தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரிக்கல் என்ற ஊரில் அமைந்துள்ள ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் 1800 ஆண்டுகள் பழமையானது. பரிகலாசூரனை வதைத்த இடம் என்பதால் பரிகலபுரம் என வழங்கி வந்து இன்று பரிக்கல் என மருவியுள்ளது. உக்கிர மூர்த்தியான நரசிம்மர் இங்கு மிகவும் சாந்த சொரூபமாக உள்ளார். இந்தியாவிலேயே இந்த கோயிலில் தான் நரசிம்மரை லட்சுமியும், லட்சுமியை நரசிம்மரும் ஆலிங்கனமும் செய்தபடி காட்சியளிக்கின்றனர். இந்த அற்புதத் தரிசனம் தரும் லக்ஷ்மி நரசிம்மரை மனதார வழிபட்டால், வாழ்வில் மங்கல காரியங்களை நடத்தித் தந்தருளுவார் என்பது நம்பிக்கை. முஸ்லிம்கள், கிறிஸ்தவர் இத்தலத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வது மிகவும் குறிப்பிடத்தக்கது.
பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை விரதம் இருந்து வழிபட்டால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஸ்தல புராணம்:
ஸ்ரீநரசிம்மபெருமான் பரிகலாசூரன் என்னும் அசுரனை வதம் செய்த திருத்தலம் தான் பரிக்கல் என்ற புகழினைப் பெற்றது.
தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் மக்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். இந்த மூன்று அசுரர்களையும் அவர்களது முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார். இந்தத் திரிபுர தகனத்திற்குத் திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திருவதிகைப்புராணம்.
இந்த மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்வின் போது தப்பித்துச் சென்ற இந்த பரிகலாசூரன், கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றான திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் பகுதிக்குள் மறைந்து கொண்டான் என்கிறது ஸ்தல புராணம். இப்பகுதியைத் திருமால் பக்தனான வசந்தராஜன் என்னும் குறுநில மன்னன் ஆண்டுவந்தான். பரிக்கல் பகுதியும் இம்மன்னனின் ஆட்சிக்குப்பட்டிருந்தது.
நரசிம்ம மூர்த்திக்கு வசந்தராஜன் இங்கே கோயில் கட்ட விரும்பி, அதற்கான திருப்பணிகளையும் மேற்கொண்டான். அந்த தருணத்தில் தான், பரிகலாசூரன் தன் மாயப்படையுடன் இங்கு வந்து தொடர்ந்து தொந்தரவு செய்தான். அந்த சமயத்தில் மன்னன் வசந்தராஜன், இராஜகுருவான வாமதேவரிடம் உத்தரவும் அதற்குண்டான ஆலோசனையும் கேட்டான். இந்த முறை வேறொரு இடத்தில் கோயில் கட்ட இடம் தேர்வு செய்து கொடுத்தார் இராஜகுரு. மேலும் கோயில் கட்டுவதற்கான சாஸ்திர வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார். வசந்தராஜா தனது குருவின் வழிகாட்டுதலின்படி இந்த இடத்தில் கடுமையான தவம் மேற்கொண்டார். மன்னரின் வேண்டுதலுக்கு ஏற்ப நரசிம்மர் இங்குத் தோன்றி அசுரனை வதம் செய்தார்.
நரசிம்மரின் கோபமான வடிவத்தை மட்டுமே பார்த்த வசந்தராஜா, “என்னோடு தவத்தில் ஈடுபட்ட என் குருநாதர் வாமதேவரையும், மற்ற முனிவர் பெருமக்களையும் உயிர்த் தெழச் செய்தும், திருமகளுடன் தாங்கள் இங்கே சாந்த மூர்த்தியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்” என வேண்டுகோள்விடுத்தார். அதன்படியே மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, மனம் மகிழ்ந்த மகாலட்சுமி நரசிம்மரின் மடியில் அமர்ந்து அவரின் கோபத்தைத் தணித்து, சாந்தமூர்த்தியாகக் காட்சி தந்தருளி மன்னன் வசந்தராஜனையும், வாமதேவரையும், மற்ற முனிவர் பெருமக்களையும் ஆசீர்வதித்தார். அதுமட்டுமின்றி, லக்ஷ்மி நரசிம்மராக அங்கேயே கோயில்கொண்டார்.
மகிழ்ச்சி அடைந்த வசந்தராஜா, இந்த அசுரனால்தான் தனக்கு சாந்தமூர்த்தியான நரசிம்மரைத் தரிசிக்கும் வாய்ப்பை பெற்றதால், இந்த இடத்திற்கு பரிகலாசூரன் என்ற அரக்கனின் பெயரைச் சூட்டுமாறு வேண்டினார். எனவே, இந்த இடம் பரிகலபுரம் என்றாகி, பின்னர் பரிக்கல் என மருவியுள்ளது. இக்கோயில் உற்சவமூர்த்தி திருவுருவச் சிலையின் அடிப்பாகத்தில் பரிகல ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
ஸ்தல வரலாறு:
இக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இந்தக் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும் பல கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கல்வெட்டுகள் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிகிறது. அவற்றில் முக்கியமானது மீன் வடிவ கல்வெட்டுகள், இது ஒன்று முதல் இரண்டு அனுமானங்களை உருவாக்குகிறது: ஒன்று, 'மீன்' சின்னமாக இருந்த பாண்டிய மன்னர்கள் இந்த கோவிலுக்குப் பெரிய அளவில் பங்களித்திருக்கலாம். மற்றொன்று, வசந்தராஜாவின் கதை, ஒரு நாள் இரவு தனது கனவில் இந்த இடத்திற்கு அருகில் மீன்களைக் கண்டார் (அசுரனுக்கு எதிரான அவரது போரில் வரவிருக்கும் வெற்றியின் அறிகுறி). மற்ற கல்வெட்டுகளைப் பார்க்கும் போது, பல்லவ மன்னன் கோப்பேரிச்சிங்கன், திரு புவனம் சக்கரவர்த்தி கோனேரிமை கொண்டான் போன்றவர்களின் பங்களிப்பைப் பற்றியும் நாம் அறிகிறோம். முதலாம் ராஜராஜ சோழன் பரிக்கல் கோயிலின் திருக்குளத்தை வெட்டி இத்தலத்தில் திருப்பணி செய்துள்ளார். இத்திருக்கோவிலின் குடமுழுக்கைப் பல்லவ அரசர்கள் நாயக்க மன்னர்கள் நிறைவேற்றியதாகவும் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன. மற்றொரு கல்வெட்டின் மூலம் அருகிலுள்ள கிராமங்களான திருவெண்ணை நல்லூர், அனத்தூர், சித்தனூர் முதலிய கிராம மக்களுக்கு வரி தள்ளுபடியை வழங்கியதாகவும், அக்கிராம மக்கள் அந்த தொகையை இத்திருக்கோவிலைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவும் மற்றும் கோவில் திருப்பணிக்காகவும் பயன்படுத்தியதாகச் சாசனம் இங்கே உள்ளது. அசல் கோயில் வசந்தராஜாவால் கட்டப்பட்டாலும், முகலாய படையெடுப்பின் போது அது அழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர் கர்நாடக அரசர் வீர நரசிம்மர் இந்த கோவிலை மீண்டும் கட்டியதாகத் தெரியவருகின்றது.
ஸ்தல அமைப்பு:
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் இரண்டு நதிகளுக்கு இடையில் (தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு) அமைந்துள்ளது. ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் இக்கோயில் ஸ்ரீரங்கம் போல் சிறப்பு மிகுந்தது.
நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது. இராஜகோபுர நுழைவாயிலைக் கடந்ததும் ஆஞ்ச நேயர், விநாயகர் மற்றும் நாகர் சிலைகளும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது. கருவறைக்குச் செல்வதற்கு முன் பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளது. கொடிமரத்தின் முன்னே கருடாழ்வார் சந்நிதி கருவறையை நோக்கிய வண்ணம் இருக்கிறது.
கருவறையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். இவர் சுயம்பு மூர்த்தியாவார். பொதுவாக உக்கிர மூர்த்தியான நரசிம்மர் இங்கு மட்டும்தான் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த கோலத்தில், நரசிம்மரை மகாலட்சுமி தன் வலக்கையாலும், மகாலட்சுமியை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடியும் இருவரும் பக்தர்களைப் பார்த்து ஆசீர்வதித்தபடியும் அருள்பாலிக்கின்றனர். கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளார். மற்றும் லக்ஷ்மி நரசிம்ம வடிவமாக இருக்கும் உற்சவ மூர்த்தியும், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நரசிம்மரின் இரண்டாவது உற்சவ மூர்த்தி உள்ளது.
இக்கோயிலின் ஸ்தலவிருட்சம் மகிழ மரம்.
ஸ்தல தீர்த்தம் கருட தீர்த்தம் மற்றும் கோயிலுக்குள் நாககூபம் எனப்படும் கிணறு உள்ளது. இந்த நீர் பல நோய்களைக் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
ஸ்தல சிறப்புகள்:
நரசிம்மர் மீது, பிரகலாதனைப் போன்றே மிகுந்த பக்தியும் அளவற்ற அன்பும் கொண்டிருந்த மன்னர் வசந்தராஜன். பரிகலாசுரன் என்னும் அசுரனை வதைத்து வசந்த ராஜனுக்கு நரசிம்மர் அருள் புரிந்த அரிய ஸ்தலம் பரிக்கல்.
இக்கோயில் கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலை வால் நுனியில் மணியுடன் இருப்பது மிகவும் தனித்துவமானது.
வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரே சந்நிதியில் இருப்பது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும்.
இங்குள்ள மற்றொரு சிறப்பு என்னவெனில், மத ரீதியாக இந்துக் கோவிலாக இருந்தாலும், பிற மதத்தினரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் வழிபடுகிறார்கள்.
திருவிழாக்கள்:
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் சிறப்புத் திருமஞ்சனமும் கோயிலுக்குள் சந்நிதி ஊர்வலமும் நடைபெறும். சித்திரையில் பிரம்மோத்சவம் (10 நாட்கள்)
வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி, வைகாசி கருட சேவை, வசந்த உத்ஸவம், நம்மாழ்வார் திருவிழா.
ஆனியில் கோடை விழா மூன்று நாட்கள்.
ஆடியில் ஆண்டாள் திருஆடிப்பெருவிழா (10 நாட்கள்)
ஆவணியில் திருப்பவித்ரோத்ஸவம். கிருஷ்ணஜயந்தி
புரட்டாசியில் நவராத்திரி உத்ஸவம் (10 நாட்கள்)
ஐப்பசியில் டோலோத்சவம் ஊஞ்சல் திருவிழா (3 நாட்கள்) தீபாவளி
கார்த்திகையில் தீபத்திருவிழா, அனுமத்ஜெயந்தி
மார்கழியில் வைகுண்ட ஏகாதசி , பகல் பத்து, இராப்பத்து உத்ஸவம், ஆங்கில புத்தாண்டு
தையில் ஆண்டாள் திருக்கல்யாணம், தைப்பூசம்,
மாசியில் தவண உற்சவம், மாசித் திருவிழா
பங்குனியில் தெலுங்கு புத்தாண்டு தினம், பங்குனி உத்திரம்,
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
இந்த கோயிலுக்கு வந்து தரிசிப்பவர்களுக்குத் திருமணத்தடை நீங்கும். பதவி உயர்வு மற்றும் பதவி பறிபோனவர்கள் விரதம் இருந்து பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வந்து வழிபட்டுச் சென்றால் அவர்களுக்கு இழந்த பதவி மீண்டும் கிடைக்கும் என்றும், நீண்ட இழுபறியில் இருக்கும் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
நேர்த்திக்கடனாக இத்தலத்தில் எண்ணை, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம். விரதம் இருந்து பரிக்கல் கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வைத்தும், பக்த ஆஞ்சநேயருக்கு முன்பு நெல் கொட்டி அதில் எழுதி வைத்து வழிபட்டால், பக்தர்களின் நியாயமான குறைகள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோயில் திறந்திருக்கும்.
மார்கழி மாதம் காலை 4.30 முதல் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 முதல் 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
விழுப்புரம் – உளுந்தூர்பேட்டை சாலையில் (திருச்சி-சென்னை) விழுப்புரத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் கெடிலம் கூட்டு ரோட்டுக்கு முன்பாக வலதுபுறம் திரும்பி சுமார் 3 கி.மீ. தொலைவில் பரிக்கல் உள்ளது.
உளுந்தூர் பேட்டை, விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி பரிக்கல்லுக்கு இருக்கிறது. கெடிலம் பகுதியில் இருந்து இத்தலத்துக்கு வர மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கிறது.
பதவி உயர்வு தரும் பரிக்கல் ஶ்ரீ லட்சுமி நரசிம்மரைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
https://youtu.be/sPqce0U-BpM?si=K9hLvnqdJoTToDOq
Leave a comment
Upload