தொடர்கள்
அனுபவம்
மலையேறலாம் வாங்க ! ஜெர்மனி ஆல்ப்ஸ் 1 - ராம்

20241008185053163.jpeg

சென்ற வாரம் மலையேற்றம் பற்றி விகடகவியில் பிரஸ்தாபித்திருந்தோம்.

அப்படியே ஆல்ப்ஸ் மலை அனுபவத்தை எழுதுவதாக சொல்லியிருந்தேன்.

வேலை வாய்ப்பு கிடைத்து ஐரோப்பாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களை விடுங்கள். அவர்களுக்கு இந்த கட்டுரை மிக சாதாரணமான ஒன்றாக இருக்கக் கூடும்.

சின்ன வயதில் பள்ளியில் சீனப் பெருஞ்சுவர் பற்றி படிக்கும் போதும், இமயமலை பற்றி படிக்கும் போது, அமேசான் காடு மற்றும் சுவிசர்லாந்து ஆல்ப்ஸ் மலை பற்றி படிக்கும் போதும் ஒரு கனவு வரும். வர வேண்டும்.

வந்தால் தான் உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற உத்வேகம் வரும். சுற்றாமல் இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது அது வேறு விஷயம்.

சமீபத்தில் ஜெர்மனி மற்றும் சுவிஸர்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருக்கும் நண்பன் கார்த்தியை பார்ப்பது தான் பிரயாணத்தின் முக்கிய நோக்கம். ஆல்ப்ஸ் மலை மராத்தான் எல்லாம் போனஸ்.

நீட்டி முழக்காமல் ஜெர்மனியை கொஞ்சம் விவரித்தால் கவிதைக்கு உயிர் கொடுத்தது போல ஒரு நாடு. ஆனால் கொஞ்சம் ஐரோப்பாவிற்கே உரிய சோம்பேறி நாடு.

ஹாங்காங்கில் சுறுசுறுப்பாக இயங்கும் மக்களையும் கடைகளையும் பார்த்து விட்டு ஜெர்மனி ஸ்லோமோஷனில் நகர்கிறதோ என்று ஒரு சந்தேகம் வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மூடியிருக்கும் கடைகள். என்னதாண்டா பன்ணுவீங்க என்று இரைந்து கேட்டால், ஏன் அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இல்லையா என்று பதில் வருகிறது.

எல்லோரும் வாழ்க்கையை வாழ்கிறார்கள். தத்தம் வேகத்தில். யாருடனும் போட்டி போட்டு ஓடாமல்.

முதலில் ஒரு அழகான கிராமத்திற்கு அழைத்துச் சென்றான் கார்த்தி, வேண்டாம் சென்றாரே இருக்கட்டும். கட்டுரையில் கார்த்திக்கு 'ர்' போடுவோம்.

20241008185147866.jpeg

ரோத்தன்பர்க் என்ற ஊர். அந்த ஊரைச் சுற்றிலும் ஒரு மதில் சுவர் இருக்கிறது. நம்மூரில் இல்லாத சுவரா அகழியா என்று கேட்கலாம். ஆனால் அத்தனை சுத்தமாகவும், நீளமாகவும் இருக்கிறது. சுற்றி சுற்றி வரும் அந்த மதில் சுவர் ஊரைச் சுற்றிலும் இருக்கிறது. அதனுள்ளே தான் அந்த அழகிய கிராமம்.

உள்ளே ஐரோப்பாவிற்கே உரிய பிரத்யேக வாசனையுள்ள பேக்கரியில் சுடச் சுட பன்னு பிரெட் பட்சணத்தோடு காபி குடிக்கையில் பூலோக சொர்க்கம்.

20241008185256184.jpeg

ஒவ்வொரு வீடும் அத்தனை அழகு. சாம்பிளுக்கு கீழே பார்க்கலாம்.

20241008185340592.jpeg

20241008185439122.jpeg

அப்படியே அக்டோபர் ஃபெஸ்ட் போலாம் தலைவரே என்றார் கார்த்தி.

அது வயிறு முட்ட முட்ட பீர் குடிக்கும் திருவிழா.

அக்டோபர் ஃபெஸ்டை நவம்பரில் வந்து எழுதறான் என்று முணுமுணுப்பது தெரிகிறது. சாராயம் கலக்காத பீர் ஜெர்மனி முழுவதும் கிடைக்கிறது.

அது ஒரு ஜில் அனுபவம். ஏற்கனவே குளிரும் ஊரில் அந்த ஐஸ் கோல்ட் பீர் (சத்தியமா அல்கஹால் ஃப்ரை. அப்படின்னா அல்கஹால் ஃப்ரீ) ஒரு சுகானுபவம்.

அக்டோபர் ஃபெஸ்ட் முடிந்ததும் அடுத்த இடம் பாட்டன்ஸ்டீன்.

20241008190049365.jpeg

அது ஜெர்மனியின் சுவிசர்லாந்தாம். அந்த ஊரின் அழகையெல்லாம் எழுத்தில் கொண்டு வர இயலாது.

புகைப்படங்கள் இங்கே....

20241008190245136.jpeg

பின்னர் பார்டன்கிர்சன் (கார்த்தி அடிக்க வருவார்) இந்த இடத்திற்கு சென்றதும் அங்கே ஒரு கேபிள் கார் எடுத்துக் கொண்டு மலையுச்சிக்கு சென்றோம்.

20241008190513295.jpeg

அங்கே மலையேற்றத்திற்க்கு அருமையான டிரெயில் இருக்கிறது. நாங்கள் மலையிறங்கினோம்.

20241008190636153.jpeg

ஜார்ஜ் என்று சொல்லப்படும் இரு மலைகளுக்கு இடையே ஆக்ரோஷமாக ஓடும் ஒரு ஆறு அல்லது கால்வாய், அருவி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அத்தனை வீறு கொண்டு சுழன்று சுழன்று ஓடும் நீரைப் பார்த்தாலே நமக்குள் தொற்றிக் கொள்ளும் உற்சாகம்.

20241012195547321.jpeg

அதை சுற்றிப் பார்க்க 10 யூரோ வாங்குகிறார்கள்.

பின்னர் தான் ஜுக்ஸ்பிட்சே என்ற இடம்.

அங்கே தான் ஜெர்மனியின் உயரமான மலை. ஜெர்மனி ஆல்ப்ஸ்.

இன்னொரு முக்கியமான நகரம் வரலாற்றுப் பிரியர்களுக்கு ஹிட்லர் போர்ப் பிரகடனம் செய்த நூரம்பர்க் நகரத்தில் டாகுமெண்ட் செண்டர் என்று வைத்திருக்கிறார்கள்.

அதை ஒரு விசை பார்த்து விட்டு.....

ஜெர்மனி ஆல்ப்ஸ் மற்றும் சுவிசர்லாந்து ஆல்ப்ஸ் அத்தோடு மூன்று நாடு மராத்தான் அனுபவம் அடுத்த வாரம்.....