தொடர்கள்
அரசியல்
மதுவிலக்கு - ஆட்சியில் பங்கு சாத்தியமா  ? ?- விகடகவியார்

20240819193531940.jpg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும்" கத்திரி வெயில் மாதிரி சுட்டெரிக்கிறது , நன்னாரி சர்பத் சாப்பிடுங்கள் "என்று ஆபீஸ் பையன் சில்லென்று எடுத்து வந்து கொடுத்தார்.

ஆபீஸ் பையனுக்கு கண்ணால் நன்றி சொல்லிவிட்டு உறிஞ்சி விட்டு நிமிர்ந்த விகடகவியார் "திருமாவளவன் மீசையை முறுக்கி கொண்டிருக்கிறார் போல் ஒரு புகைப்படம் இருந்தால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் ஆரம்பித்ததும் அவர் திருமாவளவன் மேட்டருக்கு வருகிறார் என்பது தெரிந்தது.

நாம் "படம் எல்லாம் தயாராக இருக்கிறது "என்று சொன்னதும்

"திருமாவளவன் திமுக உறவுரொம்ப நாட்களாகவே சுமூகம் இல்லை. வேங்கை வயல் விவகாரத்தில் ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று புகார் சொன்னார்.

தமிழ்நாட்டில் தலித் முதல்வர் வாய்ப்பில்லை என்று ஆதங்கப்பட்டார். கடைசியாக மது ஒழிப்பு மாநாடு என்று அறிவித்தார்.

கள்ளச்சாராயம் ஒழிப்புக்கு மதுவிலக்கு ரத்து என்பது சரியான முடிவல்ல என்று விமர்சனம் செய்தார்.

இந்த மாநாட்டுக்கு அதிமுகவை அழைப்போம் என்றார்.

அமெரிக்காவில் இருக்கும் போதே முதல்வருக்கு இந்த தகவல் எல்லாம் சுட சுட சொல்லப்பட்டது.

அப்போது முதல்வர் திருமாவளவன் கருத்துக்கு யாரும் எந்த கருத்தும் பதிலாக சொல்ல வேண்டாம்.

சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கேட்பதற்காக அவர் நடத்தும் நாடகம் இது. அதேபோல் ஆட்சி அதிகாரம் பற்றிய அவர் பேசுகிறார்.

அதிமுகவுடன் கூட்டணி என்றாலும் அவர்கள் என்ன ஆட்சியில் பங்கு தரப் போகிறார்களா? அதற்கெல்லாம் வாய்ப்பில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் இப்போது எந்த பதிலும் வேண்டாம் "என்று சொல்லி கட்சிக்காரர்களை அடக்கி வைத்து விட்டார்.

திமுக எந்த ரெஸ்பான்ஸும் செய்யவில்லை.

அதிமுகவும் கண்டு கொள்ளவில்லை என்று தெரிந்ததும் நாம் ராங் ரூட்டில் பயணிக்கிறோமோ என்று பயந்து போய் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டார். முதல்வரும் அவரை வரச் சொன்னார்.

திருமாவளவன் வரும்போது மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வரை சந்தித்தவுடன் மதுவிலக்கு ஏன் அவசியம் என்று புள்ளி விவரங்கள் கூடிய நான்கு பக்க கடிதத்தை முதல்வரிடம் தந்தார்.

முதல்வர் அதை மேலோட்டமாக வாங்கி படித்துவிட்டு "உங்களுக்கு திமுகவுடன் கூட்டணி பிடிக்கவில்லையா ? என்று கேட்டதும் திருமாவுடன் வந்த ரவிக்குமார் அவசர அவசரமாக அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்க திருமா "எங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை அமைச்சர்கள் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை, காவல்துறை, பாஜக புதிதாக கட்சி தொடங்கிய விஜய் கொடிக்கம்பம் நடும்போது கூட எந்த பிரச்சனையும் செய்வதில்லை. ஆனால், நாங்கள் கொடி கம்பம் நட்டால் பிரச்சனை செய்கிறார்கள் கைது செய்கிறார்கள் என்று புகார் பட்டியல் வாசிக்க "இவ்வளவு தானே இதை எல்லாம் நீங்கள் என்னிடம் நேரடியாக சொன்னால் நான் செய்து தரப் போகிறேன்.

இனி அப்படி எதுவும் நடக்காது நான் பார்த்துக் கொள்கிறேன்.

என்னை தொடர்பு கொள்ள முடியாவிட்டால் நீங்கள் அமைச்சர் வேலுடன் பேசுங்கள் அவர் பார்த்துக் கொள்வார் என்று அருகில் இருந்த அமைச்சர் வேலுவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார்.

வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று முதல்வர் அழுத்தி கேட்க மது ஒழிப்பு மாநாட்டுக்கு நீங்கள் வரவேண்டும் என்று திருமா கோரிக்கை வைக்க நான் வரமாட்டேன்,

என் சார்பாக திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் இருவரும் கலந்து கொள்வார்கள் என்று சொல்லி அனுப்பினார் முதல்வர்.

ஆட்சி அதிகாரம் விஷயத்தில் திருமாவளவன் எங்கள் கட்சியில் ஏற்கனவே சொன்னது தான் என்று திரும்பவும் அதை சொல்லி இருக்கிறார்.

கார்த்திக் சிதம்பரமும் ஆட்சியில் பங்கு என்று கேட்கிறார் இவையெல்லாம் இவர்கள் ஏதோ பேசுகிறார்கள் என்று நினைக்கக் கூடாது.

நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அதே சமயம் அதிமுகவும் கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்காது எனக்குத் தெரிந்து மீண்டும் பாரதிய ஜனதா, பாமக, தேமுதிக, அதிமுக கூட்டணி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்தக் கூட்டணியில் திருமாவுக்கு எப்படி இடம் கிடைக்கும் ? எனவே அதிக இடங்களில் போட்டி போடுவதற்காக அவர் நம்ம இப்படி மறைமுகமாக மிரட்டுகிறார். தேர்தல் நேரத்தில் நாம் பார்த்துக் கொள்வோம்.

கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை நாம் இந்த முறை அதிக இடங்களில் போட்டி போட போகிறோம். நம் பேச்சை கேட்பவர்களுக்கு கூட்டணியில் இடம். இல்லையென்றால் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகட்டும் இதுதான் என் முடிவு. இப்போது நாம் எதுவும் பேச வேண்டாம் முடிஞ்சவரை கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து செல்வோம் என்று சொல்லிவிட்டு அதற்காகத்தான் திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடத்த திட்டமிட்டு அந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளையும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

"அப்படி என்றால் முதல்வர் தெளிவாக இருக்கிறார் என்கிறீர்" என்று நாம் சொன்னதும் அப்படியெல்லாம் இல்லை உஷாராக இருப்பது போல் பாவனை செய்கிறார் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு விகடகவியார் புறப்பட்டார்.