தொடர்கள்
பொது
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு? -தில்லைக்கரசிசம்பத்

திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது என்று திடீரென 3 நாட்களுக்கு முன்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குண்டை தூக்கி போட்டு அனைத்து பக்தர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

அடுத்த நாளே லட்டு குறித்தான ஆய்வக அறிக்கையும் வெளியானது.

லட்டில் நெய்வாசனையுடன் முந்திரி, திராட்சை,பச்சைகற்பூரம், கல்கண்டு இருக்கும் என எதிர்பார்த்தால் அதில், மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, பன்னியின் கொழுப்பு மட்டுமல்லாமல் பாமாயில், சோயா எண்ணெய்,ஆளி விதை, மக்காச்சோளம், பருத்திக்கொட்டை , புண்ணாக்கு என மானாவரியாக அடுக்கி ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தாவர எண்ணெய்கள் கூட பரவாயில்லை இந்த விலங்கு கொழுப்பு சேர்த்தது சகிக்க முடியாத ஒன்று என பக்தர்கள் குமுறுகிறார்கள்.

இந்த அறிக்கையை வெளியிட்டது குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வுக்கூடம். கடந்த ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை எதிர்த்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பாரெட்டி ( ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்) “இது அரசியல் காரணங்களுக்காக வெளியிடப்பட்ட பொய்யான தகவல். இக்குற்றச்சாட்டை நாயுடு நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது மானநஷ்ட வழக்கு போடப்படும்” என இரு நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சொல்லி, அதன்படி ஆந்திர நீதிமன்றத்தில் சந்திரபாபுநாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். வரும் புதனன்று நீதிமன்றம் இதை அவசரவழக்காக எடுத்து விசாரிக்கின்றது.

2014 வரை வெவ்வேறு நிறுவனங்களிடம் நெய் வாங்கிய தேவஸ்தானம் ,பின்னர் ராஜஸ்தானிலுள்ள ஃபதேப்பூரில் 10,000 நாட்டு பசுமாடுகள் கொண்ட கோசாலையிலிருந்து நெய் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் . அது பூச்சிமருந்து, ரசாயன கலப்பில்லாத சுத்தமான ஆர்கானிக் நெய் என்கிறார் சுப்பா ரெட்டி. அத்தோடு திருப்பதி தேவஸ்தானமே சொந்தமாக 550 நாட்டு பசுமாடுகள் வாங்கி கோசாலைஅமைத்து அங்கிருந்தும் நெய் எடுக்கிறார்கள்.
மைசூரை சேர்ந்த மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வகத்தின் (Central Food Technology Research Institute (CFTRI) ) சோதனை கருவியை கொண்டு தேவஸ்தானம் லட்டுகளை தினந்தோறுமே பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் தரத்தை உறுதி செய்கிறது என சுப்பா ரெட்டி கூறுகிறார்.
திருப்பதி தேவஸ்தான பணியாளர்கள் அமைப்பின் கௌரவ தலைவர் கே.முரளியும் “ இக்குற்றச்சாட்டுகள் காலம்காலமாக பெருமாளை தேடி வந்த பக்தர்களின் இறை உணர்வையும், நம்பிக்கையையும் அவமானப்படுத்துவது மட்டுமின்றி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அத்தனை பணியாளர்களின் கடமை தவறாத நேர்மைத்தன்மையை அவமதிக்கும் செயல்” என்கிறார்.
ஆந்திர அரசின் கீழ் தேவஸ்தானம் செயல்படுவதால் வந்த வினை இது என சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். கோயில்கள் என்பதே அரசர்களும் அரசுகளும் தான் பாதுகாத்து வழிநடத்தி வந்திருக்கின்றன என்பது நமது சரித்திரம். பிரிட்டீஷ் ஆட்சியின் போது 1843 ல் திருப்பதி ஹதிராம்ஜி மடத்தின் ஸ்ரீதேவதாஸ்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. 1932 ல் திருப்பதி தேவஸ்தானத்திடம் கோயில் பொறுப்புகள் முழுமையாக வந்தன. இன்று ஆந்திர அரசின் கீழ் தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது.

லட்டு பிரசாதமாக மாறிய கதையை பார்த்தால் கிபி 1445 ஆம் ஆண்டு வரை திருப்பதி கோயிலில் திருப்பொங்கம் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. பிறகு சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமாக வந்து, 1455 ம் ஆண்டு முதல் அப்பம் கொடுத்து , பின்1460 ஆம் ஆண்டில் இருந்து அது வடையாக மாறி, 1468 ல் வடைக்கு பதில் அதிரசமும், 1547 முதல் கடலைப்பருப்பில் செய்த மனோஹரமும், அதற்கு பிறகு 1803 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்தியபடி பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.

1715 ம் ஆண்டு ஆகஸ்ட் 2 ம் தேதி முதலே பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில் லட்டும் சேர்க்கப்பட்டாலும் , 1940 முதல் பூந்தி விற்பனை நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதன் தனிச்சுவை உலகப் புகழ் பெற்றது. 'கல்யாணம் ஐயங்கார்' என்பவர் உருவாக்கியதுதான் திருப்பதி லட்டு என்கிறார்கள்.

திருப்பதி லட்டு மூன்று வகைப்படும். அவை குங்குமப்பூ, முந்திரி, பாதாம் ஆகியவற்றைக் கொண்ட, 750 கிராம் எடையுடைய ஆஸ்தான லட்டு, அதே 750 கிராம் எடையுடைய கல்யாண உத்ஸவ லட்டு, இவையிரண்டும் விழா நாட்களிலும், கல்யாண உத்ஸவ சேவை திருப்பதி பாலாஜி மற்றும் தாயாருக்கு நடைபெறும்பொழுது அதில் கலந்துக்கொள்ளும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் லட்டுகள் ஆகும். மூன்றாவதான புரோக்தம் லட்டு தினமும் பெருமாளை தரிசனம் பண்ண வரும் சாதாரண மக்களுக்கு கொடுக்கும் லட்டு ஆகும் . இவ்வகை லட்டுகளே அதிகம் தயாரிக்கப்படுகின்றன.
திருப்பதி லட்டு 2008ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏற்பட்ட லட்டு சர்ச்சையில் ஆந்திர அரசை மத்தியரசு அறிக்கை கேட்டுள்ளது. மத்தியமைச்சர் ஜேபிநட்டாவும் தேவைப்பட்டால் சிபிஐவிசாரணை வளையத்துக்குள் இப்பிரச்சனையை கொண்டு வருவோம் என்று சொல்லியுள்ளார்.

திருப்பதி கோயிலுக்கு நெய் வழங்கிய ஐந்து நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனமும் ஒன்று எனவும், அந்த நிறுவனம் 20,000 கிலோ நெய்யை சப்ளை செய்த நிலையில் அதில் கலப்படம் இருப்பதாக தேவஸ்தானம் கூறி, நெய் திருப்பி அனுப்பஇ உள்ளது.

லட்டு விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை அளிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டிருக்கிறார். “மோசமான அரசியலுக்காக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடவுளின் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமானது” என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திருப்பதி லட்டின் ருசி காலாவதி ஆக எத்தனையோ வருடங்கள் ஆயிற்று. வெறும் சர்க்கரையும் கல்கண்டையும் கொட்டி , மூட்டை ஏலக்காயை தோலோடு அப்படியே நரநரவென்று கலந்து லட்டு பிடிப்பது போல் தான் தெரிகிறது. முன்பெல்லாம் நாள்கணக்கில் கெட்டுப்போகாமல் இருந்த லட்டு இப்போதெல்லாம் வாங்கிய மறுநாளிலேயே குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் கூட நான்கு நாட்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை .

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசிடம் கேட்டுள்ளேன், '' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

ஏழுமலையானை நெஞ்சில் சுமந்துக்கொண்டு, திருப்பதிக்கு இந்த வருடமாவது போய்வந்துவிட வேண்டும் என வேண்டிக்கொண்டு, கைக்காசை செலவழித்து, கால்கடுக்க நின்று பெருமாளை தரிசனம் பண்ணி, உண்டியலில் தங்களது உழைப்பில் வந்த பணத்தை காணிக்கையாக செலுத்தி “ ஏழுமலையானை கண்குளிர பார்த்துட்டேன்” என மன நிறைவோடு வீடு திரும்பும் சாதாரண பக்தர்களுக்கு இந்த தேவஸ்தானம் ஒரு பிரசாதத்தை தரமாக கொடுக்க முடியாதா?

உலகிலேயே பணக்கார கோயில்களில் திருப்பதியும் ஒன்று என்கிறார்களே! இந்த குற்றச்சாட்டு மட்டும் உண்மையென்றால் இது மகாபாவம் இல்லையா? அரசியல்வாதிகளின் ஆட்சி பிடிக்கும் போட்டியிலும், தேவஸ்தானத்தின் பெரியமனிதர்களும் விளையாடும் விளையாட்டில் சாதாரண பக்தர்கள் தூக்கி பந்தாடப்படுகிறார்கள்.
“கொடுமை..கொடுமை..என கோயிலைத்தேடி போனால் அங்கே இரண்டு கொடுமை காலில் சதங்கை கட்டி ஜங்கு ஜங்கு என ஆடியதாம்” என்று சும்மா ஒரு சொலவடை சொல்வார்கள். அதை கடைசியில் உண்மை ஆக்கிவிட்டார்களே! என்ன கொடுமை இது!