருதுகள் மற்றும் கவுரவங்களுடன் விளங்கிய தமிழ்நாட்டின் வி.நாராயணன் இஸ்ரோவின் புதிய தலைவராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். இதற்குமுன் தற்போதைய தலைவரான சோம்நாத்துக்கு முன்பாக தலைவராக பொறுப்பு வகித்த சிவனும் கன்னியாகுமரியை சேர்ந்தவர் எனக் குறிப்பிடத்தக்கது.
புதிய இஸ்ரோ தலைவர் நாராணயனுக்கு மனைவி கவிதாராஜ் மற்றும் மகள் அனுபமா, மகன் காலேஷ் ஆகியோர் உள்ளனர். இவரது உடன்பிறந்த சகோதரர்கள் கோபாலகிருஷ்ணன், பத்மநாபன், கிருஷ்ணமணி ஆகிய 3 பேரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களாக உள்ளனர்.
இதுகுறித்து நாராயணன் கூறுகையில், ‘‘என்னை இஸ்ரோ தலைவராக தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. நான் விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்து 41 ஆண்டுகளாகின்றன. எனக்கு இஸ்ரோ தலைவர், விண்வெளி ஆணைய தலைவர் மற்றும் விண்வெளி துறை செயலாளர் என்ற 3 பொறுப்புகள் உள்ளன. நான் இந்திய கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்ப திட்ட இயக்குநராக இருந்தபோதுதான், மார்க்-3 ராக்கெட் கிரையோஜெனிக் இன்ஜின் திட்டம் வெற்றியடைந்தது.
சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, தேசிய அளவில் அமைக்கப்பட்ட குழுவுக்கு நான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டேன். இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் அனைத்துமே சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு துறைகளின் முன்னேற்றம் போன்ற நாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் இருக்கும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே, எனது முதல் லட்சியமாகும்…’’ என்று தெரிவித்தார்.
பரந்து விரிந்துள்ள விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் ‘ஸ்பேஸ் டாக்கிங்’ எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக, ‘ஸ்பேட் எக்ஸ்’ திட்டத்தை இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்தி உள்ளது. இதற்காக விண்வெளியில் கடந்த மாதம் 30-ம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் மூலமாக ஸ்பேட் எக்ஸ்-ஏ, ஸ்பேட் எக்ஸ்-பி எனும் 2 விண்கலங்களை இஸ்ரோ அனுப்பியுள்ளது.
தற்போது அந்த 2 ஸ்பேட் எக்ஸ் விண்கலன்களும் திட்டமிடப்பட்ட புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. இந்த விண்கலன்களுடன் 24 அதிநவீன கருவிகள் மூலம் புவிவட்ட ஆய்வு தொகுப்பையும் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் இஸ்ரோவின் 14 ஆய்வு கருவிகள், தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் 10 ஆய்வு கருவிகளும் அடக்கம்.
பூமியிலிருந்து சுமார் 475 கிமீ தொலைவில், விண்வெளியில் 2 ஸ்பேட்எக்ஸ் விண்கலன்கள் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் ஆய்வு தொகுப்பு பூமியிலிருந்து சுமார் 350 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அன்று முதல் 2 ஸ்பேட்எக்ஸ் விண்கலங்களில் இருந்த 24 அதிநவீன ஆய்வுக் கருவிகளும் செயல்படத் துவங்கிவிட்டன என்று இஸ்ரோ ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஸ்பேட் எக்ஸ் விண்கலங்களில் இருந்த அதிநவீன ஆய்வு கருவிகளில், சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான கிராப்ஸ் (Crops) எனும் அதிநவீன கருவியில் இருந்த விதைகள் 4 நாட்களில் முளைக்கத் துவங்கிவிட்டன. தற்போது முளைத்த விதைகளில் இருந்து இலைகள் துளிர்விட்டு உள்ளன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. முன்னதாக, இக்கருவியில் மூடப்பட்ட ஒரு பெட்டிக்குள் இருந்த 8 காராமணி விதைகளை வெப்பக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க இஸ்ரோ திட்டமிட்டது. மேலும், இதில் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு செறிவுகள், சுற்றுப்புற ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றின் கண்காணிப்புடன் தாவர வளர்ச்சியை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, புவி வட்டப்பாதையில் ஆய்வுக் கருவிகள் நிலைநிறுத்தப்பட்ட 4 நாட்களில் காராமணி விதைகள் முளைத்து, அதைத் தொடர்ந்து முளைத்த விதைகளில் 2 நாட்களில் இலைகள் துளிர் விட்டுள்ளன. நுண் புவிஈர்ப்பு சூழலில் விதைகள் துளிர் விடவும், அந்த விதைகளில் இருந்து முளைத்த 2 இலைகள் ஒரு வாரத்தில் உயிர்ப்புடன் உள்ளதா என்பதை அறிய இஸ்ரோவின் சோதனை ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து இஸ்ரோ தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கிராப்ஸ் ஆய்வு கருவியில் காராமணி விதைகள் முதல் இலைகளை துளிர்விட்டுள்ளது. பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட புவி வட்ட ஆய்வு தொகுப்பில் இலைகள் தோன்றின. இதன்மூலம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஸ்பேட்எக்ஸ் திட்டத்தில் ஸ்பேட்எக்ஸ்-ஏ, ஸ்பேட்எக்ஸ்-பி விண்கலன்களை கடந்த 9-ம் தேதி ஒருங்கிணைத்து மின் ஆற்றலை பரிசோதிக்கப்படும் என்று இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனினும், செயற்கை கோள் இணைப்பு பரிசோதனையை மேற்கொள்ள, ஆய்வு மையத்தில் செய்யப்பட்ட சோதனைகளில் மேலும் சரிபார்ப்பு தேவைப்படுகிறது. இதனால் விண்கலன்களை ஒன்றிணைக்கும் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Leave a comment
Upload