மஹாளயம் என்பது ஆன்மாக்கள் லயிக்கும் இடம். இந்த மஹாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக நம் இல்லம் தேடி வருகிறார்கள் என்றும் கருடபுராணம் கூறுகிறது.
மஹாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் கொடுக்கும் இந்த தர்ப்பணத்திற்காக அவர்கள் காத்திருப்பார்கள். அதனால் இந்த மஹாளய பட்சம் காலத்தில் நம் முன்னோர்களைத் திருப்தி செய்யும் வகையில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது பசி,தாகம் தீர்க்க வேண்டி தர்ப்பணம், அன்னதானம் செய்ய வேண்டும். மாதந்தோறும் முன்னோர்களுக்குத் தர்ப்பணமும், அன்னதானமும் செய்ய முடியாதவர்கள் இந்த மஹாளய பட்ச காலத்தில் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
அன்னதானமும் கர்ணனும்:
இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து புராணக் கதை ஒன்று உண்டு. “கொடைவள்ளல் என்றாலே கர்ணன் என்ற பெயர்தான் எல்லோருக்கும் நினைவில் வரும்” அவர் செய்த தர்மத்தாலும், தானத்தாலும் பெரும் பெயர் பெற்றார். கர்ணனுக்குப் பிறகு கொடையில்லை என்ற சொல்வழக்கே உண்டு.
ஒரு சமயம், கடும் மழையால் அகிலமே நனைந்திருந்தது. அச்சமயம் பார்த்து வேதியர் ஒருவர் தான் செய்யவேண்டிய ஒரு பெரும் யாகத்திற்காக, கர்ணனிடம் சந்தனக் கட்டைகள் கேட்டு வந்தனர். மழையின் காரணத்தால் வெளியே உள்ள சந்தன மரங்கள் அனைத்தும் நனைந்திருந்தன. உடனே, அரண்மனையின் உள்ளே சென்ற கர்ணன் தனது மணிமண்டபத்தினை இடித்து, மண்டபத்தினைத் தாங்கிக் கொண்டிருந்த சந்தனத்தால் ஆன உத்தரங்களையும், தூண்களையும் வெட்டிக் கொடுத்தார். அந்த அளவுக்குக் கொடுப்பதிலே வள்ளல் கர்ணன்.
குருஷேத்ர யுத்தத்தின் முடிவில், மடிந்த கர்ணனை யமதர்மராஜன், மிகுந்த மரியாதையுடன் யமலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவர் செய்த பல தர்மங்களுக்காகச் சொர்க்கத்திற்கு அனுப்புகிறார். கர்ணனும் மகிழ்வுடன் சொர்க்கத்திற்குச் சென்று அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்குப் பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்கத்தில் இருந்தவர்கள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்குப் பசி, தாகம் இருக்காது என்கிறார்கள். தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றைக் கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையைக் கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து, நீ பூலோகத்தில் எவ்வளவோ தர்மங்கள் செய்திருக்கலாம், பொன்னையும், பொருளையும் வாரி வாரித் தந்திருக்கலாம் - ஆனால் நீ செய்ய மறந்தது அன்ன தானம்..அதனால்தான் உனக்குப் பசி தாகம் உண்டானதென்று சொல்லி, கர்ணனின் பசி, தாகம் தீர ஆட்காட்டி விரலைச் சுவைக்கச் சொல்கிறார். கர்ணன் தன் ஆட்காட்டி விரலைச் சுவைத்ததும் பசி தீர்ந்தது. ஒன்றும் புரியாத கர்ணன் "இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க, கர்ணா, நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச்சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் வழிகாட்டியுள்ளாய். அதனால் உன் ஆள்காட்டி விரல் மட்டுமே அன்னதானப் பலன் பெற்றது" என்றார்.
மஹாளய பட்ச அன்னதானம்:
அன்னதானத்தின் மகிமையை உணர்ந்த கர்ணன், யமதர்மனிடம் சென்று நான் மீண்டும் பூமிக்கு ஒரு பட்சம் (15 நாட்கள்) மனித உடலுடன் பூலோகம் சென்று அன்னதானம் செய்து வர அனுமதிக்க வேண்டுமென வேண்ட, யமதர்மராஜனும் அனுமதி அளித்தார். பூலோகத்திற்குச் சென்ற கர்ணன், யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்து, தன் நோக்கத்தை நிறைவேற்றினார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமதர்மன் வந்து, கர்ணனை மீண்டும் சொர்க்கத்திற்கு வருமாறு அழைத்தார்.
கர்ணன் கேட்ட வரம்:
கர்ணனின் செயலைப் பார்த்து மகிழ்ந்த யமதர்மராஜன், உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் எனக் கேட்டார். அதற்குக் கர்ணன், " யமதர்மராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்குத் திதி மற்றும் உணவு அளிக்க மறந்து விடுகின்றனர். அதனால் இந்த பட்சத்தில் அவர்களுக்கு நாம் செய்யும் திதியும், கொடுக்கும் அன்னதானமும், சந்ததி இல்லாத முன்னோர்களுக்குக் கூட அது சென்றடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் இருந்து தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடைய வேண்டும்.” என வரம் கேட்டார்.
கர்ணனின் இந்த கோரிக்கையை வரமாக அளித்து மகிழ்ந்தார் யமதர்மராஜன் "யார் இந்த பட்சத்தில் தர்ப்பணம் செய்கிறார்களோ, மற்றவர்களுக்கு உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்" என்றார்.
சூரிய புத்திரனான கர்ணன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மஹாளய பட்ச காலத்தில், நாம் எல்லோரும் முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம், அன்னதானம் செய்வதன் மூலமும்,
மேலும் இந்த மஹாளய பட்சத்தில் காலத்தில் காகம், எறும்பு, பசு, நாய் மற்றும் பூனைகளுக்கு உணவளிப்பதின் மூலமும் நம்முடைய பாவங்கள் நீங்கி, நமது முன்னோர்களின் பரிபூர்ணஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மஹாளய பட்ச மகிமை:
நம் முன்னோர்கள் நம்மோடு இருக்கும் இந்த நாட்களில் நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து நமக்கு நல்லாசி வழங்குவார்கள். இந்த நாட்களில் பித்ருக்களை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், நோய், வறுமை முதலானவை நீங்கும் என்கிறது கருடபுராணம்.
"மறந்து போனவனுக்குத்தான் மஹாளய அமாவாசை" என்பார்கள்.’ இந்த சொல்லுக்கேற்ப மூதாதையர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள் வருடந்தோறும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதால் இருபத்தொரு தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்கள்(பித்ருக்கள்) மோட்சம் பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மஹாளய பட்ச நாள்களில் நாம் நம் முன்னோர்களை (பித்ருக்கள்), நினைத்து அவர்களுக்கும் எள்ளும் நீருடன் திதி கொடுத்து, இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து பித்ருக்களின் பரிபூரண அருளாசியைப் பெறுவோம்..!
Leave a comment
Upload