தொடர்கள்
கவர் ஸ்டோரி
கல்வியும், ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை!! - ஆரூர் சுந்தரசேகர்.

Saraswati Puja gives education and wisdom!!

நவராத்திரியில் முப்பெரும் தேவியருக்கு முறையே மூன்று மூன்று நாட்களாகப் பிரித்து வழிபாடு செய்யப்படுகிறது. அந்தவகையில் முதல் மூன்று நாட்கள் வீரத்தின் தெய்வமான துர்கா தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் ஞானசொரூபினியான அன்னை சரஸ்வதிக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது.
ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் இந்த மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்குப் பராசக்தி பூஜை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. இதை நினைவுபடுத்தும் விதமாகவே சரஸ்வதி பூஜை அன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும், நம்முடைய வாழ்விற்கு ஆதாரமாகத் திகழும் பொருட்களை வைத்து ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் கொண்டாடுகிறோம். நவராத்திரி விழாவின் நிறைவாக பத்தாவது நாளில் பராசக்தி மகிஷாசுரனை வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
ஞானத்திற்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதியை நாம் தினசரி வழிபட்டாலும் நவராத்திரியில் அவருக்கான சிறப்பான நாளாக இந்த சரஸ்வதி பூஜை செய்யப்படுகிறது. ஞானம், நினைவாற்றல் வலுப்பெறவும், குழந்தைகள் படிப்பில் நல்ல நிலையை அடையவும் அனைவரும் வழிபடக்கூடிய நாள். மேலும் கல்விக்கு இணையாகத் தொழிலும் முக்கியத்துவம் என்பதால் நாம் செய்யும் தொழிலையும் அதற்கான கருவிகளையும் இறைவனின் முன்பு வைத்து வழிபடும் முறையும் இந்த நாளில் பின்பற்றுகிறோம். அதனால் இந்த தினம் ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.
சரஸ்வதி தேவியை வணங்குவோர்க்குக் கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.
இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

Saraswati Puja gives education and wisdom!!

புராணத்தில் சரஸ்வதி தேவி:
சரஸ்வதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். பிரம்மா உலகைப் படைக்கின்றபோது அவரது உடல் இரு கூறுகளாகப் பிரிந்து ஒரு பகுதி ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் மாறுகின்றது. அந்தப் பெண்ணே சரஸ்வதி என்று சில புராணங்கள் கூறுகின்றன. சரஸ்வதி தேவி பிரம்மாவின் நாவில் தோன்றியவர் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.
தேவி பாகவதத்தில் சரஸ்வதி தேவியானவள் சாத்வீக குணமுடையவள், மஞ்சள் வண்ண ஆடை அணிந்தவள் என்றும், அணிகலன்கள் சூடி கைகளில் சுவடியும், வீணையும் ஏந்தியவள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரஸ்வதி வேதங்களுக்குத் தாயாகவும், கற்றல், இசை, கைவினை, ஞானம், கலை மற்றும் மங்களம் ஆகியவற்றின் தாயாகவும் போற்றப்படுகிறார்.
'அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்' என்கிறது கந்தபுராணம்.
'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வாக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.
வேதங்களில் சரஸ்வதியை நதியாகவும், அறிவின் ஆதாரமாகவும் மேலும் அறிவின் கர்ப்பம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சரஸ்வதியைப்பற்றி தமிழில் "சரஸ்வதி அந்தாதி” எனும் நூலைக் கம்பரும், "சகலகலாவல்லி மாலை" என்ற நூலைக் குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம் என அனைத்திலும் சமயங்கடந்த தெய்வமாகச் சரஸ்வதி வணங்கப்படுகின்றாள்.
இந்துக்கள், சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெண்மை ஆடை தரித்து, வெண் தாமரைப் பூவில் வீற்றிருப்பவராவும் சரஸ்வதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.
சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இராகமும் உள்ளது.
நமது சனாதன தர்மத்தில் ஒவ்வொரு பக்தரும் அவளது வழிபாட்டுடன் மட்டுமே தங்கள் எழுத்துக்களைத் தொடங்கினார்கள்.

சரஸ்வதிக்கு வேறு பெயர்கள்:
சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன.
கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்திரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும்.

Saraswati Puja gives education and wisdom!!

சரஸ்வதி தேவி கையில் வைத்திருக்கும் வீணை:
சரஸ்வதி தேவியின் கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் கல்வியின் மேன்மையையும் கலைகளில் திறமையையும் அருள்பவள் என்பதை உணர்த்துகின்றன.
சரஸ்வதி தேவி கையில் ஏந்தியிருக்கும் வீணைக்கு கச்சபி என்று பெயர். இந்த வீணையானது சிவபெருமானால் உருவாக்கப்பட்டது.
எம்பெருமான் வீணா தட்சிணாமூர்த்தியாகக் காட்சியளித்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகுத் தனது சகோதரியான சரஸ்வதிக்கு அவர் அளித்ததாக ஐதீகம்.

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை - விஜயதசமி பூஜை:
நவராத்திரி ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாள்களான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்கலாம். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கு உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். மறுநாள் விஜயதசமி, அன்று புனர்பூஜை செய்து தொழில் தொடங்கினால் அந்த வருடம் முழுவதும் நல்ல செல்வச் செழிப்புடன் இருக்கும் என்பது நம்பிக்கை.

மகாபாரதத்தில் ஆயுத பூஜை:
ஆயுத பூஜையின் முக்கியத்துவம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்ற பிறகு யார் கண்ணிலும் படாமல் வனவாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தடியில் மறைத்து வைத்திருந்தனர். பின்னர் பதினான்கு வருட வனவாசத்திற்குப் பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். மேலும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வழிபட்டதால் இந்நாள் ஆயுத பூஜை என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டில் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் செய்வது எப்படி?
சரஸ்வதி பூஜையன்று வழிபாட்டிற்குரிய இடத்தில் சரஸ்வதி படம் (அ) அவர் முக உருவம் வைத்து அலங்கரித்து வழிபாடு செய்யலாம். அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, அந்த இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூ‌க்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். பின் குத்து விளக்கினை ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சரஸ்வதி தேவியின் படத்தின் முன் நமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், பேனா, பென்சில், குழந்தைகளின் பாடபுத்தகங்கள் மற்றும் வாழ்வில் நம் முன்னேற்றத்திற்கு உதவும் ஆயுதங்கள், இயந்திரங்கள், இதர உபகரணங்களையும் அவசியம் வைத்து வணங்குதல் வேண்டும்.
அதன் முன்பாக இலையில் பழங்கள், அவல், பொரிகடலை போன்றவை வைத்து, நைவேத்தியமான பால் பாயசம், வெள்ளைகடலை சுண்டல், பொங்கல் போன்றவை வைத்து கற்பூர தீபாரதனை செய்திட வேண்டும். பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் சரஸ்வதி தேவிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களைப் பாராயணம் செய்யலாம். அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், கல்விக்கான பண உதவி போன்றவற்றை ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கலாம்.
சரஸ்வதி பூஜை முடிந்த பின் மறுநாள் காலை சரஸ்வதி படத்தின் முன் புதிய இலையில் வெற்றிலை பாக்கு, பழம், பொரி கடலை வைத்து புனர்பூஜை செய்த பின்னர் நமது அன்றாட வேலைகளை தொடங்கலாம்.

Saraswati Puja gives education and wisdom!!

சரஸ்வதி காயத்ரி மந்திரம்:
“ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்”
பொருள்: மனிதர்களுக்குப் பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே.

கல்வியும், ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!