விகடகவியில் நாம் சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை. இருந்தாலும் அவ்வப்போது வரும் எதிர்ப்பார்ப்புக்களை பதிவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறதே....
விமர்சனக் குழு படம் பார்த்து குடலாராய்ச்சி செய்து எழுதுவது ஒரு வகை என்றால், தியேட்டர் வாசலில் மைக் பிடித்துக் கொண்டு ஆங்..நல்லாருந்துச்சுங்க.... ப்ரோஓஓஓ மொக்க ப்ரோ... இது ஒருவகை.
கொஞ்சம் வித்தியாசமாக படம் பார்த்து விட்டு வந்த அக்மார்க் இளைஞர்களிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது. அது படம் பார்ப்பதை விடவும் சுவாரஸ்யமானதாக அமைந்து போனது.......
கேள்வி : படம் என்ன எதிர்பார்த்து போனீர்கள் எப்படி இருந்தது ???
பதில் : விக்ரம், கைதி போல எதிர்பார்த்து போனோம். ஆனால் கொஞ்சம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை என்று தான் தோன்றியது. ஆனாலும், லியொ லியோ தான்.
கேள்வி : படத்தின் ஒன் லைனர் என்ன ??
பதில் : அதாவது விஜயின் தங்கையை கொன்று விடுகிறார்கள். அந்த சூழலிலிருந்து விலகி வாழ்கிறார் விஜய். மீண்டும் பழைய சூழலுக்கு கொண்டு போகிறது சந்தர்ப்பம். அதை எப்படி சமாளிக்கிறார் ஜெயிக்கிறார் என்பது தான் கதை.
கேள்வி : ரொம்ப அறுதப் பழசா இருக்கே ?? தேறுமா ??
பதில் : ஹலோ சும்மா எதாவது பேசக் கூடாது. படத்தில் ஒவ்வொரு ஃபிரேமையும் நகர்த்துவது விஜய். விஜய். விஜய் தான். தெரியுமா. ஒவ்வொரு சீனும் மாஸா இருக்கு. அது மட்டுமல்ல... எல்.சி.யூ அப்படியே வருது.
கேள்வி : அது என்னங்கடா எல்.சி.யூ ??
பதில் : (ஒரு பூச்சியைப் போல லுக் விட்டு விட்டு...) எல்.சி.யூ தெரியாது ?? லோகேஷ் சினிமா யூனிவர்ஸ். இங்க எல்லா கேரக்டரும் அவருடைய படத்திலேர்ந்து அப்படியே தொடர்ந்து வருவாங்க. கைதி பார்த்தீங்கன்னா நெப்போலியன் (ஜார்ஜ் மரியம் வருவாரில்ல...) அவர் இந்த படத்திலயும் இருப்பார். அதே கேரக்டரை தொடர்ந்திருப்பார். அது போலவே தான் டெல்லியோட ரெஃபரன்சும் வரும். என்ன ஒன்னு ரோலக்ஸ ரொம்ப எதிர்பார்த்தோம். வரலை !!
கேள்வி : மிஷ்கின் எப்படி ??
பதில் : சின்ன ரோல் தான் அவருக்கு. ஆனா சிறப்பா பண்ணிருக்கார். அது போலவே தான் ஒவ்வொரு கேரக்டரும். கெளதம் வாசுதேவ மேனன், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜூன். இன்னொன்னு சொல்லணும். வேற எந்த படத்திலயும் விஜய் வில்லன் கிட்டேர்ந்து இவ்ளோ அடி வாங்க மாட்டார். ஆனா அர்ஜூன் போட்டு அடி அடின்னு அடிக்கிறார். ஒரு வேளை அப்படி வெச்சா தான் நடிப்பேன்னு சொல்லிட்டாரு போல. அதுக்கு எங்க் விஜய் ஒத்துக்கிட்டாரு பாத்தீங்களா ஹி இஸ் கிரேட்.
கேள்வி : அதிருக்கட்டும் என்னப்பா உங்க அனியப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலை.
பதில் : அனி இந்தப் படத்தில அவ்ளோ பெர்ஃபார்மன்ஸ் சொல்ல முடியாது. ஒரே ஒரு பாட்டு தான் கொஞ்சம் பெப்பியா இருக்கும். பேக் கிரெளண்ட் ஸ்கோர் கூட ஆஹா ஓஹோ இல்ல. ஆனா அனி இல்லைன்னா படம் இல்லைன்னு சொல்லலாம்.
கேள்வி : நடிகைகள் ??
பதில் : அமோஹம். விஜய் தங்கையா வர்ர மடோனா செபாஸ்டியன் சூப்பர். அது மாதிரியே திரிஷாவும் ரொம்ப கூல். நல்ல வேளை புது வாழ்க்கைல யாரையும் போட்டு தள்ளலை.
கேள்வி : வயலன்ஸ் இருக்கோ ??
பதில் : லோகேஷ் படத்தில வெளிச்சம் இருக்கோ இல்லையோ வயலன்ஸ் கண்டிப்பா இருக்கும். இருக்கு. சில சீன்ல நான் கண்ணை மூடிக்கற அளவு படு பயங்கர கோரமான வயலன்ஸ். இது ஒன்னு தான் கொஞ்சம் குறை.
கேள்வி : கமல் வராரா ??
பதில் : இல்ல குரல் மட்டும் வருது. அதுவே செம மாஸ்.
கேள்வி : அப்ப அந்த கெட்ட வார்த்தை வந்துதே டிரெய்லர்ல படத்தில சென்சார் ஆயிடுச்சு தானே ??
பதில் : சென்சாரா ?? அப்படீன்னா ?? சீனுக்கு சீன் கெட்ட வார்த்தை வருது. இனிமே எல்லா தமிழ் சினிமாலயும் இதுவே கோல்ட் ஸ்டாண்டர்டா ஆயிடும். எனக்கு தெரியாத வார்தையெல்லாம் லோகேஷ் கத்து குடுத்துட்டார்.
கேள்வி : அப்ப படத்தில லியோன்னா உடனே ஞாபகம் வர்ர சீன் எது ?? திரும்ப பார்ப்பீங்களா ???
பதில் : நிச்சயம் திரும்ப பார்ப்போம். சீன் சொல்லட்டா ?? கடைசில விஜய்யும் திரிஷாவும் வர்ர லிப் லாக் சீன் தான் ஹைலைட். (!) லியோ கட்டாயம் பார்க்க வேண்டிய விஜய் படம். இத்தனை வருசத்தில விஜய் நடிச்சுருக்கார்னா இந்த படத்தில தான். போதுமா ????
தீர்ப்பு :
ஆக தமிழ் கூறும் நல்லுலகம் தங்களுடைய மூன்று மணி நேரத்தை மற்றும் சில ஆயிரங்களை செலவு செய்து லியோ படத்தை பார்க்கக் கடவது !!!!
Leave a comment
Upload