தொடர்கள்
கதை
“புடின், நீ போரை நிறுத்தாவிடின்!” - எஸ்.ஶ்ரீதுரை

2023921000023120.jpeg

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று ஐ நா சபையும் இன்ன பிறநாடுகளும் ஓயாமல் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிற ஸ்திதியில் நம்ம ஊர்க் கவியரசர்துரைஸ்வாமியார் டெல்லியிலுள்ள வெளியுறவுத்துறைச் செயலர் ஜெயசங்கருக்கு சத்தம்போடாமல் ஒரு மின்னஞ்சல் அனுப்பிவைத்தார்.

இத்துனூண்டு தபால் கார்டு கூட போஸ்ட்மேன் தன்னைக் காற்றில் விசிறியடிக்கும்போது “விஷ்க்” என்று ஒரு முனகல் சத்தமாவது எழுப்பும். ஆனால், பத்துப் பதினைந்துபக்கங்களுக்கு இம்மாம் பெரிய மின்னஞ்சல் உங்கள் கம்பியூட்டர் இன்பாக்ஸுக்குள்வந்து விழுந்தாலும் சைலண்ட்டாக விழுகிறதல்லவா? அதனால்தான் சத்தம் போடாமல்மின்னஞ்சல் அனுப்பிவைத்தார் என்கிறேன்.

“மாண்புமிகு வெளியுறவுச் செயலாளர் ஐயா அவர்களுக்கு, வணக்கம். ரஷ்ய அதிபர் புடின்உக்ரைன் போரை நிறுத்துவதற்குக் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு அருமையான ஐடியா நம்ம கைவசம் இருக்கிறது. இப்படிக்குக் கவியரசர் துரைஸ்வாமி” என்ற அந்த மின்னஞ்சலைப் பார்த்த வெ.உ.செ. ஜெயசங்கர் சி.ஐ.டி. ஜெயசங்கராகவே மாறி ஒருகணம் தலையைச் சிலிர்த்துக்கொண்டு“உங்கள் ஐடியாவை உடனே பார்சல் செய்யவும்”என்று பதில் போட்டார்.

“அது என்ன அப்படியொரு அல்ட்ரா மாடர்ன் ஐடியா?” என்று இதைப் படிக்கும் நீங்களெல்லாம் காதைக் கூர் தீட்டிக்கொள்வது புரிகிறது. பாவம்….உங்களையெல்லாம்டென்ஷன் படுத்துவானேன். இதோ இப்பொழுதே சொல்லிவிடுகிறேன்.

சங்க காலத்துப் பழக்கம் அது. இரண்டு ராஜாக்களுக்கு இடையே சண்டை என்று வந்துவிட்டால் கபிலர், மோசிகீரனார் என்று யாராவது இரண்டு சங்கப் புலவர்கள்கிளம்பிவந்து “மன்னா, உன்னுடைய கத்திகளைப் பார், காயலான் கடைக்குத்தான்லாயக்கு. உன் எதிரியின் கத்திகளைப் பார், பீன்ஸ் உசிலி செய்வதற்கு மெல்லிசாகக் காய்நறுக்கும் அளவுக்குக் கூர்மையாக இருக்கிறது” என்று (பிற்காலப் பள்ளிக்கூடசிலபஸ்ஸில் வைக்க வேண்டிய மனப்பாடச் செய்யுள்) எதையாவது கவிதையாகப் பாடிவைப்பார்கள். செய்யுளைக் கேட்கும் ஒரு தரப்பு “என்னுடைய படைகள் அனைத்தும் ஒருதண்டக் கருமம், போருக்கு எல்லாம் அவை லாயக்குக் கிடையாது” என்ற மனோநிலைக்குவந்துவிடுவதால் போர் நடப்பது தவிர்க்கப்படும்.

ஒரு வேளை புலவர் செல்லுமிடம் பலசாலிக் கட்சி என்றால் அந்த மன்னரிடம் பாவம்புண்ணியம் நாள் நட்சத்திரம் என்று எதையாவது சொல்லி கையைப் பிடித்து நிறுத்துவதும்உண்டு.

எப்படியும் போர் என்று வந்துவிட்டால் ஜாலியாக லைவ் டெலிகாஸ்ட் பார்த்துப்பொழுதை ஓட்டலாம் என்று நினைப்பவர்களின் நினைப்பில் இந்தப் புலவர்களின்கைங்கரியத்தால் மண் விழுவது உறுதி.

சங்க கால இலக்கியத்தில் இதற்குச் “சந்து செய்தல்” என்று பெயர். கிடைக்கின்ற சந்து, பொந்து, இண்டு, இடுக்கு எதிலாவது புகுந்து போர் நடைபெறாமல் தடுக்கும் இந்தப்புலவர்களின் உத்திக்கு “சந்து செய்தல்” என்ற பெயர் மிகவும் பொருத்தம்தான்.

இதையேதான் கவியரசர் தன்னுடைய வைர வரிகளில் வெ.உ.செ. ஜெயசங்கருக்குஅனுப்பிய பதில் மின்னஞ்சலிளும் விவரித்திருந்தார். கூடவே, ரஷ்ய அதிபர் புடின்இதற்குக் கட்டுப்படாவிட்டால் இதைப் போன்று சந்துக்கவிதை எழுதுவதற்குநூற்றுக்கணக்கில் தமிழ்க் கவிஞர்கள் வரிசைகட்டிக் காத்திருக்கிறார்கள் என்று ஒருகுண்டைப் போட்டால் அதற்கு பயந்தாவது நிச்சயம் இந்தப் போரை நிறுத்திவிடுவார்என்று உத்தரவாதம் அளித்திருந்தார் கவியரசர் துரைஸ்வாமியார்.

இந்த டீலிங் வெ.உ.செ. வுக்குப் பிடித்துப் போகவே பிரதமர் மோடிக்கு மட்டும் இந்த விஷயத்தைக் காதும் காதும் வைத்தாற் போலத் தெரிவித்து விட்டு இந்திய விமானப் படைவிமானம் ஒன்றில் கவியரசர் துரைஸ்வாமியாரை ஏற்றிச் சென்று கிரெம்ளினில் விட்டுவிடுவதற்கு ஏற்பாடு செய்தார்.

கவியரசர் வெற்றிகரமாகத் திரும்பி வந்தால் உக்ரைனுக்கு நல்லது. அல்லது புடின்ஏதாவது கோபப்பட்டுவிட்டால் (அதன் பின்பு கவியரசர் கவிதை படைக்க வாய்ப்பு இல்லாததால்) அது இந்தத் தமிழ்கூறும் நல்லுலகின் அதிர்ஷ்டம் என்ற அபிப்பிராயத்திற்கு எப்போதோ வந்துவிட்டார் நம்ம ஜெயசங்கர்.

கிரெம்ளினில் கவியரசர் நுழைந்த நேரம் அவரைப் பொறுத்த வரையில் நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாலாபக்கமும் எதிர்ப்பு, பொருளாதாரத் தடைகள், ஐ நா வின் கண்டனம், விளையாட்டுப்போட்டிகளில் ரஷ்யா ஒதுக்கி வைப்பு என்று கடந்த பல மாதங்களாக டென்ஷனிலேயேஇருந்த விளாடிமீர் புடின், அமெரிக்க மிரட்டலுக்கு பயப்படாமல் இந்திய அரசாங்கம்தன்னிடம் பெட்ரோல் வாங்கிக் கொள்ளச் சம்மதித்ததாலும், ஐ நா சபையில் நடுநிலைவகித்ததாலும் வெயில் நேரத்தில் நேஷனல் ஹைவேயின் சாலையோரக் கடையில்ஃப்ரெஷ் ஆக இரண்டு இளநீர் குடித்தது போன்றதொரு மனோநிலையில் இருந்தார்.

இந்திய அரசாங்கத்தின் அறிமுகக் கடிதமும் இருந்ததால் கவியரசர்துரைஸ்வாமியாருக்குக் கிரெம்ளினில் தடபுடல் வரவேற்பு கிடைத்தது. கவியரசர்வெஜிடேரியன் என்பது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்ததால் பாஸ்மதி அரிசிச் சாதம், கரண்டி கரண்டியாய் நெய், சின்ன வெங்காயம் போட்ட சாம்பார், மைசூர் ரசம், உருளைக்கிழங்கு ரோஸ்ட், மங்காய் பச்சடி, பாகற்காய் பிட்லே, அக்காரவடிசல், குணுக்கு, கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம், வெள்ளரிக்காய்த் தயிர்பச்சடி, நார்த்தங்காய் ஊறுகாய்என்று அபாரமான மெனு. (நம்ம ஊர் அறுசுவை அரசு நடராஜனும் புடினும் முகநூல்நண்பர்களாம் ).

அம்மன் கோயில் கொம்பு வாத்தியம் முழங்கியது போன்ற ஒரு சவுண்டுடன் கூடியஏப்பத்துடன் சாப்பிட்டு முடித்த கவியரசர் மனசின் ஒரு மூலையில் மீந்து போனஐட்டங்களைப் பார்சல் செய்து எடுத்துப் போக முடியுமா என்ற கேள்வி குடியமர்ந்துதொந்தரவு செய்து கொண்டிருந்தது.

“சாப்பிட்டு முடித்து விட்டீர்களல்லவா. வாருங்கள் பிரெஸிடெண்ட் புடின் உங்களுடன்பேசக் காத்திருக்கிறார்” என்று செக்ரெட்டரி அழைத்துச் சென்றார்.

கும்பகோணம் நகர வீடுகளின் வாசலிலிருந்து புழக்கடைப் பக்கத்துக்குப் போவதுபோன்று ஏகப்பட்ட தூரம் நடந்து புடினின் அலுவலக அறையை அடைவதற்குள்கவியரசரின் வயிற்றிலுள்ள அனைத்தும் ஜீரணமாகி, அடுத்த இன்னிங்ஸுக்கு மனசுஏங்கத் தொடங்கிவிட்டது.

“வாருங்கள் மிஸ்ட்டர் தொறாய்ஸாமி!” என்று நமது பிரதமர் மோடி திருக்குறள்உச்சரிப்பது போன்ற தமிழில் வரவேற்றார் புடின்.

நரசிம்மராவுக்கும் புடினுக்கும் கூட எப்போதாவது சிரிக்கத் தெரியும் என்பதை நம்பத்தொடங்கிய நம்ம கவியரசர் துரைஸ்வாமியார் சற்றுத் தொலைவில் புடினின் செகரெட்டரிபிளாஸ்க்கைத் திறந்து இரண்டு கோப்பைகளில் மசாலா பாலை நிரப்புவதைத்திருப்தியுடன் பார்த்தபடியே பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்.

கவிஞருக்கு மொழியுண்டோ. கவிஞருடன் நடத்தும் பேச்சுவார்த்தைக்கும் மொழிவேண்டுமோ.

மொழிபெயர்ப்பாளர் யாரையும் வைத்துக் கொள்ளாமலேயே ரஷ்ய அதிபரும் கவியரசரும்நடத்திய பேச்சு வார்த்தை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

“சொல்லுங்கோ மிஸ்ட்டர் தொறாய்ஸாமி. நான் என்ன செய்யணும்?”

பதற்றத்தில் பற்கள் கடகடத்தபடியே, “இந்த உக்ரைன் மீது நீங்க போடுகிற சண்டையைஉடனடியாக நிறுத்திடணும்” என்று சொல்லி முடித்துக் கர்ச்சீப்பால் தனது வியர்வைவழியும் முகத்தைத் துடைத்துக் கொண்டார் துரைஸ்வாமியார்.

கோபப்படாமல் புன்சிரிப்புடன் கேட்டார் புடின் –

“ஒகே. இந்தப் போரை நிறுத்தறதாலே எனக்கு என்ன பிரயோஜனம்?”

நம் நாட்டுப் பெரியகட்சிகள் சீட்டுப் பகிர்வுக்கு வரும் சிறிய கட்சிகளிடம் மூஞ்சியில்அடித்துப் பேசுவதைப் போல, புடினும் நேராக விஷயத்துக்கு வந்து விட்டார். காரியவாதி.

“அமைதிக்கான நோபல் பரிசு உங்களுக்குக் கிடைக்குமே பிரெஸிடெண்ட் ஸார். இத்துனூண்டு பொண்ணு மலாலாவுக்கெல்லம் கிடைச்சிருக்குது. சஷ்டியப்தபூர்த்திவயசைத் தாண்டின உங்களுக்குக் கிடைக்காமல் போய் விடுமா என்ன? நானேரெக்கமண்டு பண்றேன்….” என்று அள்ளிவிட்டார் கவியரசர் துரைஸ்வாமியார்.

“ஒரு வேளை நான் படையெடுப்பே நடத்தாமல் இருந்திருந்தால் கூட எனக்கு அமைதிப்பரிசு கிடைத்திருக்கலாம். ஆனால்,இந்த அளவுக்கு ஆனப்புறம் எப்படி அவார்டுகொடுப்பார்களாம்?”

இவ்வளவு தூரம் லாஜிக்கலாகச் சிந்திக்கத் தெரிந்த புடின் எதற்காகப் போரைத்தொடங்கினார் என்பது புரியாமல் ரூட்டை மாற்றினார் கவியரசர்.

“எனக்குத் தெரிஞ்சு உலக மகா தமிழ்க்கவிஞர் சங்கம்னு ஒண்ணு இருக்கு. அதன் மூலமாகஉங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் தருவதற்கு ஏற்பாடு செய்துடலாம். ஆனால்பரிசீலனைக் கட்டணம் ரூபாய் இருபதாயிரமும், பட்டமளிப்பு விழா கவுனுக்கு வாடகைஐந்நூறு ரூபாயும் கொடுத்துடணும்”

“அதை வெச்சுக்கிட்டு நாக்கை வழிக்கவா…..?”

அட, தமிழ்நாட்டு பாஷை புடினுக்கு எப்படித் தெரிந்தது என்ற வியப்புடன், “அதைவிடுங்க ஸார், எங்க நாட்டுலே ஏகப்பட்ட குளொபல் யுனிவெர்ஸிட்டிகள் இருக்கு. அவங்களை வெச்சு அப்துல் கலாம் அமைதி விருது, அது இதுன்னு ஏதாவது கொடுத்துவிடலாம். செலவும் கம்மிதான், பன்னிரெண்டாயிரம். பட்டமளிப்பு விழா கவுன் வாடகைதள்ளுபடி உண்டு”.

புடின் இலேசாக டென்ஷன் ஆகி விரல்களை நெட்டிமுறிக்கத் தொடங்கினார்.

“இதையெல்லாம் விடுங்க மிஸ்ட்டர் தொறாய்ஸாமி. போரையும் நிறுத்திட்டு, கூடவேஇண்டெர்நேஷனல் லெவெல்லே என்னோட இமேஜையும் உயர்த்த என்ன பண்ணலாம்சொல்லுங்க”.

“ரொம்ப ரொம்ப சிம்ப்பிள் ஸார். உக்ரைன் அதிபர் தம்பி ஜெலன்ஸ்கியோடபடங்களையெல்லாம் நான் ரசிச்சுப் பார்ப்பேன் அப்பிடின்னு சொல்லி அவரைக்கட்டிப்புடிச்சி ஒரு போட்டோ எடுத்து வெளியிடலாம். ரஷ்ய ஃபிலிம்ஃபேர் அவார்டோ, தாதாசாஹேப் டால்ஸ்டாய் அவார்டோ கொடுத்து ஜெலென்ஸியை வளைச்சுப்போடலாம். உக்ரைன் தாய்மார்களுக்கு எல்லாம் இலவசக் கார் வழங்கும் திட்டம், உக்ரைன் குழந்தைகளுக்கு இலவச பர்த்டே கேக் வழங்கும் திட்டம்னு ஏகப் பட்ட ஐடியாஇருக்கு ஸார். இதையெல்லாம் செஞ்சீங்கன்னா நீங்க குண்டு போட்டதையெல்லாம்உலகத் தலைவர்கள் எல்லோரும் ஆட்டோ மேடிக்கா மறந்துடுவாங்க”.

புடின் இலேசாக இம்ப்ரெஸ் ஆனது போல முகத்தை வைத்துக் கொண்டார்.

“கடைசியா ஒரே ஒரு விண்ணப்பம்” என்றர் கவியரசர்

“……..?”

“உக்ரைன் போரை நிறுத்தச் சொல்லி நான் எழுதிய கவிதை ஒன்றைப் படிக்கிறேன். பொற்கிழியெல்லாம் கொடுக்கணும்னு நான் எதிர்பார்க்கவில்லை. எனக்காகசமைச்சதிலே மீந்துபோன சாப்பாடை பார்ஸல் கட்டிக் கொடுத்தால் போதும். என்பெண்டாட்டி பிள்ளைங்களுக்கும் அந்த ஐட்டங்களெல்லாம் ரொம்பப் பிடிக்கும்”.

இந்த் டீலிங் புடினுக்குப் போக, “ம்….படியுங்கள்!” என்றார் இருபத்து மூன்றாம்புலிகேசியுடைய வாய்ஸில்.

அகமகிழ்ந்து தனது கவிதையைப் படிக்கத் தொடங்கினார் கவியரசர் துரைஸ்வாமியார் –

“போரை நிறுத்திவிடு புடின்

தும்ஹாரா காம் பஹுத் கடின்

அவார்டு உனக்குத் தேவைப் படின்

உடனடியாகப் போரை முடின்!“

கைத்தட்டிப் பாராட்டிய புடின், “எல்லாம் சரி மிஸ்ட்டர் தொறாய்ஸாமி. அது என்னமுடின்? தமிழில் அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா என்ன ? “

“என்னடா இது, இந்தத் தமிழ்க்கவிஞனுக்கு வந்த சோதனை?” என்று நொந்து கொண்டகவியரசர் துரைஸ்வாமி, “அது வந்து….எதுகைக்காக போட்ட வார்த்தை புடின் ஸார். இந்த ஜாலிலோ ஜிம்கானா, தமுக்கடிப்பான் டியாலோவை எல்லாம் ஏத்துக்கிட்டதமிழ்கூறும் நல்லுலகம் இதையும் நிச்சயமாக ஏத்துக்கும் ஸார்”.

“என்னாலே ஏத்துக்க முடியலியே “ என்று மனசுக்குள் நினைத்துக்கொண்ட அதிபர் புடின், “ஓக்கே மிஸ்ட்டர் தொறாய்ஸாமி. நீங்க சொன்னதை எல்லாம் நான் நிச்சயம் பரிசீலனைபண்றேன்“ என்று கைகுலுக்கிவிட்டுத் தமது செகரெட்டரியின் காதில் ஏதோமுணுமுணுத்தார்.

மிச்சம் மீதி சாப்பாட்டுப் பார்சலுடன் மனசெல்லாம் நிறைய ரஷ்ய விமானப்படைஸ்பெஷல் விமானத்தில் ஏறி அமர்ந்தார் நம்ம ஊர்க் கவியரசர் துரைஸ்வாமி.

கவியரசரின் விமான கிளம்பிய அடுத்த நொடியில் புடினிடமிருந்து பிரதமர் மோடிக்கு ஒருமின்னஞ்சல் பறந்தது –

“டியர் மோடிஜி. உக்ரைன் விஷயத்தில் நீங்கள் இனிமேல் என்ன சொன்னாலும் நிச்சயம்நான் அதற்குக் கட்டுப்படுகிறேன். தயவு செய்து இனிமேல் கவிஞர்கள் யாரையும் அனுப்பாதீர்கள். என்னால மிடியல!” என்று.