தொடர்கள்
கவர் ஸ்டோரி
இசைக்குயில் எம்.எஸ்அம்மா-தில்லைக்கரசிசம்பத்

20240820073133275.jpeg

சுமார் 7 வருடங்களுக்கு முன் நடிகை வித்யாபாலன் ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தபோது தனது நண்பரான திரைப்பட ஆடை வடிவமைப்பாளர் அனுபார்த்தசாரதியை தொலைப்பேசியில் அழைத்து அவரை சந்திக்க விரும்புவதாக சொல்ல அனுவும் கிளம்பி அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

“மணிச்சித்திரதாழ்“ மலையாளப்படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் சேர்த்து மொத்தம் இரு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த வித்யாபாலனுக்கு அனுபார்த்தசாரதி ஆடைவடிவமைப்பாளராக பணிப்புரிந்தது குறிப்பிடத்தக்கது.

20240820073250759.jpeg

அன்று நடிகை வித்யாபாலனும், அனு பார்த்தசாரதியும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் வித்யா ஏதேச்சையாக “ எம்.எஸ்அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.சிறுவயதில் என் தாயார் தினமும் காலையில் எம்.எஸ் அம்மாவின் சுப்ரபாதத்தை வீடு நிரக்க ஒலிக்க விட, அதை கேட்டு வளர்ந்தவள் நான். இன்றும் கூட எம்.எஸ்ஸின் குரல் கேட்டே கண்விழிப்பேன்.

20240820073329257.jpeg
என்ன ஒரு தெய்வீக குரல்! எனக்கு எம்.எஸ்.அம்மா வாழ்க்கை வரலாறுப் படத்தில் நடிக்க ஆசை” என வித்யா கூறுகிறார். அன்று வித்யா கூறியது,அனுவின் மனதில் ஒரு விதைப்போன்று ஆழமாக பதிய , இந்த திரைப்படத்துறையைத் தாண்டி நாம் வேறு ஏதாவது ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்கிற அவரின் தேடலில் நாட்கள் செல்ல, செல்ல அன்று விழுந்த விதை விருட்சமாக வளர்ந்து, திடீரென ஒரு நாள் அனுவின் மனதில் “நாம் ஏன் எம்.எஸ் அம்மாவின் ஆடைஅணிகலன் வடிவமைப்பை மறுஉருவாக்கம் செய்யக்கூடாது!?

20240820073408350.jpeg

எம்.எஸ்.அம்மா மேடைக் கச்சேரிகளின் போது, அதுவும் குறிப்பாக 1960லிருந்து 1980 காலம் வரை எம்மாதிரி ஆடை அணிகலன்களை அணிந்து கச்சேரி செய்தாரோ அதே இளம் எம்.எஸ் அம்மாவின் தோற்றத்தை கண்முன் கொண்டுவர வேண்டும். இளம் எம்.எஸ்.அம்மாவின் தோற்றத்தை வித்யாபாலனை கொண்டு மறுஉருவாக்கம் செய்தால் எப்படி இருக்கும். ? அதுவும் வித்யா மிகவும் ஆசைப்பட்டாரே !” என தோன்றிய அந்த கணத்தில் வித்யாவுக்கு உடனடியாக தன் எண்ணங்களை செய்தியாக அனுப்பி இருக்கிறார். வித்யாவும் “ ஆஹா..! தாராளமாக இதை செய்யலாம். இதை என் கொடுப்பினையாக எண்ணுகிறேன் ” என சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.

20240820074004369.jpeg

அனுபார்த்தசாரதியும், வித்யாபாலனை எம்.எஸ்.அம்மாவைப்போன்றே அச்சு அசலாக உருவத்தில் கொண்டு வந்து கலக்கியிருக்கிறார். ஆனால் இதற்காக அனு பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமில்லை. அனுவிடம் ஏற்கனவே கருப்புவெள்ளை புகைப்படங்களோடு கூடிய எம்.எஸ்அம்மாவின்
வாழ்க்கைவரலாறு புத்தகம் உள்ளது. அந்த புத்தகத்திலும், கூகுளிலும் எம்.எஸ்அம்மாவின் உடை அமைப்பை தேடி , எந்தெந்த புடவைகள், என்னென்ன அணிகலன்கள் என ஆராய்ந்ததில் நான்கு வெவ்வேறு நிறப்புடவைகளை தேர்ந்தெடுக்கிறார் அனு.

2024082007413672.jpeg

இதற்கிடையில் எம்.எஸ்அம்மாவின் குடும்பத்திலிருந்து யாருடைய அறிமுகமாவது கிடைத்தால் நன்றாக இருக்குமே என அனு, தனது நண்பரான ஒரு பத்திரிக்கையாளரிடம் வினவ, அவர் மூலம் புல்லாங்குழல் கலைஞர் சிக்கில் மாலா சந்திரசேகர் அறிமுகம் ஆகிறார்.

20240820074219524.jpeg
எம்.எஸ்அம்மாவின் (வளர்ப்பு) மகள் ராதாவிஸ்வநாதன் அவர்களின் மருமகள் தான் சிக்கில் மாலா சந்திரசேகர். அவர் உதவியோடு
அனு தேர்ந்தெடுத்த அந்த நான்கு புடவைகளில் , நீலநிறம், மெஜந்தாவில் ஆரஞ்சு பார்டர்,பச்சையில் மஞ்சள் பார்டர் என மூன்று பட்டுப்புடவைகளை பிரத்யேகமாக நெய்திருக்கிறார்கள். அதற்கு உதவியாக இருந்தது அனுவின் தோழி சுபாஷினி ஸ்ரீனிவாசன். எஸ் ஸ்டூடியோ ஆடையகத்தின் உரிமையாளரும்,தலைமை ஆடை வடிவமைப்பாளருமான சுபாஷினி காஞ்சிப்புரத்தின் தனிப்பட்ட இரு நெசவாளர்களை ஒருங்கிணைத்து புடவைகள் உருவாக உதவியிருக்கிறார் . அதில் பாலகிருஷ்ணன் என்பவர் நீல நிற பட்டுப்புடவையையும், சீனிவாசன் என்பவர் மெஜந்தா மற்றும் பச்சை நிற பட்டுப்புடவைகளை மிக அழகாக நெய்து கொடுத்திருக்கிறார்கள்.

20240820074356610.jpeg

எம்.எஸ் ப்ளு என்கிற எம்.எஸ்ஸின் ட்ரேட்மார்க் புடவையை நெய்தாலும் குறிப்பிட்ட அந்த நீல நிறத்தை கச்சிதமாக புடவையில் கொண்டுவருவது கடினம் என்பதால், அதை மட்டும் நல்லி சில்க்ஸில் சென்று வாங்கியிருக்கிறார் அனு. எம்.எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினரான சிக்கில் மாலா சந்திரசேகரை கலந்தாலோசித்து, அவரது வழிக்காட்டுதல்படி அப்படியே அச்சு அசலாக பட்டுப்புடவைகள் , நகைகள், நெற்றியில் குங்குமம், விபூதி, மூக்கில் ஜொலி ஜொலிக்கும் வைரபேசரி, கொண்டையை சுற்றி மணக்கும் மல்லிகைச்சரம் என்று பிரமாதமாக வித்யாபாலனை அலங்கரித்து எம்.எஸ்.அம்மாவை கண்ணுக்கு முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் அனு. புகைப்படங்கள் வெளியானதிலிருந்து அனுவுக்கு பாராட்டுகள் வந்து குவிகின்றன. அனு பார்த்தசாரதி என்றால் சும்மாவா?

20240820074512311.jpeg
தமிழ் படங்கள் மட்டுமின்றி ஹிந்தியுடன் பிற மொழிப்படங்களிலும் திரைப்பிரபலங்களுடன் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக பணிப்புரிபவர் ஆயிற்றே!

வியட்நாம் வீடு சுந்தரத்தின் செல்ல மகளும், மேப்ஸ் என்று அழைக்கப்படும் பிரபல புகைப்பட நிபுணர் எம்.ஏ. பார்த்தசாரதியின் மனைவி வேறு.. கேட்கவா வேண்டும்?!. தூள் கிளப்பிவிட்டார்.


“குறை ஒன்றும் இல்லை”பாடலின் முடிவில் எம்.எஸ்.அம்மா “கோவிந்தா கோவிந்தா..! கோவிந்தா கோவிந்தா..!”என நெக்குருகி பாடும்போது, பக்திப்பெருக்கில் அவரின் கண்ணீர் ததும்பும் கண்கள் தாமாகவே மூட, இரு கரம் கூப்பி வணங்கி அப்பாடலை முடிக்கும் அந்நேரம், எம்..எஸ் அம்மாவின் முகத்தில் பிரகாசித்து மின்னும் பக்திப்பரவசத்தின் ஒளியை காணும் ரசிகர்களை, அது மேடைக்கச்சேரி என்பதையே அவர்களுக்கும் மறந்து, சாட்சாத் அந்த கண்ணனே எம்.எஸ்ஸின் முன்னால் வந்து நின்று தரிசனம் கொடுக்கிறானோ என ஒரு கணம் எண்ண வைத்துவிடுவார்.


வித்யாபாலனும் எம்.எஸ்அம்மாவை அப்படியே உள்வாங்கி அந்த முகபாவங்கள் முதற்கொண்டு , தம்பூராவை கையில் ஏந்தியபடி, அகக்கண்களில் இறைவனை கண்டாலும், புறக்கண்களிலும் காணத்துடிக்கும் அந்த எல்லையற்ற ஏகாந்தத்தின் ஏக்கத்தை அப்படியே தன் கண்களிலும் பிரதிபலித்திருக்கும் அவருக்கு பாராட்டுகள்.

20240820075046857.jpeg

நடிகை வித்யாபாலன் தனது பரவசமான அனுபவத்தினை சொல்கிறார்…

எம்.எஸ் அம்மாவின் 108 வது பிறந்தநாள் விழா இவ்வருடத்தில் கொண்டாடும் இந்நேரத்தில் தனது “பிரபலங்களின் தனித்துவமான பாணியின் மறு உருவாக்கம்” என்ற வகையில் எம்.எஸ்அம்மாவை திரும்ப தத்ரூபமாக கொண்டுவந்து தனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்தியிருக்கும் அனுபார்த்தசாரதிக்கு, எம்.எஸ்.ஸின் லட்சோப ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றி.

அப்படியே இளம் எம்..எஸ். அம்மாவை வித்யாபாலன் மூலம் காட்சிப்படங்களாக அனு பார்த்தசாரதி கொண்டுவந்தது உண்மையில் காணக்கிடைக்காத பரவசமான அனுபவம் ..