அவனது காதலி வனத்தின் நடுவே பூத்த காட்டு மலர்! .
அந்தக் காட்டு மலரை விரும்பும் காதலன் அக்காட்டு மலரை எந்நேரமும் சூட விரும்புகிறவன் .
ஒருநாள் காதலன் போருக்குச் சென்றான்.
போர் நடக்கும் நாட்களில் அவன் உள்ளமெல்லாம் அவளே நிறைந்திருந்தாள். .
பிரிவு காலத்தில் அங்கே நாயகி சொல்ல முடியாத துயருற்று ,சோர்ந்து கிடக்கிறாள்.காதலன் வரவை எண்ணி வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறாள்.
ஒரு வழியாய் போர் முடிந்தது.
போர் முடிந்த கையோடு காதலன் திரும்பி வருகிறான். காதலி வாழும் வனம் தேடி அவனது தேர் பறக்கிறது .
அவன் கண் முன் காதலி இருக்கும் வனமும்,அவள் ஊரும் காட்சியாக தெரிகிறது.
காட்டு கிராமத்தில் அவள் இருக்கும் சூழலை கற்பனைக் காட்சியாக பார்த்து அதை தேரோட்டியிடம் கூறுகிறான்
"நண்பா கேள், என் மேல் மாறாத அன்பு கொண்டு என்றும் தன் நெஞ்சில் என்னை நிறுத்தி வாழ்கிறாள் என் தலைவி..
அவள் இருக்கும் ஊரைப் பற்றி சொல்கிறேன் கேள் .
அடர்ந்த கானகம் சூழ்ந்த இடத்தில் அவள் ஊர் உள்ளது . முல்லை மலரின் மென் அரும்புகள் அவ்வூரில் எங்கும் மலர்ந்திருக்கும் .
அங்குள்ள வேட்டுவர்கள் பகலில் உடும்பைக் கொன்றும் ,தவளையை அகழ்ந்து எடுத்தும் நீண்ட கோடுகளைக் கொண்ட புற்றுகளைத் தோண்டி அதில் உள்ள ஈசல்களை பிடிப்பர்.
முயல்களை வேட்டையாடி கொண்டு வருவார்கள் .
வேட்டையாடிக் கொண்டு வந்த பல்வேறுபட்ட பண்டங்கள் அடங்கிய மூட்டையுடன் ,வேட்டைக்கருவிகளையும் தன் வீட்டில் போட்டு விட்டு கள்ளுண்டு மயங்கி இருப்பர்.
என் தலைவியோ என்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டு இருப்பாள். அவளை நான் விரைந்து சென்று காண வேண்டும் “ என்றான்
கபிலர் வரையும் இந்த கானக காட்சியை வரி ஓவியமாக்கும் பாடல் இதுவே. .
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே
நற்றிணை 59
காட்டில் இருக்கும் வேடுவர்கள் வாழ்வாதாரமாக வேட்டை ஆடியும் உடும்பு, தவளை ,முயல், ஈசல் போன்ற சிற்றுயிர்களை உணவுக்காக பிடித்து கொண்டு வருவதும் அக்கால வழக்கமாக இருந்திருப்பது இப்பாடல் வரிகளால் தெரிய வருகிறது .
இன்றும் உடும்பு, ஈசல் , முயல்களைப் பிடித்து உணவுக்காக பயன்படுத்தும் மக்கள் அவர் வழி வந்தவர்களாக இருக்க வேண்டும் .
இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்பது எத்தனை உண்மை !
தொடரும்
Leave a comment
Upload