அவள் சிரித்துக்கொண்டாள்! இவனைப் போல ஆள் இருக்கும் வரை நமக்கு ஒரு பிரச்னையும் இல்லை!
பொதுவாக பெண்களுக்கு தான் புகழ்ச்சி பிடிக்கும் என்பார்கள். ஆனால், புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்பதே உண்மை. இவள் ஒன்றும் பெரிதாய் சிரமபட்டமாதிரி தெரியவில்லை. ஊடுருவதை போல் ஒரு பார்வை. அவன் கவனம் இவன் மேல் விழுந்தவுடன் லேசாக பல் வரிசையை காட்டினாள். ஈறுகள் தெரியும் ஒரு மார்க்கமான இவள் சிரிப்பிற்கு ஒன்று மயங்க வேண்டும் இல்லை பயம் வர வேண்டும். அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. தலையை ஒரு மாதிரி சாய்த்து இவளை கூர்ந்து பார்த்தான். இந்த ஏரியாவில் அவன் ஒரு சின்ன செலிபிரிட்டி தான். பலரும் அவனை தம் வீட்டிற்க்கு அழைத்து அழைத்து விருந்து கொடுக்கும் அளவிற்கு கொஞ்சம் பிரபலம். இதனால் அவன் மனதில் ஏற்கனவே சின்ன இறுமாப்பு. இதில் இவள் பார்வை வேறு கொக்கி போட்டவுடன் பயல் பாதி கவுந்து விட்டான். இவள் அவன் கரு கரு நிறத்தையும் குரலையும் பற்றி ஏற்றி விட்டவுடன் தயங்காமல் வாயை திறந்து எல்லாவற்றையும் கொட்டி விட்டான். இவள் நினைத்தது நடந்து விட்டது. நாளை பாட்டை நாளை பார்த்து கொள்ளலாம். சுகமாக உறக்கம் வர அவள் நிம்மதியாக தூங்கினாள்!
சதிகாரி! பல்லைக்காட்டி என்னை ஏமாற்றி விட்டாள்! கடு கடுவென்று வந்தது அவனுக்கு. மாடியில் இருந்து கீழே பார்த்தான். புதிதாக ஒன்றும் இல்லை! வழக்கமான கூட்டம் தான். பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியை பார்த்தான். இவன் எதிர்பார்த்தது அங்கு இல்லை. வழக்கமாக அவள் இவனுக்காக ஏதாவது வைத்து இருப்பாள். இன்று அவளையும் காணோம். நேற்றே பார்த்தான் அவளும் அவள் தந்தையும் ஒரு ஊர்தியில் மூட்டை முடிச்சோடு எங்கோ கிளம்பி கொண்டு இருந்தனர். இனி சில நாள்களுக்கு இவளை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. சரி இவளை விடு, அவளை நினை! அவள் செய்த செயல் சுத்த மோசம். சும்மா பல்லை பல்லை காட்டி வாயை பிடுங்கி விட்டாள். ஆனால் உள்ளூர ஒரு உணர்வு உனக்கு இது தேவை தான் என்றது! நீ மட்டும் நேர்மையாகவா நடந்து கொண்டாய்? சமயம் பார்த்து உன் புத்தியை காட்டவில்லை? அந்த வயதானவள் சற்றே அசந்தபோது நீ செய்தது மட்டும் சரியா? தளர்ந்தவள் என்று கூட பார்க்காமல் காரியம் ஆனால் போதும் என்று நினைத்தாய் அல்லவா? அந்த எண்ணத்திற்கு இது நல்ல பாடம் தான்! சரி, நாளைக்கு எப்படி விடிகிறது என பார்க்கலாம் இருட்டில் முடங்கினான்!
வயசாகி விட்டது! அதுதான் இப்படி! ஆயாசமாக வந்தது கிழவிக்கு! இதுவே ஒரு பத்து வருடம் முன்பு அவன் நம்மிடம் இப்படி நடந்து இருக்க முடியுமா? தெரிந்தவன். ஏரியாக்காரன். எல்லார் வீட்டிலும் சகஜமாய் சென்று வருபவன் என்று நம்பி விட்டதற்கு புத்தியை காட்டிவிட்டான். கண் பார்வை மங்கி, கை கால்கள் தளரவில்லை என்றால் இவனெல்லாம் நம்மிடம் வாலாட்ட முடியுமா? ஒரு சின்ன கம்பு இல்லை கல் இருந்தால் கூட போதும், இவனை போன்றோரை விரட்டி விரட்டி அடிக்கலாம். ஆனால், இன்னிக்கு என்னடாவென்றால் நான் பார்த்துக்கொண்டிரும்போதே கல்தா கொடுத்துவிட்டு போய் விட்டான். போகட்டும். இதெல்லாம் உடம்பில் ஒட்டுமா? தெய்வம் அவனுக்கு தக்க சன்மானம் கொடுக்கும்.
ஆனால் தினமும் இவன் போன்றோருடன் எப்படி மல்லு கட்டுவது? பேசாமல் சமாதானமாக போக வேண்டியதுதான். இவன் தலையை பார்த்தவுடன் தர வேண்டியதை தந்துவிட்டால் நம்மிடம் வெட்டி வம்புக்கு வரமாட்டான். இவன் போன்றோருடன் இந்த வயதில் மல்லு கட்டுவதை விட பேசாமல் ஏதாவது தூக்கி எறிந்து விட்டு போக வேண்டியதுதான். தொல்லை மிச்சம்! சரி, நாளை ஆகவேண்டியதை பார்ப்போம். உளுந்து ஒரு பிடி கூட நனைத்து வைப்போம் என்று தூங்க போனாள்!
என்ன என்று யோசிக்கிறீர்களா? தலைப்பை பாருங்கள்! இன்னும் புரியவில்லை என்றால் நான்கு வார்த்தைகள்: பாட்டி, வடை, காக்கா, நரி. இப்போது மீண்டும் முதலில் இருந்து படியுங்கள்!
Leave a comment
Upload