தொடர்கள்
கவிதை
கிடைத்தது புதிய தரிசனம்!- மகா


சமீபத்தில் நடந்த அநுபவம் இது. அதுவும் ஒரு கவிதைப் புத்தகத்தால்...
உள்ளுக்குள் பரிதவித்து, சொல்லுக்குள் அடக்க முடியாத நெகிழ் உணர்வு, எப்போதாவது, எவராவது எழுதிய அரிதான எழுத்துகளை வாசிக்கையில் அபூர்வமாக நிகழும்.
‘அனிச்சம்போலும் இரவுகள் ' புத்தகத்தின் பக்கங்களெங்கும் அபூர்வங்கள்!
கவிஞர் பித்தன் வெங்கட்ராஜ் எனக்கு அறிமுகம் கிடையாது.

20241008214412779.jpeg

ஆனால், சமீபத்தில் பிரசுரமான அவரது இந்தப் புதிய புத்தகம் - அதில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள், அவரை என் நெருங்கிய சினேகிதனாய் உணரவைக்கிறது.
என் அறையின் ஜன்னலில் அடிக்கடி வந்தமரும் சிறு பறவையாய்த் தன் கவிதை வழி முகம் காட்டுகிறார் …பித்தன் வெங்கட்ராஜ்!
‘எது கடித்தாலும்
சுண்ணாம்பு தடவி ஆற்றிக்கொள்ளும்
கஞ்சனைப் போல
என் கவிதைகளைத் தடவி
ஆற்றிக்கொள்கிறேன் நான்’

-எனும் முதல் கவிதையில் அவர் பிரகடனம் செய்யும் அவரது கவிதைகளின் மகத்துவம், வாசிக்க வாசிக்க நமக்கும் புரிபடுகிறது.
‘வெகு நேரமாய்
நீலமாய் மாறாதிருந்த
இரு சரிகள்
ஏதோ சரியில்லை என்றன
வெகு நேரம் கழித்து அவை
நீலம் பூசிக்கொண்டபோது
எல்லாம் சரியாயிருந்தன.’

- மனம் எப்படியெல்லாம் நுட்பமாய்க் கற்பிதம் செய்துகொள்கிறது

. நீலம் பூசாத சரிகள் பார்த்து ஒருவிதமாகவும், நீலம் பூசிக்கொண்ட சரிகள் பார்த்து ஒருவிதமாகவும் என விதம்விதமாய் நிறம் மாறும் மனத்தை இனம் காணுகிறது கவிதை.

‘இரவு விடியுமென்று நினைத்தாலும்
இரவாய்த்தான் விடிகின்றன
சில பொழுதுகள்’

-மொழிக்கு எத்தனை ஆற்றல்? எப்படி வீரியமாய் வெளிப்படுகிறது பாருங்கள்…! நினைப்புக்கு மாறான நிகழ்வை இதைவிட அழுத்தமாய் வேறு எப்படிச் சொல்லிவிட முடியும்?
இந்தக் கவிதைத் தொகுப்பெங்கும் அடர்ந்துகிடக்கிற ஆச்சரியங்களை நீங்களும் ஏதோ ஓர் இரவில் வாசிக்க நேரும். அது உங்களை ஏதோ செய்யும்.
‘தமிழ்ப் பல்லவி’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் 'அனிச்சம்போலும் இரவுகள்' இதுவரை நுகர்ந்திடாத புதிய பூவாசம்.
விகடகவி மின்னிதழில் 'தமிழுக்கு ஒரு முத்தம்' கட்டுரைத் தொடர் மூலம் உலக வாசகர்களுக்கு, சங்ககாலத் தமிழின் அருமையை நவீனமாகச் சொன்ன கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், இலக்கிய ஆளுமை பித்தன் வெங்கட்ராஜ் எழுதி, சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் வெளியீட்டு நிகழ்வுக்குத் தயாராகியுள்ளது.
என் புத்தக அலமாரியில் நுழைந்து, புதிய தரிசனத்திற்கான வாசலைத் திறந்த அவரது கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்.