பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட ஆன்மீக புரட்சி ஏற்படுத்திய பங்காரு அடிகளார் ஆசிரியராக பணியைத் தொடங்கி ஆன்மீக குருவாக உயர்ந்தவர். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் 82 வயதில் 19 அக்டோபர் 2023 அன்று முக்தி அடைந்தார். இவர் மேல்மருத்துவத்தூர் கோயில் அருகிலேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற 11 நாள் நவராத்திரி விழாவைப் பங்காரு அடிகளார் அகண்ட தீபம் ஏற்றித் துவக்கி வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மாலை 5 மணியளவில் பங்காரு அடிகளாருக்கு திடீரென கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மாலை 5.45 மணியளவில் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தியின் பாதங்களை சரணடைந்தார்.. பங்காரு அடிகளார் மறைவு பல கோடி பக்தர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் நிறுவிய ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் மிகவும் பிரபலம் அடைந்தவராக இருந்தார். ஆதிபராசக்தியின் வெளிப்பாடாகத் தன்னை அவர் அறிவித்துக்கொண்டதால், அவருக்குப் பக்தர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அவரை 'அம்மா' என்று அழைத்தனர்.
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருடந்தோறும் மாலை அணிந்து விரதமிருந்து ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை போட்டுக்கொண்டு வருகைதரும் செவ்வாடை பக்தர்கள், கோயில் கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்யும் முறையைக் கொண்டு வந்தார்.
சபரிமலைக்கு ஆண்கள் மட்டும் மாலை போட்டுச் செல்வது போல, பெண்கள் மாலை போட்டுக்கொண்டு ஆதிபராசக்தி கோவிலுக்கு வரும் வழிமுறையை அவர் கொண்டு வந்ததால், பல கிராமங்களில் இருந்தும் பெண்கள் கூட்டமாக அவரது கோவிலுக்கு வந்தனர். அடிகளாரின் வழிபாட்டு மன்றங்கள் படிப்படியாக வளர்ந்து, இப்போது 7,000க்கும் மேற்பட்ட பங்காரு அடிகளாரின் வழிபாட்டு மன்றங்கள் இந்தியா உள்பட பத்து நாடுகளில் செயல்படுவதாக அவர் நடத்தி வந்த அறக்கட்டளை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேல்மருவத்தூர் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. ஆனால், இன்று மேல்மருவத்தூர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேற்றியிருக்கிறது.
பங்காரு அடிகளார் தலைமையில், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மேல்மருவத்தூர் உள்படச் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் பள்ளி, கலை-அறிவியல், வேளாண், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கி, மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
பங்காரு அடிகளாரின் ஆன்மிக மற்றும் பல்வேறு சமூகசேவைகளைப் பாராட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அளித்துக் கௌரவித்தது.
Leave a comment
Upload