தொடர்கள்
அனுபவம்
நடந்தது - ஜாசன்

மாலை நேரத்தில் நான் என் வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலுக்கு செல்வது வழக்கம். அப்படி கோயிலுக்கு போகும்போது என் மனைவி ஏதாவது வாங்கி வர சொல்லி ஒரு சிறு பட்டியல் தருவது வழக்கம். அந்த வேலையையும் முடிப்பேன். அப்படித்தான் இரண்டு தினங்களுக்கு முன்பு கோவிலுக்கு புறப்படும் போது சில பொருட்களை வாங்கி வருமாறு என் மனைவி சொல்ல அதற்காக 500 ரூபாயும் கோயிலில் தட்டில் போட பத்து ரூபாயும் எடுத்துக்கொண்டு கோயிலுக்கு கிளம்பினேன்.

கோயிலில் பெருமாளை தரிசித்து விட்டு அம்மனை சந்தித்து பிரார்த்தனை செய்யும்போது எப்போதும் போல தட்டில் பத்து ரூபாய் போட்டு விட்டு வந்தேன். வெளியில் வந்து எனது காலணியை மாட்டிக் கொள்ளும் போது என் செல்பேசி ஒலிக்க என் மனைவி ஏதாவது கீரை இருந்தால் வாங்கி வாருங்கள் நாம் கீரை சாப்பிட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று சொன்னார்.

நான் கடைக்கு செல்வதற்கு புறப்பட பாக்கெட்டில் கைவிட்ட போது தான் தட்டில் போட வேண்டிய பத்து ரூபாய் நோட்டு என் கையில் தட்டு பட்டது. அடடா இன்று அர்ச்சனை தட்டில் பணம் போட வில்லையோ என்று யோசித்த போது பத்து ரூபாய் தட்டில் போட்டது ஞாபகம். அப்போது இந்த பணம் ஏது என்று மீண்டும் பாக்கெட்டில் கைவிட்ட போது ஐநூறு ரூபாய் நோட்டை காணோம். பத்து ரூபாய்க்கு பதில் தட்டில் 500 ரூபாய் நோட்டை போட்டுவிட்டு வந்திருப்பது தெரிந்தது. அர்ச்சகரிடம் விஷயத்தை சொல்லி அந்தப் பணத்தைக் கேட்க எனக்கு சங்கடமாக இருந்தது.

அது சரி இல்லை என்றும் முடிவு செய்தேன். கடைக்காரர் தெரிந்தவர் தான் நாளை தருகிறேன் என்று சொன்னால் பொருட்களை தருவார். கடைக்காரர் இல்லாமல் வேலை செய்யும் ஆட்கள் இருந்தால் அவர்களிடம் கடன் சொல்லவும் தயக்கமாக இருந்தது.

அதேபோல் என் மனைவி வாங்கி வர சொன்ன கீரையும் வாங்குவதற்கு வாய்ப்பில்லை கீரை விலை 25 ரூபாய் என் கையில் இருப்பது பத்து ரூபாய் கீரைகாரரிடம் கடன் சொல்ல முடியாது .

இப்படி யோசிச்சபடியே நான் நடந்து வந்திருக்கும்போது அந்த அர்ச்சகர் ஓடோடி வந்து அண்ணா நீங்கள் எதற்கோ வைத்திருந்த பணத்தை தட்டில் போட்டு விட்டீர்கள் என்று சிரித்த படி அந்த 500 ரூபாயை நீட்ட நான் உண்மையில் திடுக்கிட்டேன்.

தட்டில் போட்ட அந்த பணத்தை திரும்ப வாங்குவதா வேண்டாமா என்ற தயக்கத்தில் பரவால்ல இருக்கட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது அர்ச்சகர் அண்ணா இந்த பணம் எனக்கானது அல்ல உங்களுடையது வைத்துக் கொள்ளுங்கள் என்று பாக்கெட்டில் வைத்துவிட்டு விடு விடு என கோவிலுக்கு போய் விட்டார்.

உடனே நான் மீண்டும் கோயிலுக்கு போய் அந்த பத்து ரூபாயை அவர் தட்டில் போட்டு இந்தப் பணம் உங்களுக்கானது தான் என்று சொன்னேன். கூடவே அம்மன் என்னை சோதித்துப் பார்த்திருக்கிறார் என்று நான் சொன்ன போது. என்னையும் சோதித்துப் பார்த்தாள் அம்மன். அம்மன் தான் இந்த பணம் உன்னுடையது அல்ல என்று அசரீரி மாதிரி சொன்னாள்.

அதனால் தான் ஓடி வந்து கொடுத்தேன் என்று அந்த இளைஞர் அர்ச்சகர் சொன்னார். வாழ்க்கையில் நமது அன்றாட நிகழ்வுகள் எல்லாமே நமக்கு எதையோ சொல்லிக் கொடுக்கிறது என்று யோசித்தபடியே நான் கோயிலை விட்டு வெளியே வந்தேன்