தொடர்கள்
சினிமா
ராமன் எத்தனை ராமனடி.... வேங்கடகிருஷ்ணன்

20240020075230264.jpeg

கடந்த பல மாதங்களாக பாரதிய வித்யா பவனும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸும் இணைந்து நடத்தும் காலங்களில் அவன் வசந்தம் நிகழ்வு கடந்த வியாழன் அன்று தனது 99 ஆவது நிகழ்ச்சியினை எட்டியது. இதனை தொகுத்து வழங்கி வரும் இசைக்கவி ரமணன் சொல்வது போல், கவிஞர்களில் "நான் பார்த்து வியக்கும் ஒரே ஒருவர் கண்ணதாசன் மட்டுமே" என்ற அந்த புகழ் மழைக்கு நிச்சயம் தகுதியான ஒருவர் கவியரசர் தான் என்ப தற்கு ,அந்த நிகழ்வுக்கு வரும் ரசிகர்களின் கூட்டமே சாட்சி. மத்த எந்த நிகழ்ச்சிக்கும் முழுதும் நிரம்பாத அந்த அரங்கு, கீழ் அரங்கம், மேலே மாடியில் உள்ள இருக்கைகள் என கிடைத்த இடத்தில் எல்லாம் ரசிகர்கள் அமர்ந்து கேட்கும் ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். தொடர்ந்து இதனை ரசித்து வரும் எனக்கு இந்த நிகழ்வு மிக வித்தியாசமாய், உணர்வுபூர்வமாய், பிரமிப்பாய் அமைந்தது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த கியூ எஃப் ஆர் புகழ் சுபஸ்ரீ தணிகாசலம் இதனை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்று விட்டார் என்பது தான் உண்மை. ஒரு பாடலை ஒருவர் ரசித்து சொல்வதை நாம் கேட்டிருப்போம். ரசிப்பவர்கள் பல நேரம் ரசனை உள்ளவர்களாகவும், சில சமயம் ஞானம் உள்ளவர்களாகவும், வெகு சிலர் இசை அனுபவம், அதற்கான குரல் வளம் அனைத்தும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.அப்படி எல்லா திறமைகளும் ஒருங்கே அமையப்பெற்றவர் மிக அபூர்வம். அப்படி ஒரு அருமையான, அபூர்வமான திறமையை கொண்டவர் இசைக்கவி ரமணன். அவரை உணர்வுபூர்வமாய் கட்டிப்போட்டு கவியரசரோடு நம்மை ஒன்றைச் செய்த அந்த பெருமை சுபஸ்ரீக்கு உண்டு. நிச்சயம் இதுபோல் ரசிக்க முடியுமா என்ற கேள்வி அவர் ஒவ்வொரு பாடலையும் நமக்கு சொல்லி முடித்தவுடன் எழுந்தது. இங்கே குறிப்பாக சொல்ல விரும்புவது வரும் 22ஆம் தேதி நிகழ இருக்கும் பிரம்மாண்டமான அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வு குறித்து பேசி, கண்ணதாசனின் அற்புதமான பாடலான ராமன் எத்தனை ராமனடி என்ற பாடலை நிகழ்வின் முதல் பாடலாக எடுத்துக்கொண்டு அதனை விளக்கியது ஆச்சரியம்.
ராஜாராமன் என்ற பெயர் காரணத்தை சொன்னபோது நமக்கும் வியப்பு மேலிட்டது, ஆம், நாம் எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த ராஜா ராமன் பட்டாபிஷேகம் முடித்த ராமன் அல்ல, இவன் சீதையை மணம்முடிக்க வந்த போது வந்த அந்த ராஜாராமன், அந்த யௌவனம், அந்த வீரத்தின் வடிவம் என்று அவர் விளக்கியபோது அந்த ராமனை நாம் நேரே தரிசித்தோம். இந்தப் பாடலை முழுக்க அவர் ஒவ்வொன்றாக விளக்கி சொல்லி எல்லா நாமங்களையும் தொகுத்து வழங்கிய பிறகு ராமஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ராமனின் கைகளில் நான் அபயம் என்று சொன்னது கண்ணதாசன் தான் மட்டுமல்ல நம்மையும் சொல்ல வைத்து விட்டார் என்றார்.
அயோத்தியில் கும்பாபிஷேக வைபவம் நடக்கும் போது உங்களுக்கு எந்த ஒரு பாடலோ, மந்திரமோ, சுலோகமோ தெரிய வேண்டிய அவசியம் இல்லை, கண்ணதாசனின் இந்தப் பாடல் ஒன்று போதும் என்று அவர் சொல்லி, அந்தப் பாடலை கண்ணதாசன் முடித்த விதத்தை கூறும் போது அந்த உண்மை நமக்கும் சரி என்றே பட்டது.

ராம் ,ராம் ,ராம், ராம் என்று தான் அந்தப் பாடலை முடித்து இருப்பார். மெல்லிசை மன்னர்கள் இந்த பாடலுக்கு மெட்டமைத்த விதத்தையும் அவர் விளக்கியபோது நமக்கு சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது வாழ்வோடு இணைந்து விட்ட கலை என்ற உண்மை மீண்டும் உறுதிப்பட்டது.


அந்த விளக்கத்தின் காணொளி இங்கே உங்கள் பார்வைக்கு...

(மன்னிக்கவும். இந்த கட்டுரை விகடகவியின் வழக்கமான சினிமா நியூஸ் வகையறாவில் வராது - ஆர்.)

2024002009575577.png