திருமழிசை ஆழ்வார் பரம்பரையில் இருந்து வந்தவன் என்று சொல்லிக் கொள்வார் ஸ்தலசயன அய்யங்கார். மெலிந்த தேகமும் சற்றே குள்ளமுமான அவருக்கு அங்கவஸ்திரமும் பஞ்சகச்ச வேஷ்டியும்தான் பிரதான உடை. ஐம்பது அகவையை தாண்டியவர்.
வளசை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள புள்ளையார் கோவிலுக்கும், மதுரவாயல் வணிகவளாக புள்ளையார் கோவிலுக்கும் தினம் பூஜை செய்து அதில் கிடைக்கும் வரும்படியில் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்.காண்டவ பிரஸ்தமாக இருந்த இடங்கள் இந்திர பிரஸ்தமாக மாறும் போது அக்ரஹாரமும் அழிந்து போகிறது. மாமிச விரும்பிகளுடன் சகிப்புத் தன்மையோடு வாசம் செய்கிறார்.அரசும் பகல் திருடர்களைப் போல் இவர்களின் சங்கிலி தொடர்பை அறுக்க விரும்புகிறது.
தனது இல்லாள் வேதவள்ளிக்கு ஒரு பாதுகை வாங்கும் பொருட்டு பஜாரில் உள்ள கடைகளெல்லாம் விசாரித்ததில் தள்ளுபடி விலையில் கிடைத்த பாதுகையை வாங்கிக் கொண்டு வெளியில் வந்த போது பணம் படைத்தவர்கள் கழட்டி விட்டுச் சென்ற சற்றே புதிய பாதுகையே நன்றாக இருக்கிறதே என இல்லாள் வேதவள்ளி சொன்ன போது 'அவ்வாள் போட்ட செருப்பையெல்லாம் நாம் போடலாமா' என மனைவியை கடிந்து கொண்டார்.
வறுமையிலும் வாய்மை தவறாதவர். வேதம் படிப்பதும் பூஜை புனஸ்காரம் செய்வதும் சதா நாராயணனை தொழுவதும் அன்றி வேறொன்றும் அறியாதவர்.
நன்றாக வாழ்ந்து கெட்ட ஒருவரின் பூஜை அறையை சுத்தம் செய்ததில் குப்பை தொட்டி வந்து விழுந்திருந்தது கிருஷ்ணர் படம். அது ஒரு பிரபல ஓவியரின் கைவண்ணத்தில் உருவானது. அய்யங்கார்தான் அதை எடுத்து துடைத்து அருகில் உள்ள வாவராச்சி மரத்தில் ஆணி அடித்து தொங்கவிட்டார். அன்று முதல் துப்புரவு பணியாளர்கள் அதற்கு பூ வைத்து வழிபட்டு வந்தனர்.
மதுரவாயல் தரைப் பாலத்தை கடந்து மேடு ஏறும் போது வலப் பக்கத்தில் கப்பரஸ்தான் தோட்டம் உள்ளது. அது இஸ்லாமியர்களின் கல்லறை. தனது மிதி வண்டியில் இருந்து இறங்கி குனிந்து அந்த பர்சை எடுத்தார். யாரோ தவறவிட்டது.அதில் கணேசன் என்ற பெயரும் பணமும் இருந்தது. மஞ்சனத்தி மரத்தின் நிழலில் அமர்ந்து பணத்தை விட்டவரின் வருகையை பதட்ட ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்.
நீண்ட காத்திருப்புக்கு பின் மனைவியின் அழைப்போசை அலைபேசியில் ஒலித்தது.திடீர் உடல் நலக் குறைவு போல.கேசவர்த்தினி எதிரே இருக்கிற லலிதா மருத்துவமனையில் இருப்பதாகவும் உடனே அங்கு வந்துவிட வேண்டியும், தனது சிவப்புக் கல் மூக்குத்தியைதான் அடகு வைத்து மருத்துவ செலவுக்கு வைத்திருப்பதாகவும் கூறினாள்.
அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே பர்சு விழுந்த இடத்தில் பைக்குடன் வந்த நபர் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அய்யங்கார் எழுந்து போய் "என்ன தேடுறேள்?"-என்று கேட்டு அவர் முகத்தை பார்த்தார்.கவலையும் பதட்டமும் முகத்தில் அப்பி இருந்தது. "தப்பா எடுக்காதீங்கோ,உங்க பேரென்ன"-என அய்யங்கார் கேட்டார. "கணேசன்"-என்றதும் தன் மடியில் இருந்த பர்சை எடுத்து அவரிடம் தந்து "எல்லாம் சரியாக இருக்கிறதான்னு பாருங்கோ "-என்றார் அய்யங்கார். பர்சை வாங்கியவர் முகம் மலர்ந்தது. அதிலிருந்து ஒரூ ஐநூறு ரூபாயை எடுத்து அய்யங்காரிடம் தந்து ரொம்ப நன்றி சொன்னார்.
தன் மிதிவண்டியை மிதித்துக் கொண்டே-"நாராயணா வேண்டாம். கூலியா, சன்மானமா.நேக்கு வேண்டாம்"-என சொல்லிவிட்டு விரைந்தார்.
கணேசனுக்கு அய்யங்கார் வாமன அவதாரம் போல் தெரிந்தது.
Leave a comment
Upload