கடந்த நாலைந்து நாட்களாகவே கோமதி, தன் மகள் கோமளாவின் போக்கை கவனித்து வருகிறாள். ஏதோ மாறுதல் தெரிந்தது. சரியான நேரத்துக்கு வீடு வந்து சேருவதில்லை. அன்று கோமளா உள்ளே நுழைந்ததும் கோமதி, அவள் வந்ததை கவனிக்காதது போல் அடுப்படியில் புகுந்து கொண்டு கோமளாவை அவள் அறியாமல் நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.
கோமளா சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தாய் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, நேராக வாஷ்பேசினுக்குச் சென்று வாந்தி எடுத்தாள். கோமதிக்கு வயிற்றைக் கலக்கியது. பகீரென்றது. என்ன இருந்தாலும் பெற்ற வயிரல்லவா...? சாதுவாகத் தன் ரூமுக்குள் நுழைந்த கோமளாவைப் பார்த்து கத்தினாள்.
“ கோமளா.... இங்கே வாடி....” தயங்கியபடியே தாயைப் பார்த்தாள் கோமளா.
“ நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.... எத்தனை நாள் என் கிட்ட மூடி மறைக்க முடியும்....? ஏண்டி என்னவோ போல இருக்கே.... சொல்லப்போறியா இல்லியா...? “
கோமளா அரண்டு விட்டாள். அவள் பலவீனத்தால் நடந்ததை எண்ணி கண்ணீர் வடித்தாள். அது அவள் பலமும் கூட. மனித பலமும் பலவீனமும் உறுத்தல்களும் சமாதானங்களும் தானே.... உறுத்தல் பலம் என்றால் சமாதானம் பலவீனம் . சமாதானமே பலமென்றால்... உறுத்தல்....? ( புரியாவிட்டால் விட்டு விடுங்கள்...)
“ நான் செஞ்சது தப்பும்மா... என்னை மன்னிச்சுடும்மா....” மகளின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள் கோமதி.
“ அப்பா வேலை விஷயமா ஒரு மாசமா வெளியூர் போயிருக்கார்.... கேள்வி கேட்க ஆளில்லைங்கற தைரியந்தானே... இப்பவே அப்பாவுக்கு போன் பண்ணறேன்....”
“ வேண்டாம்மா... என்னவோ தப்பு நடந்துடுச்சு... நான் வேண்டான்னு தான் சொன்னேன்... இந்த ஆனந்த் தான்....”
கோமளா கண்ணீரினூடே மென்று விழுங்கினாள்.....
“ ஓஹோ... அந்த கோடி வீட்டு பையன் ஆனந்த் தானே... ? இப்பவே போய் அவனை என்ன பண்ணறேன் பாரு.... ஆமா... நீ வாந்தி எடுத்ததுக்கும் ஆனந்துக்கும் என்ன சம்பந்தம்....? “
“ அவன் தாம்மா ஸ்கூல் விட்டதும் நாலு நாளா, ' எங்கம்மா தெனமும் எனக்கு பத்து ரூபா பாக்கெட் மணி தருவாங்க.... வா .. நான் ஒனக்கு ஜவ்வு மிட்டாயும் கொடுக்காப் புளியும் வாங்கித் தரேன் 'னு வாங்கிக்குடுத்து சாப்பிடச் சொன்னாம்மா.... நான் வேண்டான்னுதான் சொன்னேன்... எல்லாரும் சாப்பிடறதைப் பார்த்து ஆசையை அடக்க முடியலை.... ஸ்கூல் வாசல்ல விக்கற ஈ மொய்க்கற பண்டங்களையெல்லாம் தின்னக் கூடாது... வியாதி வரும்னு நீ சொல்லுவே.... எனக்கு கைல துட்டும் தர மாட்டே.... இனிமே இப்படி திங்கமாட்டேம்மா.... காட் ப்ராமிஸ்....”
“ சரி... சரி... டாக்டர்கிட்ட போகலாம் வா....ஃபுட் பாய்ஸனாக இருக்குமோ... என்ன எழவோ.... “ இரண்டாவது படிக்கும் தன் மகள் கோமளாவை தர தரவென்று இழுத்துக் கொண்டு டாக்டரிடம் ஓடினாள் கோமதி....!
ஓ... கோமளா என்ன செய்து விட்டாள்....
Leave a comment
Upload