தொடர்கள்
கவர் ஸ்டோரி
தமிழகத்தில் குழந்தைகளை விற்ற பெண் மருத்துவர் - அதிர்ச்சி ரிப்போர்ட்

2023921091037879.jpeg

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் அனுராதா. இவர் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களிடம் கேட்கும் முதல் கேள்வி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறது என்பதுதான். இரண்டு குழந்தை மூன்று குழந்தை இருக்கிறது என்று அவர்கள் பதில் இருந்தால் உனக்கு எதற்கு இன்னொரு குழந்தை இந்த குழந்தை பிறந்ததும் நான் இதை நல்ல விலைக்கு விற்றுத் தருகிறேன் 3 ஆயிரம் தருகிறேன், 5 ஆயிரம் தருகிறேன் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி மூளை சலவை செய்வதுதான்.

அதுவும் குறிப்பாக பணப் பற்றாக்குறை உள்ள ஏழைப்பெண்கள் மனதை அவர்கள் குடும்பத்தை எளிதில் சம்மதிக்க வைத்து விடுவாராம் இந்தப் பெண் மருத்துவர் அனுராதா. கடந்த இரண்டு வருடங்களில் இதுவரை 7 குழந்தைகளை வாங்கி விற்று காசு பார்த்திருக்கிறார் மருத்துவர் அனுராதா.

இவருக்கு இந்த தொழிலில் பக்க பலமாக வாடிக்கையாளர்களை அதாவது குழந்தைகளை வாங்குபவர்களை வாங்க விரும்புபவர்களை அழைத்து வருவது பெண் தரகர்களான லோகாம்பாள் மற்றும் பாலாமணி. குழந்தையை வாங்க விரும்பும் குடும்பத்தினரிடம் 20 லட்சம் 25 லட்சம் என்று விலை பேசுவார்கள். அவர்கள் இந்த வியாபாரத்துக்கு ஒப்புக்கொண்டதும் குழந்தையைத் தேட துவங்கி விடுவார் இதுதான் அவருக்கு முக்கிய தொழில். மருத்துவர் அனுராதா திருச்செங்கோட்டில் தனியாக கிளினிக் வைத்திருக்கிறார். அங்கு வரும் கர்ப்பிணிப் பெண்களிடமும் இந்தக் குழந்தை வியாபார பேரம் நடக்கும்.

திருச்செங்கோடு பொருத்தவரை பெரும்பான்மையோர் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் தான். தமிழ்நாட்டில் கிட்னி விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும் திருச்செங்கோட்டை சேர்ந்தவளாகத்தான் இருப்பார்கள். காரணம் அவர்களின் பணத் தேவை அப்படி. இப்படிப்பட்ட சூழ்நிலையை தான் தனக்கு சாதகமாக அனுராதா குழந்தை விற்பனை கிட்னி விற்பனை என்று தொழில் செய்து கொண்டிருந்தார்.

இரு வாரங்களுக்கு முன்பு தினேஷ் நாகஜோதி தம்பதியினர் பிரசவத்துக்காக டாக்டர் அனுராதாவை சந்தித்தார்கள். அவர்களிடமும் அனுராதா முதலில் பேசியது வியாபாரம் தான். தினேஷ் நாகஜோதி தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறது எனவே மூன்றாவது குழந்தையை விற்று விடுமாறு வியாபாரம் பேசினார் அனுராதா. முதலில் நாகஜோதியுடன் பேசினார் அவர் மறுத்ததால் அவர் கணவர் தினேஷை அழைத்து குழந்தையை விலைக்கு விற்று விடு நான் 3 லட்சம் ரூபாய் வாங்கி தருகிறேன் தேவைப்பட்டால் இன்னும் ஒரு லட்சம் தரத் தயார் என்று ஆசை வார்த்தை சொல்லி இருக்கிறார் மருத்துவர் அனுராதா. ஆனால் இருவரும் ஒரே குரலில் முடியாது என்று உறுதியாக சொல்லிட்டு விட்டார்கள். இந்த சூழ்நிலையில் திருச்செங்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகஜோதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குழந்தை பிறந்ததும் கூட தனது வியாபார பேரத்தை மருத்துவர் அனுராதா தொடர்ந்து அவர்களிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

2023921091451820.jpeg

ஒரு கட்டத்தில் தனது குழந்தையை கடத்திக் கொண்டு போய் விற்பார்கள் என்று பயந்து போய் நாகஜோதி கணவர் தினேஷ் திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து நடந்ததை எல்லாம் சொல்லி தனது குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டிருக்கிறார். உடனே காவல்துறை தனது விசாரணை தொடங்கிய போது தான் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் தொடர்ந்து வரத் தொடங்கியது திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மருத்துவர் அனுராதா பிரசவம் பார்த்த ஏழு குழந்தைகளை ஏற்கனவே இதே போல் வியாபாரம் பேசி விற்பனை செய்திருப்பது தெரிந்தது. இந்த குழந்தைகளை வாங்கியவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கண்டுபிடித்தார்கள். பெற்றோர்களின் ஏழ்மையை பயன்படுத்தி இந்த சட்ட விரோத வேலையில் அனுராதா இறங்கி இருக்கிறார் என்பதையும் விசாரணையில் தெரிந்து கொண்டார்கள்.

இது தவிர அனுராதா கூடுதல் தொழிலாக சிறுநீரக விற்பனையும் செய்து வந்தார் என்பதையும் காவல்துறை கண்டுபிடித்து இருக்கிறது. தற்சமயம் மருத்துவர் அனுராதா தரகர் லோகாம்பாள் மற்றும் பாலாமணி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறது.

அனுராதா நடத்தி வந்த கிளினிக் கூட தற்சமயம் சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறது காவல்துறை ஒரு அரசு மருத்துவர் இப்படி ஒரு கேவலத்தை செய்ததை கண்டுபிடித்த காவல்துறை மேலும் இதுபோன்று வேறு மருத்துவர்கள் செய்கிறார்களா என்றும் விசாரிக்க தொடங்கி இருக்கிறது.

மருத்துவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என்றே மக்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் அப்படித்தான் இருக்கிறார்கள்.

இது போன்ற ஒருசில மருத்துவர்களால் அந்த நம்பிக்கை போய் விடக் கூடாது.

ஒரு மருத்துவர் செய்த தவறால் எல்லா மருத்துவர்கள் மீதும் சந்தேக நிழல் படர்ந்து இருக்கிறது.