ஆஞ்சனேயரின் அருள் பெறுவோம் வாருங்கள்!
ஆஞ்சனேயர் பக்தியை அங்கீகரிக்கும் வண்ணம், இராமன் தனது அனைத்து திருக்கோவில்களிலும் தனக்கு அருகில் அனுமனை அமரச்செய்துள்ளார். அனுமனை விரும்பும் போதெல்லாம் தரிசிப்பதற்கு ஏதுவாக, பல்வேறு பகுதிகளில் ஆஞ்சனேயரின் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
சென்னை நங்கநல்லூரில் 32 அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் ஒற்றை கிரானைட்
கல்லில் காட்சி தருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து
பாண்டிச்சேரி செல்லும் வழியில் பஞ்சவடியில் 36 அடி உயரத்தில் ஆஞ்சனேயர் காட்சி தருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமர் கோயில்
எதிரில் ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது.இவர், ஸ்ரீராமன் மதுராந்தகத்திற்கு வருகை
தருவதற்கு முன்னரே,மதுராந்தம் வந்து ஸ்ரீராமரை வரவேற்றதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில், சுவாமி சந்நிதி எதிரே
ஆஞ்சனேயர் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் அருகே உள்ள நந்தவனத்தில் இராமநாமம் பாராயணம் செய்யும் கோலத்தில் ஆஞ்சனேயர் வீற்றிருக்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேரடியின் கீழ் ‘கண்கொடுக்கும்
அனுமன், அருள் பாலிக்கிறார்.தேனி அருகிலுள்ள சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் மூலஸ்தானத்தில், பெருமாள் அருகிலேயே அனுமனை தரிசிக்கலாம்.
கும்பகோணத்தில் பஞ்சமுகியில் பஞ்சமுக ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது.
சேலம் மாவட்டம் நாமக்கல்லில் 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லில் ஆஞ்சநேயர்
காட்சியளிக்கிறார். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பொரவச்சேரி ராமபத்ர பெருமாள் கோயிலில் வீரமங்கள அனுமன், வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை வடக்கு நோக்கி மடித்து வைத்த நிலையில் தரிசனம் தருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை செல்லும் வழியில்
உள்ள சிறு குன்றில் துஷ்ட நிக்ரஹ அனுமான் அருள்பாலிக்கிறார். வலதுகை
பக்தர்களின் துன்பங்களை அறைந்து விரட்டுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள வீர அழகர் கோயிலில் உள்ள
ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அணிவிக்கும் வடைமாலை நீண்டநாள்
கெடுவதில்லை.ராமனின் முன்பு தலையை குனிந்து, வாய் பொத்தி, மிகுந்த
மரியாதையுடன் உள்ள ஆஞ்சனேயர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம்
ராமசாமி கோயிலில் காட்சி தருகிறார்.
உத்தர பிரதேசம். கான்பூரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள பங்கி அனுமன்
கோயிலில், காலையில் ஆஞ்சனேயர் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞனாகவும், மாலையில் வீர புருஷராகவும் காட்சி தருகிறார். அயோத்தியில் உள்ள ஹனுமங்காதி கோயில், சரயு நதியின் வலது கரையில் உயரமான மலையின் உச்சியில் அமைந்துள்ளது. எழுபத்தாறு படிக்கட்டுகள் கொண்ட இக்கோயிலில்
ஆஞ்சனேயர்ஆறு அங்குல உயர த்தில் அருள் பாலிக்கிறார்.
ராஜஸ்தான் தௌசா மாவட்டத்தில், இரண்டு மலைகளுக்கு நடுவே
அமைந்துள்ளது மெஹந்திபூர்.இங்கு உள்ள மிகப் பெரிய பாறை ஸ்ரீ ஆஞ்சனேயர்
என்று நம்பப்படுகிறது. புராணங்களின்படி, சிலையின் காலடியில் ஒருபோதும் வற்றாத ஒரு சிறிய நீர் குளம் உள்ளது.சித்ரகுட் அருகே ஹனுமந்திரா என்ற சிறிய கிராமத்தில் மலைக்கு எதிரே நின்ற நிலையில் ஆஞ்சனேயர் காட்சி தருகிறார்.
பெனாரஸ் நகரில் சங்கத்மோச்சன் என்னும் இடத்தில் துளசிதாசரால்
நிறுவப்பட்ட பிரமாண்டமான ஆலயத்தில் ஆஞ்சனேயர் காட்சி தருகிறார்.பாட்னா
சந்திப்பிற்கு எதிரே, மகாவீர் கோயில் என்று அழைக்கப்படும் ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. வட இந்தியாவில், வைஷ்ணோ தேவி கோவிலுக்கு அடுத்தபடியாக, இந்த கோவிலில் தினமும் சுமார் ஒரு லட்சம் காணிக்கை வசூலாகிறது.
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், சலாசர் என்ற சிறிய கிராமத்தில்,
தாடி,மீசையுடன் ஆஞ்சனேயர் காட்சி தருகிறார். ஒரு விவசாயியால் வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட இவர், தற்போது தங்க சிம்மாசனத்தில் காட்சியளிக்கிறார்.
குஜராத்தின் சரங்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சனேயர் மந்திர், சாரங்பூர்
சுவாமிநாராயண் சம்பிரதாயத்தின் வத்தல் காடியின் கீழ் வருகிறது.
இங்குள்ளஆஞ்சனேயர் கஸ்டபஞ்சன் (துக்கங்களை நசுக்குபவர்)என்றழைக்கப்படுகிறார்.அலகாபாத் கோட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கோவிலில் 20 அடி உயர ஆஞ்சனேயர் காட்சி அளிக்கிறார்.
ஆஞ்சனேயரை மனதார வழிபட்டு, நம்முடைய பிரார்த்தனைகளை அவரிடம்
சமர்ப்பித்தால், சகல காரியங்களையும் ஈடேற்றிக் கொடுப்பார். அன்னாரை அன்றாடம் வணங்குவோம். அவரின் அருள் பெறுவோம். வாருங்கள் அருகிலுள்ள ஆஞ்சனேயர் திருக்கோயிலுக்கு இன்றே.
Leave a comment
Upload