தொடர்கள்
ஆன்மீகம்
சரஸ்வதி தேவியின் குரு ஹயகிரீவர்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Saraswati Devi's Guru Hayagrivar!!

"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு"
"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்"
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்பன ஔவையார் வாக்கு என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே.
உலகின் அழியாத ஒரு செல்வம் இருக்கிறது என்றால் அது கல்விச் செல்வமே. எவராலும் தட்டிப்பறிக்கவோ, திருடவோ முடியாதது கல்விச் செல்வமும், அதன் உதவியால் உண்டாகும் ஞானமுமே ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த கல்விக்கு அதிபதியாக விளங்குபவள் சரஸ்வதி தேவி.
சரஸ்வதி தேவிக்கே குருவானவர்தான் ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். தமிழில் இவர், ‘பரிமுகன்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும், இவர் ஹயமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். பரி மற்றும் ஹயம் என்ற சொற்களுக்குக் குதிரை என்று பொருள். ‘க்ரீவ’ என்றால் கழுத்துப் பகுதி. கழுத்துப் பகுதிக்கு மேலே குதிரை முகத்துடனும் மனித உடலுடன் கூடிய இவர் ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறார். அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.

Saraswati Devi's Guru Hayagrivar!!

புராணத்தில் ஹயக்ரீவர்:
ஒரு சமயம் மது, கைடபர் என்ற அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக் கொண்டு பாதாள லோகத்திற்குச் சென்று அதனை ஒளித்து வைத்தனர். காணாமல் போன வேதங்களை மீட்டுத்தரும்படி பிரம்மா மகாவிஷ்ணுவிடம் வேண்டிக் கொண்டார். அதனால் மகாவிஷ்ணு, குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, ஹயக்ரீவராக அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டார். அவரது உக்கிரகத்தைத் தணிக்க, தாயார் லட்சுமி அருகில் வர ஆனந்தமடைந்தார். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லட்சுமி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் சொரூபமான ஹயக்ரீவரை வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.
மகாபாரதம், தேவி பாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் மகிமையைக் கூறுகின்றன. மற்றும் ஹயக்ரீவ உபநிடதம், தலபுராணங்கள், மகான்களது வரலாறு, சிற்ப ஆகம நூல்கள் போன்றவையும் இவரது பெருமைகளைச் சொல்லியுள்ளது. அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

Saraswati Devi's Guru Hayagrivar!!

ஹயக்ரீவர் வழிபாடு:
செங்கல்பட்டிற்கு அருகில் அமைந்துள்ள செட்டிபுண்ணியம் கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை போன்ற இடங்களில் ஹயக்ரீவருக்குக் கோயில்கள் அமைந்துள்ளன. வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபடலாம்.
சென்னை நங்கநல்லூரிலும் ஹயக்ரீவருக்குக் கோயில் உள்ளது. தாடிக்கொம்பில் உள்ள சுந்தரராஜா பெருமாள் கோவிலில் சரஸ்வதி தேவியும் ஹயக்ரீவரும் அடுத்தடுத்த சந்நிதிகளில் அருள் பாலிக்கிறார்கள்.
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால் கல்வி அறிவு மேம்படும். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.

Saraswati Devi's Guru Hayagrivar!!

ஹயக்ரீவர் ஸ்லோகம்:
‘ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே’

பொருள்: ‘ஞானத்தில் சிறந்து விளங்குபவரும் தூய்மையான தேகத்தைக் கொண்டவரும் அனைத்து விதமான கல்வி கலைகளுக்கு ஆதாரமாக விளங்குபவருமான ஸ்ரீ ஹயக்ரீவரை வணங்குகிறேன்.

ஹயக்ரீவர் காயத்திரி:
'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'

Saraswati Devi's Guru Hayagrivar!!

சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவரை நாமும் வணங்கி, அவரது அருளினை பெறுவோம்!!