தொடர்கள்
ஆன்மீகம்
பால ராமனுக்கு 24 மணி நேரத்தில் தேக்கு மர பல்லக்கு - அசத்திய மாமல்லபுர சிற்பி - மாலா ஶ்ரீ

20240018105700327.jpg

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பலகோடி மதிப்பீட்டில், பழங்கால நாகரா கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் தரைதளத்தில் இருந்து 44 வாசல்களுடன் 1,600 சிற்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முதல்கட்ட பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் சீதாதேவியுடன் கூடிய மூலவர் ராமர் சிலையை பிரதமர் நரேந்திரமோடி பிரதிஷ்டை செய்கிறார். இதற்காக அவர் கடந்த 11 நாட்களாக விரதம், பல்வேறு பூஜை புனஸ்காரங்களை மேற்கொண்டுள்ளார். தற்போது அங்கு தற்காலிகமாக ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அயோத்தி ராமர் கோயிலை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள் ரயில் மற்றும் விமானங்கள் வருகை தருவதால், புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட அயோத்திதாம் ரயில்நிலைய முனையம் மற்றும் உள்நாட்டு விமானநிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இதில் மும்பை உள்பட பல்வேறு பிராந்திய பகுதிகளில் தனியார் விமான சேவைகள் துவக்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னை-அயோத்தி-சென்னைக்கு இடையே ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவனம் நேரடி விமானசேவையை துவக்குகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் ராமரின் உற்சவ மூர்த்தியை மரப் பல்லக்கில் தூக்கி சென்று வைப்பதற்காக, தமிழகத்தின் மாமல்லபுரம் அருகே பெருமாளேரி பகுதியை சேர்ந்த மரச்சிற்ப கலைஞர் ரமேஷுக்கு பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே ராமஜென்ம பூமி க்ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் கொடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் 3 அடி நீளம், 2 அடி அகலத்தில் தேக்கு மரத்தினால் நுண்ணிய கலைநுணுக்கங்களுடன் கூடிய பல்லக்கை 24 மணி நேரத்தில் சிற்பக்கலைஞர் ரமேஷ் உருவாக்கி, கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

20240018105720357.jpeg

மேலும், அக்கோயிலுக்கு 48 தேக்குமரக் கதவுகளையும் மல்லை சிற்பக் கலைஞர் ரமேஷ் உருவாக்கி அனுப்பியுள்ளார். இதில் 12 மரக்கதவுகளுக்கு தங்கமுலாம் தகடுகள் பொருத்தப்பட்டு நி்ாமாணிக்கப்பட்டு உள்ளன. விரைவில் அனைத்து மரக்கதவுகளுக்கும் தங்கமுலாம் பூசப்பட்டு நிர்மாணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக கடந்த 17-ம் தேதி பலவித வாசனைகளுடன் கூடிய பிரமாண்ட ஊதுபத்தி ஏற்றியுள்ளனர். இது, கும்பாபிஷேகம் முடிந்த பிறகும் தொடர்ந்து ஒரு மாதம் வரை எரியும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் இன்னும் 2 நாட்களில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்து, அங்கு கருவறையில் சீதாதேவியுடன் கூடிய மூலவர் ராமர் சிலையை பல்வேறு பூஜை புனஸ்காரங்களுடன் நிர்மாணிக்கிறார். ராமர் கோயிலை ஒட்டியுள்ள ஏராளமான காலி வீட்டுமனைகளை நடிகர் அமிதாப்பச்சன் உள்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் வாங்கியுள்ளனர். இதனால் அங்கு நிலத்தின் மதிப்பு பலலட்சம் மதிப்பில் உயர்ந்து வருகிறது.

மேலும், இந்நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் டோனி, டெண்டுல்கர், விராட் கோஹ்லி, முகேஷ் அம்பானி மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். இப்பவே, ரயில் மற்றும் விமானங்களில் ஒரு மாதத்துக்கு மேல் முன்பதிவு முடிந்துவிட்டது. நாமும் என்றாவது ஒருநாள் அயோத்திக்கு சென்று ராமரை தரிசித்து பலனடைவோம்!

20240020095720286.png