இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட நரசிம்ம பல்லவரின் சேனாதிபதியாக பரஞ்சோதி பின்னாளில் சிறுத்தொண்ட நாயனார் என சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆனார் . காவிரி வளநாட்டில் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர்; யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால், சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்தவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர்.
பரஞ்சோதி
நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், யானை, குதிரை, முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார். அரசன் இவரது வீரத்தையும், ஆண்மையினையும் அதிசயித்து புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை என்றனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற வேந்தன், “உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன், வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன், என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி, எம்பெருமான்; எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என இறைஞ்சினார்.
மன்னன் இறைஞ்சியதும் பரஞ்சோதியாரும் முன் வணங்கி ‘அரசே! எனது தொழிலுக்கேற்ற பணியினைச் செய்வேன். அதற்கு என்ன தீங்கு’ என்றார். அறம்புரி செங்கோலனாகிய வேந்தன், அவருக்கு நிறைந்த நிதிக்குவையும், நீடு விருத்திக்கான நல்நிலம், ஆனிரை ஆகியவற்றை அளித்து வணங்கி, 'நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை நானறியாதபடி கொண்டு நடத்தினீர். இனி உம்முடைய மனக்கருத்துக்கு இசையத் திருத்தொண்டு செய்வீராக’ என விடைகொடுத்தனுப்பினார்.
திருஞானசம்பந்தர்
மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். இவர் திருவெண்காடு நங்கையை மணம் முடித்தார். நங்கையாருடன் மனையறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பித் தொழுது, அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் 'சிறுத்தொண்டர்' என அழைக்கப்பட்டார். இவருக்கு சீராளத்தேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியிற் கல்வி பயிலவைத்தார். அந்நாளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். ஆளுடைய பிள்ளாயாரும் பேரன்பினாற் சிறந்த சிறுத்தொணடருடன் நண்பினால் அளவளாவி மகிழ்ந்தனர். கணபதீச்சரப் பெருமானைத் தாம் பாடிய ‘பைங்கோட்டு மலர்புன்னை’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினார்.
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.
சென்னை மணிமங்கலத்தில் புலிகேசியிடம் போரை தொடங்கி, அவரை விரட்டி அடித்து வாதாபி நகரிலுள்ள பிள்ளையார் சிலையை கொள்ளையடித்த பொருளாக கொண்டுவந்து, மன்னரின் அனுமதியோடு, தனது சொந்த ஊரில் கோவில் கட்டி அங்கே சிலையை வைத்து பூசித்தார்.
அன்றைய காலங்களில் பிள்ளையார் சிலைகள் அதிகமாக தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று கூறுவார்கள். அப்படி அபூர்வமான சிலையான இந்த வாதாபி பிள்ளையார் சிலை பின்னால் முத்துசாமி தீக்ஷிதரால் பாடப்பட்டு உலகமெங்கும் பெரும்பாலும் கர்நாடக சங்கீத கச்சேரியின் முதல் பாடலாக அலங்கரிக்கிறது.
(தொடரும்)
Leave a comment
Upload