சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட குறிஞ்சி பூக்கள் தற்போது ஊட்டியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள எப்பாடு கிராமத்தின் மேல் உள்ள கெங்கமுடி அருகே பிக்கபத்தி மந்தை தொட்டாற்போல உள்ள மலை சரிவில் பூத்து குலுங்குகிறது .
அந்த அதிசிய ஆச்சிரிய நீல நிற குறிஞ்சி பூக்களை காண எப்பநாடுக்கு 17 ஆம் தேதி காலை சென்றோம் .
நம் ஆக்ட்டிவ் ஹோண்டாவில் பயணித்து எப்பநாடு கிராமத்தில் குறிஞ்சி பூக்களை பற்றி கேட்க கெங்க முடி சென்று பிக்கபத்தி மந்து போங்க என்று கூற அந்த வழியில் செல்ல ஆறு ஐ டி பெண்கள் கோவையில் இருந்து குறிஞ்சியை காண சென்று கொண்டிருந்தனர்.
நாம் கெங்கமுடி சென்று வாகனம் செல்ல ஏற்ற சாலை இல்லாததால் பெரிய மேட்டில் நடையை கட்டினோம் .
மிக மோசமான நடைபாதை .
கீழே ஒரு தோடர் இன பெண் குழந்தைகளுடன் நடந்து வர அவரிடம் வழி கேட்க அவர் மந்து செல்ல மேலே ஏறி போங்க என்று கூறினார் .
வெயில் சற்று ஆசுவாச மாகி மூச்சி இறைத்து சென்றோம் அரைமணிநேர நடைக்கு பின் மந்தை அடைய செடிகளை வெட்டிக்கொண்டிருந்த ஒருவர் நம்மை தோடர் மந்துக்கு கூட்டி சென்று மோர் குடிக்கிறீங்களா என்று கேட்க நாம் டீ கேட்டு குடித்தோம் சற்று தாகம் தணிந்தது .
தோடர் இன பெண்கள் சங்கீதா , புவனாராணி உடன் வயதான சுகந்தா பூ நம்மிடம் பேசினார்கள் ,
"பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி எங்க பகுதியில் பூத்திருக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது நிறைய தேனி கூட்டம் வருது அறிய பறவைகளும் வருது .எங்களுக்கு புனிதமான மிருகம் எருமை தான் அதை மேய்க்க காட்டுக்குள் போகும்போது நிறைய புதிய மலர்களை பார்ப்போம் அப்படி தான் குறிஞ்சியையும் பார்க்கிறோம் .
ஐந்து வருடத்திற்கு முன் வித்தியாச குறிஞ்சியை பார்த்திருக்கிறோம் .
ஒரு மாதத்திற்கு இருக்கும் நீல குறிஞ்சி இருக்கும் .
இது எங்களுக்கு நல்ல காலம் மகிழ்ச்சியானது". என்று கூறினார்கள் .
பின் நம்மை வனத்தினுள் அழைத்து சென்றார் தோடர் ஒருவர் ஒத்தையடி பாதை மிகவும் கவனமாக நடந்தோம் மிக பயங்கரமான பள்ளத்தாக்கு சற்று தட்டு தடுமாறி தான் சென்றோம் கொஞ்சம் நேரம் நடக்க அதோ அங்கு தெரியுது பாருங்க என்று கூற மலை சரிவில் நீல நிறத்தில் பூத்துகுலுங்கி கொண்டிருந்தது குறிஞ்சி .
அருகில் சென்றவுடன் கண்களுக்கு குறிஞ்சியின் விருந்து சூப்பர் கண்கொள்ளா காட்சி தான் .
அந்த மலை சரிவு முழுவதும் நீல குறிஞ்சி பூத்து தலையசைத்து கொண்டிருந்தது .
நாம் ரசித்து படம் எடுத்து முடித்து திரும்ப இரண்டு வன துறை காவலர்கள் ஆவேசத்துடன் வந்து "யாரை கேட்டு இங்கு வந்தீர்கள் "? என்று கேட்க நம் அடையாளத்தை காண்பித்து தேவையற்று வரவில்லை குறிஞ்சி பூத்திருப்பதால் தான் தேடி வந்தோம் என்று விளக்கி கூறி அவர்களுடன் திரும்பி வர அவர்கள் கூறியது சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது .
இங்கு புலி சிறுத்தை நடமாட்டம் உள்ளது முதுமலையின் தொடர்ச்சி சற்று அந்த பக்கம் சென்றால் யானை இருக்கு ஏகபட்ட ரிஸ்க் சார் ..இங்க பாருங்க புலி நடந்த தடம் உள்ளது அது நடக்கும் வழி தான் இது என்று கூற சற்று குப் என்று வேர்த்து விட்டது நமக்கு.
பின் வெளியே வர நான்கு வன அதிகாரிகள் வந்து நின்று கொண்டு நம்முடன் வந்த தோடர் நபரை இனி யாரையும் வனத்தினுள் கூட்டி செல்லக்கூடாது என்று எச்சரித்தனர் .
அதே போல கோவையில் இருந்து வந்த ஐ டி பெண்களையும் திருப்பி அனுப்பிவிட்டனர் .
நம்மை யார் என்று தெரிந்து கொண்டபின் விடை கொடுத்தனர் .
வந்த வழியே நடந்து வந்தோம் .
பின் எப்பநாட்டில் டீ குடித்து விட்டு ஊட்டிக்கு பயணிக்க மாவட்ட வன அதிகாரி குறிஞ்சியை பார்க்க போய்க்கொண்டிருந்தார்.
தாவர ஆராய்ச்சியாளர் முனைவர் .ராஜன் ,
" குறிஞ்சி முப்பத்தியாறு வகையுள்ளது .தற்போது எப்பாடு மலை சரிவில் பூத்துள்ளது.
இது ஸ்ட்ரோபிலன்தஸ் குந்தியான வகை ( Strobilanthes kunthiana species) ஒரிஜினல் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி !. கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் தான் குறிஞ்சி பூக்கிறது வருடத்திற்கு ஒரு குறிஞ்சி பூக்கிறது அதே போல ஐந்து வருடத்திற்கும் ஒரு முறை பூப்பதும் உண்டு .சீதோஷண நிலை மாற்றத்தினால் கூட இது பூப்பது மாறுபடலாம் .அதை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது " என்கிறார் .
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறும்போது ,
" எனக்கு தெரிந்து எப்பாடு மலை சரிவில் குறிஞ்சி பூப்பது இது தான் முதல் முறை அதனால் இது 12 வருட குறிஞ்சி .இந்த வகை குறிஞ்சி மலை சரிவில் பெரிய அளவில் பூக்கிறது .
குறிஞ்சி செடி 200 வகையுள்ளது .
அதே சமயம் சாலை ஓரங்களில் ஒரு வருடம் மூன்று, ஆறு வருடங்களில் பூக்கும் குறிஞ்சியும் உண்டு .
இந்த குறிஞ்சி சோலை மற்றும் புல் வனங்களில் பூக்கும்போது பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் உதவுகிறது . பட்டாம்பூச்சிகள் , தேனீக்களின் கூட்டம் மொய்த்து விடும் .
சன் பறவைகள் முப்பது , அறுபது ஏன் நுறு கிலோமீட்டர் அப்பால் உள்ள வனங்களில் இருந்து இங்கு வந்து இனவிருத்தி செய்யும் ஒரு காலமாக குறிஞ்சி அமைத்து கொடுக்கிறது .
இப்படி குறிஞ்சி பூத்தால் தேன் ஒழுகும் என்பது உண்மை . குறிஞ்சியை தொந்தரவு செய்ய கூடாது விசிட்டர்ஸ் மற்றும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது எல்லோரும் வந்தால் செடிகள் நாசமாகும் விதைகள் அழிந்துவிட வாய்ப்புள்ளது .
கொடைகனல் , நீலகிரி கேரளாவில் கூட குறிஞ்சி பூக்கிறது பல ஆராய்ச்சியாளர்கள் இதை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் .
வெள்ளை குறிஞ்சி கூட பூக்கிறது .
இந்தியா முழுவதும் பூக்கும் குறிஞ்சி அதில் ஸ்பெஷல் நீல நிற குறிஞ்சி நீலகிரியில் தான் அதிகம் அழகானது பாதுகாக்கவேண்டியது.
வனத்துறை குறிஞ்சி பூப்பதை ரெகார்ட் செய்யவேண்டும் இங்கு கூட ஒரு அறிவிப்பு பலகை வைக்கவேண்டும் பத்திரிகையாளர்களை தவிர யாரையும் அனுமதிக்க கூடாது .
மழை இல்லாமல் இருந்தால் ஒரு மாதத்திற்கு மேல் பூ இருக்கும் இல்லாவிட்டால் வாடி போய்விடும் .
குறிஞ்சி பூப்பது கொண்டாடவேண்டியது தான் .ஒரு கலெக்டர் குறிஞ்சி பூத்த இடத்திற்கு சென்று டான்சே ஆடியுள்ளார் என்றால் பாருங்களேன்" என்று கூறினார்
குறிஞ்சி பூத்திருக்கும் காலம் நல்ல காலம் தான் நீலகிரிக்கு என்று சொன்னால் மிகையாகாது .
1988 ஆம் ஆண்டு கலைஞர் ஊட்டி விசிட் சதர்ன் ஸ்டார் ஹோட்டலில் தங்கினார் .
அவரை அன்றைய நகர செயலர் செரீப் அப்பொழுது பூத்த குறிஞ்சி பூ மாலை அணிவித்து வரவேற்றார் சற்றும் எதிர்பார்க்காத கலைஞர் அசந்து போய்விட்டார் அருகில் நின்றிருந்தவர்களிடம் குறிஞ்சியின் முக்கியத்துவத்தை கூறி சிரித்ததை இன்னும் மறக்க முடியவில்லை நமக்கு .
குறிஞ்சியை பார்க்க தடை விதிக்க பட்டுள்ளது .இது நல்ல விஷயம் சுற்றுலா பயணிகள் வனத்தினுள் படையெடுத்தால் அது ஆபத்தானது .
குறிஞ்சியை பார்க்க மெனக்கெட்டு யாரும் ஊட்டி பக்கம் வரவேண்டாம் .
நம் விகடகவியல் பார்த்து ரசித்தாலே போதும் ' மலரே குறிஞ்சி மலரே ' என்று .
Leave a comment
Upload