திருமங்கையாழ்வார் திருமொழியில் வழங்கிய திருநீரைமலை சிறப்புகள்:
"நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்
நிலவும் புகழ் மங்கையர்கோன் அமரில்
கடமா களியானை வல்லான் கலிய
னொலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினைவேண்டிடில் மேலுலகும்
எளிதாயிடு மன்றியலங் கொலிசேர்
கொடுமா கடல் வையகமாண்டு மதிக்
குடை மன்னவராயடி கூடுவரே" (10) (1087)
என்றும் நிலைத்த புகழ் உடையவர்; போரில் மதம்மிக்க யானைபோல் களிப்புடன் ஈடுபடவல்லவர்; திருமங்கை என்ற நகருக்குத் தலைவர்; கலியன் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். இத்தகைய பெருமை களையுடைய திருமங்கை ஆழ்வார் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுள்ள மாலவன் உறையும் திருநீர்மலைமேல் பதிகம் பாடியுள்ளார். ஒலியினிமையைப் பெற்றுள்ள இப்பதிகத்தைப் பக்தியுடன் படிப்பவர்களைப் பற்றிய கொடிய வினைகள் நீங்கும்: பரந்து விளங்கும் ஒலியை உருவாக்கும் மாகடலால் சூழப்பட்ட பூவுலகைத் திங்கள் போல் ஒளிரும் வெண் கொற்றக்குடையின் கீழமர்ந்து அரசாளும் பேற்றை இவர்கள் இம்மையில் பெறுவர்; விரும்பினால் சொர்க்கம் முதலிய மேலுலகங்களை அடைவர். மருமையில் வைகுண்ட வாசனின் திருவடிகளை அடையும் பேறு பெறுவர்.
பெரிய திருமொழி
இரண்டாம் புத்து, ஏழாம் திருமொழி
அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்
கழியுமா லென்னுள்ள மென்னும்
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்
போனுமோ நீர்மலைக் கென்னும்
குலங்கெழு கொல்லிக் கோமளவல்லி
கொடியிடை நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக் கென் நினைந்திருந்தாய்?
இடவெந்தை யெந்தை பிரானே (8) (1115)
காதல் வயப்பட்ட தலைவி தனது நிலையைத் தோழியிடம் கூறுவது போலவே தனது தாயிடம் கூறுகிறாள். இந்த புதுமையான செயலைக் கண்டு தாய் வியந்து கூறுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.
"எனது மகள் கொல்லிமலையிலுள்ள கொல்லிப் பாவை போல் சிறப்புடையவள்; நல்ல குலத்தைச் சேர்ந்தவள்; அழகிய கொடிபோல் மென்மையானவள்; வஞ்சிக்கொடி
போல் மென்மையான இடையை உடையவள்; அழகிய தோள்களைப் பெற்றுள்ளவள்; பெருமழை போல் நீர் பொழியும் கண்களை உடையவள்; இப்பெண் கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனும் பருத்த கைகளை உடையவனும் இடையனாகத் தொழில் புரிபவனுமான கண்ணன் இலைக்குழலைத் தனது வாயில் வைத்து எழுப்பும் இனிய இசையைக் கேட்டு மனம் மயங்கி எழுகிறாள். நீர்நிலைகள் மிகுந்துள்ள திருப்புட்குழியில் எழுந்தருளியுள்ள விஜயராகவன் தனது இந்திரியங்களைக் கவர்ந்துள்ளதாக எண்ணி அவன் புகழ் பாடுகிறாள். நீலவண்ணன் குடி கொண்டுள்ள திருநீர் மலைக்குச் செல்ல விரும்புகிறாள். திருவிடந்தை என்ற தலத்தில் குடி கொண்டுள்ள பிரானே! இவளுக்கு என்ன வழிகாட்டப் போகிறாய்?" எனத் தாய் தனது மகளின் நிலைபற்றிக் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.
(தொடரும்)
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload