தொடர்கள்
பொது
வண்ணமயமான அமெரிக்க இலையுதிர்காலம் - சரளா ஜெயப்ரகாஷ்

2023920165232747.jpg

அமெரிக்காவில் நவீன இங்கிலாந்து (New England) என்று அழைக்கப்படும் பகுதியிலிருக்கும் நான், நான்கு பருவத்தின் நிகழ்வுகளையும், அதன் அழகையும் இங்கு நன்றாக ரசிக்க முடிகின்றது. கவிஞா்களுக்கும் கட்டுரையாளா்களுக்கும் பிடித்த காலமான இலையுதிர்காலத்தில் ஏற்படும் இயற்கையின் மாற்றங்கள் மற்றும் மக்களின் செயல்பாடுகளை இங்குப் பாா்க்கலாம்.

2023920165324820.jpg

அமெரிக்காவில் இலையுதிர்காலம் என்பது செப்டம்பர் 22லிருந்து டிசம்பா் 21 வரை உள்ள காலம். இந்த மூன்று மாதங்களையும் அமெரிக்க மக்கள் குதூகலமாக கொண்டாடுகிறாா்கள். கோடைகாலத்திலிருந்து இலையுதிா்காலம் வரும்போது நாட்கள் சுருங்கி, சூரிய வெளிச்சத்தின் நேரம் குறைகின்றது. வெப்பநிலை குறைந்து இரவு நன்கு குளுமையாக இருக்கும். பகல் கதகதப்பாக இருக்கும். இவற்றால் இயற்கையே இலைகளின் சுரப்பிக்கு இது இலை உதிரும் நேரம் என்ற செய்தியை அறிவிக்கின்றது. இலைகள் உணவு தயாரிக்கும் வேலையை நிறுத்துவதால், இலைகளின் நிறம் மாறி உதிருகின்றன. இதனால் மரங்களில் தண்ணீரும், சக்தியும் குளிா்காலத்திற்காக சேர்த்து வைக்கப்படுகின்றன. கோடைகாலத்தில் பசுமையான நிறத்திலிருந்த இலைகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, இளஞ்சிவப்பு, பழுப்பு மற்றும் ஊதா நிறங்களாக மாறுகின்றன. கனடா நாட்டின் தேசிய கொடியில் இருக்கும் மேப்பிள் இலை (Maple Leaf) தான் இலையுதிர்காலத்தில் இலை ராணிகளுக்கெல்லாம் ராணியாக திகழும்.

2023920165430541.jpg

இலையுதிர்காலத்தில் எங்கள் பகுதியில் எங்குப்போனாலும் சுற்றிலும் வண்ணமயமான இலைகள்தான் தென்படும். மரங்களின் இலைகளில் வண்ணங்கள் அடர்ந்து சில நாட்கள் காணப்படும் இதனை 'Peak Fall Foliage' என்று சொல்வாா்கள். இதனைப்பாா்க்க அந்த வார இறுதிநாட்களில் மக்கள் ஆவலுடன் பயணிப்பாா்கள். அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் New Hampshire Vermont, Maine போன்ற இடங்கள் Fall Foliage-க்கு மிகவும் பிரபலமான இடங்களாகும். உலகெங்கிலுமிருந்து சுற்றுலா பயணிகள் இந்த இடங்களுக்கு வருகிறாா்கள். நானும் இந்தப் பகுதிகளுக்குச் சென்றேன்.

2023920165523423.jpg

இலைகளுக்கு அழகு போட்டி வைத்தது போல இலை அழகிகளின் அணுவகுப்பை மெய்சிலிர்க்க கண்டேன். சாலையின் இரண்டு பக்கத்திலுள்ள அடர்ந்த மரங்களும் மத்தியில் ஒன்றொடு ஒன்று சாய்ந்து இடைவெளி இல்லாமல் தழுவி கொண்டிருந்தன. அந்த சாலையில் போகும்போது வளைவான மலா்ப்பந்தலின் உள்ளே நடந்து செல்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. சிறுவயதில் வாழ்த்து அட்டைகளில் இந்தக்காட்சியைப் பாா்த்தபோது இவை அத்தனையும் பூக்கள் நிறைந்த மரங்கள் என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன்.

2023920165602487.jpg2023920165643398.jpg2023920170932306.jpg

கூழாங்கற்கள் மற்றும் பாறைகளால் சூழந்திருக்கும் ஓடையில் தண்ணீர் சலசல வென ஓடிக்கொண்டிருந்தன. அருகிலிருந்த மரங்களிலிருந்து கொட்டிய வண்ண இலைகள் ஆங்காங்கு ஓடையில் காணப்பட்டன. சிறிது தூரம் நடந்தப்போது அமைதியான நீர்நிலையில் இயற்கையின் வா்ணஜாலத்தை தண்ணீரில் காணமுடிந்தது. அவை கரையோரம் இருந்த மரங்களின் பிரதிபலிபாகும். சூரியனின் ஒளிவீச்சு மஞ்சள், ஆரஞ்சு நிற இலைகளின் மீது பட்டு, அவை தங்க இலைகள் போல தகதக வென மின்னின. நீர்நிலைக்கு நடுவே ஆங்காங்கு சிறிய நடைபாலங்கள் இருந்தன. ஓரே மரத்தில் நான்கு அல்லது ஐந்து நிறங்களில் இலைகள் காணப்பட்டன. இந்த அழகினை கண்டுகளித்து கொண்டே கரையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். காய்ந்த இலைகளின் மேல் கால்வைத்து நடக்கும்போது, அவை சரக்சரக் என்ற சத்தத்தை எழுப்பியது. தென்றல்காற்றும், இளஞ்சூடான வெப்பமும் கதகதப்பான உணா்வினை கொடுத்தது. சற்று ஈரமான ரோட்டில் ஒட்டிகொண்டிருந்த வண்ணஇலைகள், கருப்புநிற சேலையில் இருக்கும் அழகான இலைகளின் அச்சு போல இருந்தன. இந்தச்சூழலைப் பாா்க்கும்போது இதனைவிட ஒரு இயற்கை எழில் சூழ இருக்கும் காட்சியை வேறு எங்கு காண முடியும் என தோன்றியது.

2023920171316588.jpg

சிறிது தூரம் காா்பயணம் சென்று ஒரு மலைப்பிரதேசத்திற்கு வந்தேன். வானத்துக்கும் மலைக்கும் தூதுவனாக மேகங்கள் காட்சியளித்தன. மலை முழுவதும் வண்ண துணி மூட்டைகளாக மரங்கள் நிரம்பியிருந்தன. இதன் பிரதிபலிப்பு மலையை ஒட்டிய ஏரித்தண்ணீரில் காண ஆனந்தமாக இருந்தது. சிறுவயதில் பாா்த்த ஓவியத்திற்கு உயிர்கிடைத்த மாதிரி இருந்தது.

2023920171420857.jpg

மக்கள் நடந்தும், மலையேற்றம் செய்தும் சைக்கிள் மற்றும் காரில் பயணம் செய்தும் Fall Foliage பார்க்கிறார்கள். சுற்றுலா தளங்களில் மலை இருக்கும் இடங்களில் எல்லாம் Gondola Ride, Chair Ride, சிறிய ரயில் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பாா்கள். இதில் மக்கள் சென்று உயரத்திலிருந்து Fall Foliage அழகினை கண்டு களிக்கிறாா்கள். நிறைய இடங்களில் Fall Festival நடக்கும். அங்கு பல ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

202392017151645.jpg

இவற்றில் அப்போது அறுவடையாகி வரும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பலவித கலைப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பாா்கள். இங்கு சிறிய உணவகமும் இருக்கும். சமையல் போட்டிகள், சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுகள், நடவடிக்கைகள் மற்றும் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும். Halloween கொண்டாட்டங்களும் நடைபெறும். ஊர்வலம், பேய் சம்பந்தமான வேடிக்கைகள், விளையாட்டுகள் நடத்தப்படும். இலையுதிர்காலத்தில் Scarecrow Festival, International Rice Festival, Food Truck Festival மற்றும் Hot air Balloon Festival என்ற பெயரிலும் விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் சில விழாக்களில் நிலங்கள் மற்றும் விவசாயத்தை பற்றிய முக்கியத்துவத்தை உணா்த்துவதாகவும் உள்ளன.

2023920171556547.jpg

இலையுதிர்காலத்தில் மிகவும் பிரசித்த பெற்ற நடவடிக்கைகள் Apple Picking, Hayride, Pumpkin Patch மற்றும் Corn Maze ஆகும். Apple Picking - ஆப்பிள் பழத்தோட்டத்திற்கு குழந்தைகளுடன் சென்று நேரடியாக பழத்தைப் பறித்து வந்து, ஆப்பிளை உபயோகப்படுத்தி பலவித பேக்கரி உணவுகளை தயாரித்து குடும்பத்துடன் சேர்ந்து உண்டு மகிழ்வாா்கள். சில இடங்களில் இந்த காலத்தில் பேரிக்காய், ப்ளம் ஆகிய பழங்களும் பழத்தோட்டங்களில் இருக்கும். சிறிய உணவகமும் வைத்திருப்பாா்கள். அங்கு தோட்டத்திலிருது வந்தப் பழங்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆப்பிள் சாறு (Apple Cidar), பேக்கரி உணவுகள் முதலியன விற்பனைக்கு இருக்கும்.

2023920171651120.jpg

Pumpkin patch - நிலத்திலிருந்து அறுவடை செய்யப்பட்ட பூசணிக்காயை குவியல் குவியலாக ஆங்காங்கு போட்டு வைத்திருப்பார்கள். மக்கள் அங்கும் சென்று சமையலுக்கு, வீட்டு அலங்காரத்திற்கு மற்றும் halloween கொண்டாட்டத்திற்கு என அவரவர்களின் தேவைக்கேற்ப பூசணிக்காயை தேர்ந்தெடுத்து வாங்கி வருவார்கள். சில இடங்களில் வயலுக்கு நேரடியாகப்போய் பூசணிக்காயை எடுத்து வரும்படியாகவும் வைத்திருப்பார்கள். Hayride - திறந்தவெளி டிரக்கில் வைக்கோலை குவித்து வைத்திருப்பார்கள். அவற்றில் சிறுவர் சிறுமிகள் உட்கார்ந்து விவசாய நிலம் அல்லது பழத்தோட்டத்தைச் சுற்றி சவாரி போய் மகிழ்வார்கள்.

2023920171728234.jpg

Corn Maze - சோள நிலத்தில் ஒரு புதிர் பாதையை (maze) உருவாக்கியிருப்பார்கள். மக்கள் அதில் நுழைந்து வெளியே வர வழி தெரியாமல், அங்குமிங்கும் சென்று கடைசியாக வழியை கண்டுபிடித்து வெளியே வருவார்கள். மக்கள் இவை அனைத்திலும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

2023920171913349.jpg2023920171943253.jpg

இலையுதிர்காலத்தில் pumpkin spice போட்ட பேக்கரி உணவுகள், காபி மற்றும் தேநீர் உணவகங்களில் விற்கப்படுகின்றன. இந்த காலத்தில் மக்கள் தோட்டங்களில் நெருப்பு மூட்டி (bonfire) குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கூடி மகிழ்வார்கள். தோட்டங்களில் சமைத்து உணவு உண்டு ஆனந்தப்படுவார்கள். Fall Camping-ம் மிகவும் பிரபலம். இக்காலத்தில் புகை வாடையும் உணவு சமைக்கும் வாடையும் அதிகமாக முகர நேரிடும். இலையுதிர்காலத்தில் ஐம்புலன்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும். இலையுதிர் காலத்தில் தான் மக்கள் மிகவும் உற்சாகமாக Halloween மற்றும் Thanks giving day கொண்டாடுகிறார்கள். மக்கள் அவரவர் வயது, விருப்பத்துக்கேற்ப இலையுதிர்கால கொண்டாட்டங்களை கொண்டாடுவார்கள்.

இலையுதிர்காலம் விவசாயிகளுக்கு முக்கியமான பருவமாகும். ஓவியப்பிரியர்களுக்கும் பிடித்தமான காலம். மக்கள் இந்த காலத்தில் வீட்டு முகப்பு, வரவேற்பறை மற்றும் வீட்டு முன்புறம் உள்ள தோட்டத்தில் அலங்காரம் செய்வார்கள். பூசணிக்காய், சாமந்திப்பூக்கள் உள்ள தொட்டிகள், Scarecrow, வைக்கோல் முதலியவற்றால் வீட்டு முகப்பையும் தோட்டத்தையும் அழகுபடுத்துவார்கள்.

இலையுதிர்காலத்தை மனித வாழ்க்கையோடு ஒப்பிட முடிகின்றது. இக்காலத்தில் இலைகளின் நிறம் மாறி உதிர்ந்து வெற்று மரமாக காட்சியளிப்பது, மனித வாழ்க்கையிலும் ஒவ்வொரு நிலையும் மாறுகின்றது என்ற உன்னதமான தத்துவத்தை உணர்த்துகின்றது.