காதலிலும் ,போரிலும் முக்கிய அங்கமாக விளங்குவது தூது
அந்நாள் முதல் இந்நாள் வரை தூதில்லாத காதல் இல்லை
தோழி ,தோழன் , பாணன் ,பாணினி முதல் காகம் ,கிளி ,அன்னம் ,நிலவு என்று காண்பவரை எல்லாம் தூதாக அனுப்பும் தவிப்பு காதலில் இருக்கும் .
சங்க இலக்கியங்களில் 150க்கும் மேலான தூது வகைகள் உண்டு .
"தாதி தூதோ தீது தத்தை தூது ஓதாது" என்ற காளமேகப் புலவரின் பாடலை தேவிகாவும் , எஸ்.எஸ்.ஆரும் நடித்த திரைப்படத்தின் காட்சியை நம் தலைமுறை கண்டு ரசித்தது .
இப்போது, நம் நற்றிணை நாயகி ஒருத்தி நாரையைத் தூது அனுப்புகிறாள் .
தலைவன் நெய்தல் நிலத்தில் வாழ்பவன் . எனவே கடற்புறத்து நாரையை அவள் தூதாக செலுத்துவதில் வியப்பில்லை .
"என் தலைவன் இருக்கும் கடற்கரை துறையில் ஞாழல் மரங்கள் இலைகள் தழைக்க நிற்கின்றன .தழை ஆடை அணிபவர்கள் அந்த இலைகளைப் பறித்துச் செல்வர்
அந்த ஞாழல் மரங்களின் புறப் பகுதியினை நீரலைகள் தழுவிச் செல்லும்
அங்கே தாழை மரங்கள் நிறைந்திருக்கும் . அந்த நெய்தல் நிலத்து தலைவனிடம் என்னைப் பற்றி சொல்வாயா ?
கரிய கால்களை உடைய வெண்ணிற நாரையே , சுற்றத்தாருடன் நீர்ப்பரப்பின் மேல் பறந்துச் செல்லும் நீ , என் குறையைக் கேள் ,
வெண்சிறகுகளுடன் புலால் உண்ணும் உன் தோழமைகளுடன் நீ மகிழ்ந்திருக்கும் இந்நேரத்தில் நான் கூறுவதையும் கேள்.
இந்த மாலைப் பொழுது எனக்குத் துன்பம் தருவதாக உள்ளது .என் தலைவனின் பிரிவால் நான் படும் துன்பத்தை அறிந்தால் நீ என் மேல் கருணை கொள்வாய்
நீ அவரிடம் என் குறைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்" என்று சொல்லும். . சேந்தங்கண்ணனாரின் அழகிய வரிகளில் எழுந்த நெய்தல் திணைப் பாடல் இது
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினை ஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கருங் கால் வெண் குருகு! எனவ கேண்மதி:
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;
அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!
-நற்றிணை 54
நாரையைத் தூதாக அனுப்பும் மற்றொரு பாடல் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது . இப்பாடலை நாம் சிறுவயதில் படித்து மகிழ்ந்திருக்கிறோம்
சத்திமுத்தப்புலவர் என்ற ஏழைப் புலவர் தன் மனைவிக்கு அனுப்பும் தூது இது. "உணவின்றி ,உடையும் இன்றி நான் குளிரில் துன்புறுகிறேன்" என்று நாராய் ,நாராய் செங்கால் நாராய் என்று தொடங்கும் பாடல்தான் அது.
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
.............
.........................
எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"
இந்தப்பாடலை கேட்ட மாறன் வழுதி அரசன் புலவருக்கு பொன்னும் , மணியும் தந்து அவரது வறுமையை நீக்கினான் என்பது இப்பாடலின் பின் இருக்கும் வரலாறு .
"கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழுவி"
என்ற தொடர்களை இப்பாடலில் இருந்துதான் பயன்படுத்துகிறோம் .
இணைந்திருங்கள் ,
மேலும் தமிழ்த் தேன் பருகுவோம்
தொடரும்
Leave a comment
Upload