சக்கர பந்தத்தை பற்றி நமது பரணிதரன் தொடர்கிறார். சக்கர வடிவில் சுழற்சி முறையில் செய்யுள்களை ஏற்றுவது சக்கர பந்தமாகும். இவற்றை நான்காரைச் சக்கரம் (நான்கு + ஆரை (ஆரம் உள்ள) + சக்கரம்),
ஆறாரைச் சக்கரம் (ஆறு + ஆரை (ஆரம் உள்ள) + சக்கரம்), எட்டாரைச்சக்கரம் (எட்டு + ஆரை (ஆரம் உள்ள) + சக்கரம்) என்று மூன்று விதமாக உருவாக்கியுள்ளனர். சக்கரத்தின் மையத்தில் ஒரு எழுத்தை பொதுவாக வைத்து ஒவ்வொரு அடியிலும் அந்த எழுத்து வருமாறு உருவாக்கி, ஆரையில் உள்ள எழுத்துக்கள் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகும், இடமிருந்து வலமாகும், வலமிருந்து இடமாகும், ஏனைய எழுத்துக்கள் சக்கர சுழற்சிக்கு ஏற்ப சுழன்று வந்து பல்வேறு அடிகளில் வைப்பது சக்கர பந்தத்தின் இலக்கணமாகும்.
இந்த இலக்கணத்தை நாம் சுலபமாக புரிந்து கொள்வதற்கு முதலில் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்.
இதன் செய்யுள் பின்வருமாறு உள்ளது :
மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே
இந்த செய்யுளின் பொருள் :
மேரு மலையை சாபமாக (வில்லாக) சிவபெருமான் தன்னுடைய கைகளில் வைத்துள்ளார் (மேரு சாபமும் மேவுமே). அவரது உணவாக ஆலகால விஷத்தை சாப்பிடுகிறார் (மேவுமே உணவு ஆலமே). அவருடைய பூதகணங்கள் மற்றும் பரிகாரங்கள் மிகவும் மேன்மை பொருந்தியதாக இருக்கின்றன (மேலவாம் அவன் ஆயமே). அவருடைய திருவடியை என்றுமே விடாது பற்றிக் கொண்டு சார்ந்து இருங்கள். (மேய் அனான் அடி சாருமே)
மேலே இரண்டு விதமான படங்கள் உள்ளன. இந்த செய்யுளை இப்படி பல்வேறு விதமாக நம்மால் மாற்றி எழுத முடியும். இடது பக்கத்தில் உள்ள படத்தில், முதல் ஆரை மேலிருந்து கீழாக ஆரம்பித்து, வலது புறமாகச் சென்று, பின்னர் இடது புறமாக முடிகிறது. அதே அடுத்த படத்தில், முதல் ஆரை இடது புறமாக ஆரம்பித்து, மேலே சென்று, வலது புறமாக திரும்பி, பின்னர் கீழே வருகிறது. ஒரு சக்கரத்தின் சுழற்சியை போன்று ஒரு வடிவத்தை இது நமக்கு கொடுக்கிறது. இதில் நான்கு ஆரைகள் உள்ளதால், இதற்கு நான்காரைச் சக்கரம் என்று பெயர். நான்காரைச் சக்கரத்தின் மற்றும் சில எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன.
வான மாதிய வானவா
வான வாமனு வானவா
வான வாமன மானவா
வான மானிற மானவா
இதன் பொருள் : வானம் என்னும் ஆகாயத்தை முதலாக கொண்ட பஞ்சபூதங்களாக இருப்பவனே (வானம் ஆதிய வானவா). விண்ணில் இருக்கக்கூடிய தேவர்களுக்கு பிடித்தமான மனு குலத்தில் அவதரித்த ராமனே (வான் அவா மனு ஆனவா). பெருமை மிகுந்த வாமனராக அவதாரம் எடுத்தவரே (வான வாமனம் ஆனவா). வானத்தைப் போன்ற நீல நிறத்தில் காட்சியளிப்பவரே (வானமா(கிய) நிறம் ஆனவா). இந்த கவி முழுவதுமாக திருமாலின் புகழினை விவரிக்கிறது.
தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஒஒபொருதலைக்க-வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது
இதன் பொருள் : சகலருக்கும் தெய்வமாக இருக்கக்கூடிய தேவா, திருமோகூரில் (மதுரையில் இருக்கக்கூடிய திவ்ய தேசங்களில் ஒன்று) கோவில் கொண்டிருக்கும் காளமேகப் பெருமானே, உண்மை பொருளான சக்கரவர்த்தியே (இராமபிரான்), ‘மா’ என்று அழைக்கக்கூடிய திருமகளான லட்சுமி தேவியால் மோகிக்கப்படுபவனே (அன்பு செய்யப்படுபவனே), பூவாளி என்று அழைக்கப்படும் மலர் அம்புகளை கொண்டிருக்கும் மன்மதனின் தொல்லைகள் என்னை ஆட்கொண்டிருக்கிறது. அது நீங்குவதற்கு (காமம் முதலிய ஆறு வகையான துன்ப செயல்கள் நீங்குவதற்கு) அருள் புரிய வேண்டும். உன்னை இவ்வகையான துன்பச் செயல்கள் தீண்டுவதில்லை. ஆனால் மன்மதனின் வெற்றி முரசான கடல் பூமகள் போல் இருப்பவர்களுக்கு துன்பமாக இருக்கிறது. தண்மையை கொண்ட குளிர்ந்த சந்திரனின் கதிர்கள் கூட சூரியனின் கதிர்கள் போல வெம்மையை எனக்கு கொடுக்கிறது. இதிலிருந்து என்னை தடுத்தாட் கொள்வாயாக.
இந்த செய்யுளில் நாம் சில விஷயங்களை புதிதாக காணலாம். முதலில் செய்யுளின் நடுவில் திருமலை என்ற சொல் வருமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இது திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடேச பெருமாளை நினைவு கூறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இதில் ‘ஒஒ' என்று ஓகார அளபெடை அளபெடுத்து வந்துள்ளது. செய்யுளின் ஓசை குறையும் பொழுது அதை சரி செய்வதற்காக இந்த அளபெடையை புலவர் பயன்படுத்தி உள்ளார்.
காயு மாலழி மேதகா
காத மேமலை நீளகா
காள நீடுமை நாயகா
காய நாமன மாயுகா
இதன் பொருள் : காய்கின்ற மயக்கத்தை (ஆலகால விஷத்தை) அழிக்கின்ற மேதகைமையினை (மேதா விலாசம் / உயர்ந்த ஞானம்) உடையவரே (காயும் ஆல் அழி மேதகா). காத தூரம் (சுமார் 16 கிலோமீட்டர்) உள்ள நீளமான மேன்மை பொருந்திய கீரி மலையில் இருப்பவனே (காத மேமலை நீளகா). கருமை நிறத்தை உடைய உமையம்மையின் நாயகனே (காள நீடு உமை நாயகா). காயம் (உடல்), நா (நாக்கு), மனது மற்றும் ஆயுளை காத்து அருள்வாயாக (காய நா மனம் ஆயு(ள்) கா(காப்பாற்று))
ஆறாரைச் சக்கர பந்தம் மற்றும் எட்டாரைச் சக்கர பந்தம் ஆகிவற்றை வரும் வாரம் தொடர்வோமே என்று விடை பெற்றுக் கொண்டார்.
Leave a comment
Upload