தொடர்கள்
சினிமா
மரியாதை மறந்த முதல்வர் - விகடகவியார்

20241007070004177.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "அவன் இவன் என்று ஒருமையில் அழைத்து இருக்கிறார் முதல்வர் "என்று ஆரம்பித்தார்.

"அவர் யாரை அப்படி ஒருமையில் அழைத்தார் கட்சிக்காரரையா" என்று நாம் கேட்டோம். "கட்சிக்காரரை எல்லாம் இல்லை தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜயைதான் கொளத்தூரில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் வர்றவன் எல்லாம் புதுசா கட்சி ஆரம்பிக்கிறவன் எல்லாம் திமுகவை அழிக்கணும் ஒழிக்கணும் என்ற போக்கில் இருக்காங்க என்று பேசியிருக்கிறார். அவர் விஜய் பெயரை குறிப்பிட விட்டாலும் விஜயைத் தான் 'ன்' விகுதி போட்டு விமர்சித்திருக்கிறார் முதல்வர் "என்றார் விகடகவியார்.

"ஆரம்பத்தில் திமுக விஜயை கண்டு கொள்ள வேண்டாம் என்றுதான் நினைத்தது. ஆனால், 2026 தேர்தலில் விஜய் தான் தங்களுக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று கருதுகிறது. இப்போதே விஜய்யை விளாசித்தள்ள ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டது. அதனால் தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரத்தில் பேசும் போது டெல்லியில் இருந்து வந்தாலும் சரி லோக்கலில் இருந்து வந்தாலும் சரி 2026 தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்று அவரும் மறைமுகமாக விஜயை விமர்சித்திருக்கிறார்" என்றார் விகடகவியார்.

"சரி விஜய் இதை எப்படி பார்க்கிறார்" என்று நாம் கேட்டோம்.

" திமுக தன்னை இப்படி விமர்சனம் செய்வதை விஜய் விரும்புகிறார் இதன் மூலம் திமுக நம்மைப் பார்த்து பயப்படுகிறது என்று மற்ற அரசியல் கட்சிகளுக்கு தெரியும். அப்போதுதான் நம்மோடு அவர்கள் கூட்டணி வைப்பார்கள் என்பது அவர் கணக்கு" என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

"சரி திருமாவளவன் கணக்கு என்ன அதை சொல்லுங்கள் "என்றோம். "திரும்பத் திரும்ப நான் திமுக கூட்டணியில் தான் இருப்பேன். இனிமேல் அது பற்றி கேட்காதீர்கள் என்று என்று திரும்பத் திரும்ப சொல்கிறார். ஆனால் திமுக அவரை நம்பவில்லை. ஆதவ் அர்ஜுனா திமுக பற்றி விஜய் ஆதரவு கருத்து இது பற்றியெல்லாம் திருமாவளவன் கண்டிக்கவில்லை என்பதை கவனித்து வருகிறது திமுக. குறிப்பாக டிசம்பர் 6 அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்கிறார் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு ஆதவ் அர்ஜுனா தான். உண்மையில் இந்த விழா ஏப்ரல் 14-ஆம் தேதி நடக்க இருந்தது. புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் திருமாவளவன் பெற்றுக் கொள்வார் என்பது தான் பழைய நிகழ்ச்சி நிரல். ஆனால் ஏதோ காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சி தள்ளிப்போனது. இப்போது விஜய் புத்தகத்தை வெளியிடப் போகிறார் திருமாவளவன் புத்தகத்தை அவரிடம் வாங்கிக் கொள்ளப் போகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன் என்று உறுதிப்பட தெரிவித்திருக்கிறார் திருமாவளவன். இன்னொரு அரசியல் தலைவருடன் மேடையை பகிர்ந்து கொள்வதால் கூட்டணி மாறும் என்பதெல்லாம் கற்பனை என்றும் விளக்கம் தந்திருக்கிறார் திருமாவளவன். ஆனால் இப்போதைக்கு அதையெல்லாம் நம்பர் தயாராக இல்லை திமுக இதுதான் விஷயம் " என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.