தொடர்கள்
பொது
இணையில்லா பேருள்ளம் - புளியறை தம்பதி -மரியா சிவானந்தம்

20240201195521439.jpg

"திக் திக்" என்று நம் இதயங்கள் துடித்தன ,அந்த செய்தியைக் கேட்டவுடன் ..

இந்த வாரத்தில் தென்காசி , செங்கோட்டை அருகே நடந்த அந்த லாரி விபத்தைப் பற்றி தான் சொல்கிறேன் . நம் அனைவரையும் அசர வைத்த அச்சம்பவம் ஒரு எளிய, வயது முதிர்ந்த தம்பதியரின் வீரம் மிக்கச் செயலை நாடே வியந்துப் பாராட்டிக் கொண்டு இருக்கிறது ,

திரைப்படத்தில் வரும் காட்சி போல இருக்கிறது அந்த நிகழ்ச்சி .

நள்ளிரவில் ரயில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விட, அந்த தம்பதியர் எதிரில் வரும் ரயிலை நிறுத்தி , ஒரு பெரும் விபத்தைத் தடுத்து, பல பயணிகளின் உயிரைக் காத்துள்ளனர். சாதுரியம் மற்றும் அசாத்திய ,துணிச்சல் கொண்ட அந்த தம்பதியர் தென்காசி மாவட்டம் , செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் புளியறை கிராமத்தில் வசிக்கும் சண்முகையா , வடக்குத்தி அம்மாள் .

இனி வடக்குத்தி அம்மாளுடன் ஒரு நேர்க்காணல்

உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க அம்மா

"என் பெயர் வடக்குத்தி , என் கணவர் சண்முகையா . நாங்க புளியரை ஊரில், ரயில்வே லைனை ஒட்டி ஒரு சின்ன வீட்டில் வசித்து வருகிறோம். எனக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது . நானும் கணவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். வழக்கமா ரப்பர் பால் எடுக்கும் வேலைக்குப் போவோம் . வேலை கிடைத்தால்தான் அன்று எங்களுக்கு சாப்பாடு.வசதியில்லாத குடும்பம் .

விபத்து நடந்த அந்த இரவில் நீங்கள் வீட்டில் இருந்தீர்களா ? என்ன நடந்தது .

'அன்னிக்கு நாங்க வீட்டில்தான் இருந்தோம். அன்னிக்கு திருவிழாவுக்கு போக இருந்தோம் .மழையாக இருந்ததால் வீட்டில் தான் இருந்தோம். ராத்திரி 12 மணிக்கு டமால் என்று பெரிய சத்தம் கேட்டுச்சு . வீட்டில் இருந்த டார்ச் லைட்டை எடுத்துனு வெளியே ஓடினோம். ரீப்பர்கள் ஏத்தி வந்த ஒரு லாரி ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்தது . லாரியில் ட்ரைவர் அடிபட்டு இறந்து கிடந்தார் ,பள்ளத்தில் கிளீனர் தம்பி விழுந்து கிடந்தார் . அதே நேரத்தில் கேரளா போற ட்ரெயின் எதிரில் வந்துக் கொண்டு இருந்தது . கவிழ்ந்த லாரி மேல் மோதினால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும் . இரண்டு பேரும் ரயிலை நோக்கி ஓடினோம்.

20240201110001580.jpg

என் வீட்டுக்காரர் டார்ச் லைட்டை ரயில் டிரைவரின் கண்ணை நோக்கி அடித்துக் கொண்டே ஓடினார்..கொஞ்ச நேரத்தில் வண்டி நின்றது . ஏறக்குறைய எங்க வீடு இருக்கும் பகுதியில் நின்றது. ட்ரெயின் ட்ரைவர் இறங்கி ஓடி வந்தார் . கவிந்துப் போன லாரியைக் காட்டி விவரம் சொன்னோம். அப்பவே எல்லோருக்கும் போன் போட்டு எல்லா ஆபிசர்களையும் வரவச்சார் .நீங்க செய்தது ரொம்ப நல்ல காரியம் என்று எல்லோரும் சொன்னாங்க. லாரியை அப்புறப்படுத்தி ரயில் பாதை சரியாக காலை ஆறரை மணி ஆனது .

"உண்மையில் நீங்கள் செய்தது மிகப் பெரிய காரியம் , உங்கள் உயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய சாதனை . இதை செய்து முடித்த பின் உங்களுக்கு எப்படி இருந்தது ?

இப்ப நினைத்தாலும் மனசு நடுங்குகிறது ,"நமக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை .ரயிலை நிறுத்தியாக வேண்டும்" என்று நானும் எங்க வீட்டுக்காரரும் டார்ச் அடித்துக் கொண்டே ஓடினோம். . வீடுகள் இல்லாத பகுதி ,மக்கள் யாருமே இல்லை. ஆனாலும் நாங்க இதை செய்தோம். பல உயிர்களைக் கைப்பற்றிய சந்தோசம் இப்போ இருக்கிறது . அது போதும் .

லாரி ட்ரைவர் மணிகண்டன் , கிளீனர் தம்பி பெருமாளிடம் ," எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை , நீ குதித்து தப்பிச்சு போ" என்று கத்தி இருக்காரு. .பெருமாள் கீழே குதிச்சதால் ரொம்ப காயம் இல்லாமல் பிழைச்சார். ஆனா , இறந்துப் போன மணிகண்டனை நினைத்து சாப்பிடாம அழுது கொண்டே இருக்கார். அது மனசை அறுக்குது .

20240201110038375.jpg

முதல்வர் அழைத்து ஐந்து லட்ச ரூபாய் பரிசு தந்துள்ளார் . நிறைய பேர் பாராட்டி இருக்காங்க . இது பற்றி சொல்லுங்க

20240201195458267.jpeg

"தாசில்தார் வந்து , முதல்வரை நேரில் சந்திக்க கூட்டினு போனார் . பரிசு கொடுக்கும் போது முதல்வர் ,"பெரிய விஷயம் செஞ்சிருக்கீங்க" என்று பாராட்டினார் . இது நடந்த உடனேயே நிறைய பேர் வராங்க .சால்வை போத்திட்டு ,போட்டோ எடுக்கிறாங்க .எங்க வீடு இருக்கிறதை பார்த்துட்டு நிறைய பேர் உதவி செய்ய முன் வராங்க . இதுவரை எங்களுக்கு முதியோர் பென்சன் , பெண்கள் உரிமைத் தொகை எதுவும் தரப்படவில்லை . இப்போது எங்களுக்கு அதெல்லாம் கிடைக்க கையெழுத்து வாங்கினு போய் இருக்காங்க. செங்கோட்டை ஆபிசில் எல்லாம் செய்வதாக சொல்லி இருக்காங்க"

அவர்கள் வாழ்வு மேம்பாடு அடைய ,அரசும் பொது மக்களும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை தந்து நன்றி கூறி விடை பெற்றோம் .

எளிமையான சொற்களில் தம் சாதனையை அழகாக சொன்னார்கள் அந்த தம்பதியர் .வாழ்வாதரத்துக்கே போராடும் ஏழைக் குடும்பம்தான். இருப்பினும் சக மனிதரின் உயிரைக் காக்க தம் உயிரை பணயம் வைத்த அந்த பெரிய மனங்களுக்கு ,ஒப்புவமை இவ்வுலகில் இல்லை . மனித நேயம் மட்டும் என்றும் நிலைத்து வாழும்.

முதல்வர் அந்த வீர தம்பதியரை வாழ்த்தும் சொற்கள்தான் எவ்வளவு பொருத்தம் .

"எளியோரின் பேருள்ளத்துக்கு இணை ஏதும் இல்லை "