தொடர்கள்
கதை
சாமிக்கு சளி பிடிக்க போவுது ?  – பா.அய்யாசாமி

20241008193338897.jpeg

யோவ் ஐயரே, ஒரு நாள் உன்னை உதைக்கிற உதையிலே இந்த கோயிலை விட்டு ஓடவைக்கலைன்னா பாரு. எதுக்கும் பிரயோஜனமே இல்லாத கல்லுக்கு இத்தனைபாலையும், தேனையும் ஊத்தி வீணாக்கிறீயே, கொஞ்சமாவது அறிவு இருந்தால்இதெல்லாம் நீ செய்வியா ? இல்லை மக்களைத்தான் செய்யச் சொல்வியா ? என்றவர் இந்த பகுதியில் வசிக்கும் முத்து டாக்ஸி ஓட்டுநர் கம் ஓனர்.

பார்த்து ஊத்துய்யா, சளி கிளி பிடித்துவிடப்போகுது சாமிக்கு ? என பேசிக்கொண்டேபோனார் ஆலய பூசைக்கு வந்த ஆலய குருக்கள் நாகநாதனைப்பார்த்து

உதைடா அம்பி. அது மட்டும்தான் பாக்கி இருக்கு. இந்த பிள்ளையாருக்கு பூசை பண்றதினாலே அடிதான் கிடைக்கும் என்று பக்தர்களும் புரிஞ்சுண்டு இங்கே வரமாட்டா.உன் பிராப்ளம் சால்வாயிடும். நான் பாட்டுக்கு பூசை செஞ்சுண்டிருப்பேன்.

நோக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது என சொல்லனும் போல இருந்தது.

20241008193442595.jpeg


கடைசியா சாமிக்கு சளி பிடித்திடப்போகுது என்கிறானே, அப்போ மனத்தில் திடமானநம்பிக்கை அவனுக்குள் இருக்குமோ, நம்மைதான் அவனுக்குப் பிடிக்கலையா ? எனும்கேள்வி அவருள் எழுந்தது. அவனின் புரிதல் எப்படியோ, நாம ஏன் விளக்கம் சொல்லிண்டுஎன சிரித்துக்கொண்டே வந்த வேலையைப் பார்த்தார் நாகநாதன்.

தினம் ஐந்து கிலோ மீட்டர் வண்டியை எடுத்துண்டு, பிரசாதம்போட்டு இந்த கோயில்உட்பட நான்கு கோயில் பூசை எல்லாம் முடித்து வீடு திரும்பும்போது மணி ஒன்றாகி பாதிநாள் போயிடும். அதன் பின்தான் வீட்டு வேலைகள், மறுநாள் பூசை சாமன்கள்வாங்குவதற்கு என அலைவதிலே மீதி நாள் போயிடும் இதற்கு அரசு தரும் சம்பளம் மாதம்இரண்டாயிரம் ரூபாய். அதுவும் ஆறு மாதமாக கைக்கு வரலை, எல்லா கோயிலிலும்தட்டிலே சில்லறை விழறதா என்ன ? சில புகழ் பெற்ற கோயிலில்தான் தட்டிலே விழும், இங்கே சில சமயத்தில் கைக்காசை போட்டுத்தான் பூசையே நடக்கும், இந்தபிள்ளையாருக்கு பண்ணின கைங்கர்யத்தின் பலனாக மகன் படித்து விட்டு நல்லவேலையில் இருக்கின்றான் இவருக்கும் பிள்ளையாருக்கும் வண்டி ஓடறது.

ஆலயத்தில் மீது ஆர்வமில்லாதவர்கள் அறநிலையத்துறையிலே இருந்தால் இப்படிஅல்லாடவேண்டியது, நான் மட்டுமல்ல, சாமியும்தான். ஒன்று சாமி இருக்குனு நம்பிஎல்லாம் முறைபடிச்செய்யனும், நம்பிக்கை இல்லையெனில் மூடிவிட வேண்டியதுதானேஎதற்கு இந்த துறை? இதற்கெல்லாம் ஒரு விடிவு வாராதா ? என தனக்குள் புலம்பியபடியேபூசையை அசிரத்தையாக செய்து முடித்தார்.
மகன் அனுப்பிய பணம் வங்கியில் வந்து உள்ளதாக செய்தி வரவே அதை எடுத்து அவன்பெயரிலேயே வைப்பு நிதியாக போடுவதற்காக வந்திருந்தார் நாகநாதன். இந்தபாரமெல்லாம் எனக்கு ரொப்பத் தெரியாது நீங்களே எழுதுங்கோ, நான் கையெழுத்துப்போடுகிறேன் என்றார் அலுவலரிடம்.
மேலாளர் அறையிலே ஏதோ வாக்குவாதம் செய்துவிட்டு வெளியே வந்தார் ஆட்டோ ஓனர் முத்து.

என்ன முத்து இங்கே என்ற விசாரித்தார் நாகநாதன்
அய்யரே, நகை அடகிலே மூழ்குதுன்றாங்கோ. இப்பவே மீட்கனும் தவறினால் ஏலத்திற்குவந்திடும் என கட்டாயப் படுத்துகிறார்.
கால அவகாசம் கேட்டதற்கு மறுக்கிறாரு என விவரித்தவர், நானே, தவணை வாங்கிவண்டிக்கு காலாந்திர வரியெல்லாம் கட்டி, பிட்நெஸ் காட்டனும் அதற்கு என்ன செய்யலாம்என ஒன்றும் புரியலை என புலம்பினான் முத்து.

தைரியமாக இரு எல்லாம் நல்லதே நடக்கும் என்றார்.

நீ வேறே கடுப்பேத்தாதேயா, உன் புள்ளையார்கிட்டே சொல்லி ஏதாச்சம் செய்யச்சொல்லுய்யா என்றார் நக்கலாக..
உனக்கு எவ்வளவு தொகை இருந்தால் இந்த பிரச்சனை தீரும் ?
ஐம்பதாயிரம் ரூபாயவது வேண்டும் என்றார் முத்து.
இதுவும் பிள்ளையாரின் பணம்தான், தற்போதைக்கு புரட்டிக்கொள் என்றுதன்னிடமிருந்ததை அவனிடம் கொடுத்துவிட்டார்.

ஏன்யா ? உன்னை அத்தனைத் திட்டினேனே, அதையெல்லாம் மனசிலே வச்சுக்காமல்இப்படி உதவி பண்ண எப்படியா முடியுது உன்னாலே என்று கேடட்தற்கு, யாருக்கோ பயன்பட்டால்தான் பணம், இல்லைன்னா வெறும் காகிதம் இது என்றார்,

நீங்கள் கேட்ட ஒரு மாதம் அவகாசம் நான் தருகிறேன், ஏலத்திற்கும் வராமல் நான்பார்த்துக்கொள்கிறேன் என முத்துவிற்குத் தைரியம் கொடுத்தார் அங்கு வந்த மேலாளர்.

என்ன நடக்குது என்று ஒன்றும் புரியவில்லை முத்துவிற்கு.
ஆனால் நாகநாத குருக்களுக்குப் புரிந்து விட்டது. இறைவனின் பார்வை முத்துவி பக்கம்திரும்பிவிட்டது, இறைவன் பொறுமையானவன், நிந்திப்பவனையும் சேர்த்தே சிந்திப்பவன்என்றவர், சாமிக்கு சளி பிடித்துவிடப் போகுது என்றாயே, அது நீ கிண்டலாகத்தான்சொன்னாய், ஆனால் அதுவும் பக்திதான். அதன் விளைவுகள்தான் உனக்கு நடக்கும் இந்தநிகழ்வுகள் இனி உனக்கு ஒரு கெடுதலுமில்லை போ, என விளக்கம் கொடுத்தார்நாகநாதன், முத்துவிடம் பேச்சே எழவில்லை.