தொடர்கள்
அரசியல்
நாம் தமிழர் கட்சி - விகடகவியார்

20240509090625987.jpg

நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதல் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தார், கூட்டணி கிடையாது. வேட்பாளரில் 50 சதவீதம் பெண்கள் அதை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் வரை உறுதியாகவும் இறுதியாகவும் பின்பற்றினார். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி பற்றிய கேள்விகளுக்கு விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க தயார் 'ஐ அம் வெயிட்டிங் 'என்றார் சீமான். அதுக்கு விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அதே சமயம் நேற்றைய தினம் பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கை பெற்று மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியைப் பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் என்று தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் விஜய் . அதேசமயம் 40-க்கு 40 என்று திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு விஜய் எந்த வாழ்த்தும் சொல்லவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.

பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை இந்த தேர்தலில் சீமான் கட்சி பெற்ற வாக்குகள் மாநில கட்சியாக தகுதி பெரும் அளவுக்கு செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அந்தக் கட்சி வளர்ந்து இருக்கிறது என்பதை அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் சொல்கிறது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் 8.19 % வாக்குகள் பெற்று மாநில கட்சி என்று அங்கீகாரத்தை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. ஒரு கட்சி மாநில கட்சி அந்தஸ்து பெற மாநிலத்தில் மொத்த செல்லுபடி ஆகும். வாக்குகளில் எட்டு சதவீதத்துக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி,நாகை, புதுச்சேரி, திருச்சி ஆகிய ஐந்து தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.இதைவிட அதிசயம் பிளவு கோடு சட்டப்பேரவை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு நாம் தமிழர் கட்சி முன்னேறியது.

`2019 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.9 % சதவீத வாக்குகளைப் பெற்று பெற்றிருந்த நிலையில் தற்போது 8.19 % வாக்குகள் பெற்று முன்னேற்றம் கண்டு இருக்கிறது.இது முழுக்க முழுக்க சீமானின் தனிமனித உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் மாற்றப்பட்டு கடைசி நேரத்தில் ஒலிவாங்கி (மைக்) சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சின்னம் பிரபலமாகுமோ என்ற சந்தேகம் இருந்தது. எங்கள் சின்னம் இருந்தால் தான் அரசியல் தலைவர்கள் பேச முடியும் என்று அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்தார் சீமான். நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து தற்சமயம் கிடைத்துவிட்டது. கூட்டணிக்கும் அவர் சிக்னல் கொடுத்து விட்டார் வரும் தேர்தலில் அவரை கூட்டணியில் அழைக்க அரசியல் கட்சிகள் போட்டி போடும். ஏற்கனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க எடப்பாடி முயற்சி செய்தார் சீமான் மறுத்துவிட்டார். இப்போது அவரே கூட்டணிக்கு தயார் என்று சொல்லிவிட்டார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு சில வெற்றி வேட்பாளர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.