தொடர்கள்
அழகு
மஞ்சள் அனகொண்டா பாம்பு குட்டிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவின் புதிய வரவு   -    ப ஒப்பிலி 

2023921074256771.jpg

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் புதிய வருகை, மஞ்சள் அனகொண்டா குட்டிகள். எட்டு குட்டிகளை பூங்காவில் உள்ள பெண் மஞ்சள் அனகொண்டா ஈன்றது. அந்த குட்டிகள் இப்போது பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது. இந்த வகை பாம்புகள் தென் அமெரிக்க நாடுகளான பராகுவே, பொலிவியா, பிரேசில், வடகிழக்கு அர்ஜென்டினா, மற்றும் வடக்கு உருகுவே ஆகிய நாடுகளில் உள்ள காடுகளில் வசிக்கும் ஒரு ஊர்வனம்.

இந்த பாம்புகள் குறித்து பூங்கா இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி கூறுகையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் அனகொண்டா பாம்புகளை சென்னை முதலை பண்ணையில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. வந்த சிறிது காலத்திற்குள்ளேயே அந்த பெண் அனகொண்டா ஏழு குட்டிகளை ஈன்றது. இப்போது மீண்டும் எட்டு குட்டிகளை ஈன்றுள்ளது. "பூங்காவிற்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குள்ளே இருமுறை இனப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது. சரியான முறையில் இயற்கைக்கு ஒட்டிய ஒரு சூழலை அந்த பாம்புகளின் உறைவிடத்தில்ஏற்படுத்தியதே இந்த வெற்றிகரமான இனப் பெருக்கத்திற்கு காரணம்," என்கிறார் ரெட்டி.

வண்டலூர் பூங்காவில் இந்த பாம்புகளுக்கென்று பிரத்தியேகமாக கூண்டுகள் கட்டப்பட்டன. அவற்றில்தான் இந்த மஞ்சள் அனகொண்டாக்கள் விடப்பட்டுள்ளன. புதிதாக பிறந்த குட்டிகளை அருகில் உள்ள மற்றொரு கூண்டில் விட்டுள்ளனர் பூங்கா அதிகாரிகள். வண்டலூர் பூங்காவில் மூன்றாண்டுகளுக்கு முன்தான் மஞ்சள் அனகோண்டா ஜோடி முதன் முறையாக கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, என்கிறார் ரெட்டி.

அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் இந்த மஞ்சள் அனகொண்டா ஒரு செல்லப் பிராணியாக வளர்க்கப் படுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இந்த வகை பாம்புகளின் நீளம். பச்சை அனகொண்டா போல மிக நீளமாக இல்லாமல், அதைவிட அளவில் சிறியதாக இருப்பதே இந்த பாம்புகளை வளர்ப்பு பிராணிகளாக பலர் வைத்திருக்க காரணம். ஆனாலும், சிலர் இந்த பாம்புகள் சில வருடங்களில் வளர்ந்த உடன் பராமரிக்க பயந்து காடுகளில் விட்டு சென்று விடுவதும் தென் அமெரிக்காவில் சாதாரணமாக நடக்கும் சம்பவம் என்கிறது வலைதள தகவல்கள்.

மஞ்சள் அனகொண்டாக்களுக்கு கோழி குஞ்சுகளும் எலிக்குஞ்சுகளுமே பிரதான உணவு. தற்போது பூங்காவில் ஏழு இள வயது பாம்புகளும் மற்றும் எட்டு புதியதாய் பிறந்த குட்டிகளும்உள்ளன. இவற்றை சரியான முறையில் பராமரித்து மேலும் பல குட்டிகளை ஈன செய்வதே பூங்காவின் நோக்கம், என்கிறார் அவர்.

வெளிநாட்டு விலங்குகளை முறையாக பராமரிப்பதில் வண்டலூர் பூங்கா என்றுமே தலைசிறந்தது. எனவேதான் இந்தியாவில் உள்ள பெரிய வன விலங்கு பூங்காக்களில் வண்டலூர்உயிரியல் பூங்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு ஒரு உதாரணம் நெருப்புக் கோழிகள். இவை ஆப்பிரிக்கா கண்டத்தில் காணப்படும் ஒரு பெரிய பறக்க முடியாத பறவையினம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜோடி நெருப்புக்கோழிகள் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டன. ஓராண்டிற்குள் இந்த ஜோடி பதினான்கு முட்டைகளை இட்டு அவற்றை வெற்றிகரமாக குஞ்சுபொரித்தன. அதுவே இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில்நெருப்புக்கோழிகள் முதன் முதலில் இயற்கையாக குஞ்சு பொறித்த சம்பவம் என்கிறார் ரெட்டி.

இன்றும் இந்த நெருப்புக்கோழிகள் சிறந்த முறையில் இனப்பெருக்கம் செய்து வருவதாக கூறுகிறார் ரெட்டி.

மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவின் ராசி விலங்குகளுக்கும் அடிக்கிறது.