கடந்த 1966-ம் ஆண்டு பங்காரு அடிகளாரின் குடும்ப விழாவில், அவரை ஆதிபராசக்தி ஆட்கொண்டதாகவும், இதனால் அவர் தீபாராதனை தட்டு ஒன்றை வளைத்து, தனது சக்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு அம்மன் அருள் வந்து, மேல்மருவத்தூரில் கோயில் கொள்ளப் போவதாகவும், பின்னர் அதன்மூலம் ஒரு அற்புதம் நடக்கப் போவதாகவும் ஆதிபராசக்தி கூறியதாக மூத்த கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, அந்நாளைய பங்காரு அடிகளார் வீட்டின் பின்புறம் நீண்ட காலமாக இருந்த வேப்பமரம் திடீரென முறிந்து விழுந்ததாகவும், அதனால் ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து சுயம்பு வடிவில் ஆதிபராசக்தி அம்மன் எழுந்தருளியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் கிராம மக்கள் குவியத் தொடங்கினர்.
முன்னதாக, வேப்பமரம் இருந்த இடத்தில் சிறிய அளவில் ஓலைக்கொட்டகை அமைத்து, அதில் ஆசிரியராக இருந்த பங்காரு அடிகளார் ஆதிபராசக்தியின் உருவமாக அருள்வாக்கு கூறுதல், வேப்பிலையால் மந்திரித்தல் உள்பட பல்வேறு ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபடத் துவங்கினார். இதனால் பலன் பெற்றவர்கள் மூலம் மேல்மருவத்தூரில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. பின்னர் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டபடியே, கடந்த 1968-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ம் தேதி தன்னுடன் ஆசிரியராக பணியாற்றிய லட்சுமி என்பவரை பங்காரு அடிகளார் திருமணம் செய்து கொண்டார். தற்போது இத்தம்பதிக்கு கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார் என்ற 2 மகன்களும், ஸ்ரீதேவி, உமாதேவி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
82 வயதாகும் பங்காரு அடிகளாருக்கு கடந்த ஓராண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதை அறிந்ததும், தனது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில், தனக்கென சமாதி கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார். கடந்த சில நாட்களுக்கு முன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற 11 நாள் நவராத்திரி விழாவை பங்காரு அடிகளார் அகண்ட தீபம் ஏற்றி துவக்கி வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மாலை 5 மணியளவில் பங்காரு அடிகளாருக்கு திடீரென கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், மாலை 5.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி பங்காரு அடிகளார் மரணமடைந்தார்.
அவரது மறைவு தகவல் அறிந்ததும் ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளும் கிராம மக்களும் ஓடோடி வந்து கதறி அழுதனர். பின்னர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நடைகளும் அடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக பங்காரு அடிகளாரின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி பங்காரு அடிகளாருக்கு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பங்காரு அடிகளாரின் மறைவுக்கு விகடகவி சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.
Leave a comment
Upload