தொடர்கள்
கதை
பஞ்சு“ டயலாக் – பா. அய்யாசாமி

20240820172913196.jpg

“பஞ்சு“ டயலாக் – சிறுகதை – பா. அய்யாசாமி

ருக்கு! ருக்கு !! இப்ப என்ன ஆயிடுத்துனு இப்படி கத்தறேள்!
விடிந்தால் வியாழக்கிழமை,நான் மௌனவிரதம்னு தெரியுமோன்னோ ? காலங்கார்த்தாலே
பேச்சுக்கொடுத்து என்னைப் பேச வைச்சுடாதே என்றார் அய்யாசாமி.
ம்..க்கும்.. விரதங்கிறபேர்லே சாடையைக்காட்டி, எழுதிக்காட்டி என் பிராணணை எடுப்பேள் ?
அலுத்துக் கொண்டாள் ருக்கு.
ஏன் அலுத்துக்கிறே ? மெளனமாக இருக்கும் போதுதானே நிம்மதியாக இருக்கேன், அது
பொறுக்கலையா நோக்கு ? என்ன....?? என ருக்கு கேட்டதும் வியர்த்த அய்யாசாமி
உறங்கியெழுந்தார். குளித்து முடித்து காபி சாப்பிட்டு மவுனவிரதத்தை ஆரம்பித்தார்.
“சார்...சார்.. என கத்திக்கொண்டே அய்யாசாமி வீட்டிற்கு வந்தார் எதிராத்து அம்பி
“ஏண்டா அம்பி கத்திண்டே வரே, மாமாவைப் பார்க்கணும்.. பேசணும்...என்றவனிடம். அவர்
பேச மாட்டார் சாயந்திரம் வா என்றவளிடம்
பார்த்தே ஆகனும் என அடம்பிடிக்க, மாடியிலே உட்கார்ந்திருக்கார் போ ,
என அனுப்பி வைத்தாள் ருக்கு.
“இதுவோ இரண்டாங்கெட்டான். என்னத்துக்கு பார்க்கப்போறதுனு தெரியலை, ஏதோ
வில்லங்கம் ஆகப்போறதை மட்டும் பட்சி சொல்லியது. நடக்கட்டும்... வேலைகளில மூழ்கினாள் ருக்கு.
“ மாமா! என் ஆத்துக்காரி ஓவரா பேசறாள், எது பேசினாலும் சண்டை.
வாய் ஓயவே மாட்டேங்கிறது என புலம்பிய அம்பியை,
யுனிவர்சல் பிரச்சனையை, இது என்னமோ தனிப்பிரச்சனைப் போலச் சொல்றதே; என யோசித்தவர்,
“இன்று மெளனம் விரதம்” என வாயில் விரலை வைத்துக்காண்பித்தார்.

பராவல்ல மாமா. எனக்கு ஒரு வழிச் சொல்லுங்கோ,உங்க மாமி நீங்க சொல்றதெல்லாம் கேட்கிறாள், அவளும் என் பேச்சைக் கேட்கனும், ஐடியா
சொல்லுங்கோ என நச்சரித்தான் அம்பி.
விழித்துப்பார்த்த அய்யாசாமி அருகிலிருந்த சிலேட்டில் பஞ்சை வைத்து அடை என எழுதிக்காட்டினார்.
அவ்ளவுதானா ? பிரச்சினை முடிந்திடுமா ? கேட்ட இரண்டுங்கெட்டான் அம்பியை ஆமாம் என்பது போல தலையை ஆட்டி அனுப்பிவைத்தார்.
தீட்சை கிடைத்த சிஷ்யர் போல எழுந்து வீரமாக நடந்துச் சென்றது.

விரதம் முடிந்து ஊஞ்சலில் அமர்ந்து காபியை ருசித்தபடி இருக்க, அம்பியின் மனைவி ராதிகா தலை விரிக்கோலமாக ருக்கு மாமி ருக்கு மாமி என அழுதுக் கொண்டேவந்தாள். கையில் சிலம்புத்தானில்லை.
என்னடியம்மா ஆச்சி ? இப்படி தலையெல்லாம் பஞ்சுப்பஞ்சா இருக்கு, விழியெல்லாம் சிவந்திருக்கு, என்னாச்சு உடம்பிற்கு ? என கேட்டதும்,
புடவைத் தலைப்பை எடுத்து வாயில் வைத்து விசும்பி விசும்பி அழுதாள். ஊஞ்சலில் இருந்த அய்யாசாமி எதுவும் புரியாமல் அம்பியை பார்க்க வெளியே கிளம்பிச் சென்றார்.
“நம்மாத்து மாமாவாச்சேனு பார்க்கிறேன் இல்லைனா போலீஸூக்கு போயிருப்பேன் இந்நேரம்”
என்றாள் ராதிகா.
ருக்குவிற்கு ஒன்றும் புரியலை,என்னாச்சு சொல்லு, அவர் என்ன செய்தார் ? சிவனேனு மவுன
விரதத்திலேதானே இருந்தார் என அவளை சமாதனப் படுத்தினாள்
“மவுன விரதமா ? அதற்கே இந்த பாடா ? வாய்திறந்து பேசியிருந்தால் என் நிலமை? அழுதாள்
ராதிகா..
சொன்னாத்தானே தெரியும் சொல்லு என்ற அவளின் முதுகை பாசமாகத் தடவினாள்
“டேய் அம்பி என்னடாச்சு ? உன் அகம்படையாள் வந்து ஒரே அழுகை என்ன நடந்தது?

நீங்கத்தானே மாமா சொன்னேனள்! வாய் ஓயலை என்றதற்கு பஞ்சை வைத்து அடை என்று,
அதான் மெடிக்கல்ல இரண்டு கிலோ பஞ்சு
வாங்கிவந்து அவள் வாயை அடைத்துப் பார்த்தேன், தப்பித்து ஓடி வந்து அவளை கொலை
செய்ய முயன்றதாக உங்காத்திற்கு வந்திருக்காள் மாமா” என வெள்ளந்தியாகச் சொன்னதும்,
அடேய் ! இரண்டுங்கெட்டான்.. என உன்னை ருக்கு சொல்லும் பொதெல்லாம், அவன்
அப்படியில்லை என்பேன், நீ என்னடான்னா என்னை கொலைகேசில் உள்ளே வைக்க பிளான்
பண்றாப்லே தெரியறது,
உன் சகாவாசமே வேண்டமடா என்று ஆத்திற்கு ஓட்டமாய் ஓடினார் அய்யாசாமி.
வாங்கோ, இதான் மவுனவிரதப் பலனா ? வாயைத்திறந்து பேசினாலே ஒன்னும் ஆகாது,
இதில் சாடை வேறு ? என்ன சொன்னேள் அம்பியிடம் இவளின் கதறல் ஏன் ? என ராதிகாவின்
வக்கீலாய் மாறினாள் ருக்கு.
அவளுக்கு வாய் ஜாஸ்தியாடுத்து ஏதாவது ஐடியா குடுங்கோ என கேட்டான் எழுதிக்
காண்பித்தேன்.
ஓகோ! ஐடியா கேட்டால் ஒரேடியா அனுப்ப ஏற்பாடு பண்ணுவேளா ? பேஷ் என்றாள் ருக்கு.
என்ன ருக்கு சொல்கிறாய் ?
நீங்க என்ன எழுதி காண்பித்தேள்?!

பஞ்சை வைத்து அடை னு எழுதிக் காண்பித்தேன்.
பார்த்தேளா ! பார்த்தேளா மாமாதான் பண்ணச் சொல்லியிருக்கார் என்றாள் ராதிகா..
“என்ன பார்த்தேளா ? அப்படி ஒன்றும் தப்பாக எழுதலையே, பஞ்சை அவன் காதில்
அடைத்துக்கோனுதானே அர்த்தம் பண்ணிக்க வேணும் என்ற உண்மையைச் சொன்னார்
முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு..
பலமாக சிரித்த ருக்கு, அந்த இரண்டுங்கெட்டான் அம்பி, இரண்டு கிலோ பஞ்சை இவள்
முகத்திலே வைத்து அழுத்தி அடைக்கப் பார்த்திருக்கான் என்ற ருக்கு, அவளை சமாதனப்படுத்தி
அனுப்பி வைத்தாள்.
ஹி...ஹி.. இந்த இரண்டுங்கெட்டான் அம்பி செய்த முட்டாள் தனத்தைப் பார்த்தியோ?! என்ற
அய்யாசாமியை, ஆமாம் இவர் பெரிய புத்திசாலி லோகத்திற்கு யோசனை சொல்றாரு,
“இரண்டுமே பேருமே இரண்டுங் கெட்டாந்தான், போய்ப்படுங்கோ இன்றைக்கு திருவிளையாடல் போதும்
என்ற ருக்குவின் பேச்சிற்கு மறுப்பேதும் சொல்லாமல் உறங்கப்போனார் அய்யாசாமி.
நாளையப் பொழுதாவது நல்லபடியாக விடியட்டும் என்ற வேண்டுதலோடு.