"லப்பர் பந்து"
கணவன்அடிக்கடி தன் வேலையை எல்லாம் விட்டு விட்டு நைசாக குடிக்கவோ, சீட்டாடவோ போய் விட்டால் மனைவி சும்மா இருப்பாளா ?.
முதலில் கண்டிப்பாள். அப்புறம் கணவனை பகிஷ்கரித்து, ,குழந்தையுடன் தன் தாய் வீடு சென்றுவிடுவாள்.. இல்லையா? இது தானே சாதாரணமாக தொன்று தொட்டு நமக்கும் , நம் சினிமாவுக்கும் பழக்கம் ?
இது எல்லாம் நடக்கிறது 'லப்பர் பந்தி'ல்.
ஆனால் காரணம் மட்டும் ஒரு புதுமையான காரணம்..
கணவனுக்கு(அட்டக் கத்தி தினேஷ்) மேல் சொன்ன எந்த கெட்ட பழக்கமும் இல்லை.
அவன் ஒரு கிரிக்கெட் வெறியன்.அவ்வளவு தான்.
கிரிக்கெட் ஆட்டதுக்கு முன்னால , காசு, வேலை, குடும்பம், எல்லாம் அவனுக்கு ஒரு தூசு.
அவனைப்போலவே கிரிக்கெட்டுக்கு உயிரும் கொடுக்க ரெடியா இருக்கும் ஒரு இளைஞன்.... தினேஷின் பெண்ணின் காதலனான ஹரிஷ் கல்யாண்.
இருவருக்குள் முட்டிக்கொள்ளும் ஈகோ, நடக்க வாய்ப்பிருந்த
கல்யாணத்தை கலைத்து அவர்கள் வீடுகளில் பூகம்பத்தைக் , கிளப்ப..... கடைசியில்
கிரிக்கெட்டும் ஜொலிக்கிறது . காதலும் ஜெயிக்கிறது.
டி 20 கிரிக்கெட், தமிழ் நாட்டு உட்பகுதிகளில் எல்லாம் கூட எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது என்பது படம் முழுசும் அழகாகத் தெரிகிறது.
துபாய்க்கு வேலை நிமித்தம் சென்று, அங்கு வேலை நேரத்தில் கூட கிரிக்கெட் ஆட்டத்தை விடாமல்.ஆடி .. ,அதனால் சொந்த ஊருக்கு மூட்டைகட்டி திருப்பி அனுப்பப்பட,...இங்கும் தன் பெயிண்டிங் வேலைய விட்டுட்டு ஜாலியா மேட்ச் ஆடும் போது, பத்திர காளியா தேடி வரும் மனைவியிடம் மாட்டாமல் இருக்க கிணற்றுக்குள் இறங்கி ஒளிந்து நிற்கும் "கெத்து", பேட்ஸ்மேன் தான் தினேஷ்.
திருட்டுத்தனமா கிரிக்கெட் ஆடி முடித்து வீடு திரும்பும் போது வழக்கமா கைகளில் கொஞ்சம் பெயிண்டை வேறு தீற்றிக்கொள்ளுவார்.
சொந்த வீட்டுக்கு சி எஸ் கே மஞ்சள் பெயிண்டுடன் சி எஸ் கே கிரிக்கெட் வீரர்களின் படத்தையும் சேர்த்து சுவர் நிறைய வரைய வைக்கும் அளவுக்கு கிரிக்கெட் வெறியனான ஆல்ரவுண்டர் அன்பு தான் ஹரிஷ் கல்யாண்.
ஒரே துருவம் போன்ற இவ்விரு உள்ளூர் கிரிக்கெட் மாவீரர்களும் சந்திக்கும் போது, அவர்களுக்குள் வெறுப்பு அனல்விட்டு தகிக்கிறது .
படம் முழுக்க கிரிக்கெட் மேட்ச்கள் நிறைய வந்தாலும் அலு க்கவில்லை.
டி 20 பந்தய, டிவி தமிழ் வர்ணனை பாணியில் மேட்ச்க்கு மேட்ச், களை கட்டும் நக்கல் கலந்த வர்ணனைகள். லவுட் .ஸ்பீக்கரில் சமயத்துக்கு தகுந்த விஜயகாந்த், விஜய் பட பாடல்கள்..... எல்லாம் அருமை.
கதை முடிவு,முன்னமே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட சுப முடிவு போல என்பதாலோ என்னவோ மெலோட்ராமாவை சில இடங்களில் தவிர்க்க முடியல போலும்.ஸ்வாஸிகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன், தேவதர்ஷினி... என்று தொடங்கி எல்லா நடிகர்களும் .. துணை நடிகர்களும் சேர்த்து..மிக நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
தினேஷ், ஹரிஷ் பார்ட்னர்ஷிப் வேற தனி லெவல்.
தினேஷ் புருஷோத்தமனின் காமரா, லப்பர் பந்துக்கு கலரும் அழகும் கூட்டுகிறது.
ஷான் ரோல்டனின் இசை ஆரவாரம் இல்லாமல் படத்துடன் இழைகிறது.
எழுத்து/ இயக்கம் செய்யும் தமிழரசன் பச்சை முத்துவுக்கு இது முதல் படமாமே?
டெபுவில் சென்சுரிஅடித்து விட்டார்.
மிக இயல்பான.. நகைச்சுவை தளு ம்பும்.. வசனம். படம் முழுவதும்.
ஜாதி வன்மம் கிரிக்கெட்டில் இலைமறைவாக இருப்பதை யார் மனதும் நோகாமல் ஆனால் வெகு நாகரீகமாக அழுத்தமாகச் சொல்கிறார் அவர்...
சாதாரண கதை தான்....,லப்பர் பந்து போல.......
ஆனால் படம்,இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் லெவெல்ல இருக்கு.. என்பது என்னவோ உண்மை.
Leave a comment
Upload