சண்முகானந்தா சபாவுக்கும் ஸ்ரீராம் ஃபைனான்ஸுக்கும் அறிமுகம் தேவையில்லை.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (Knit India Through Literature - KITL) என்ற வகையில் நமது தமிழ் எழுத்தாளர் சிவசங்கரியின் எழுதிய நான்கு தொகுதிகளடங்கிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவை இசை மூலம் இந்திய இணைப்பு (Knit India Through Music) என்ற வகையில் அருணா சாயிராம் அவர்களின் இந்திய மொழிகளில் இசைத் தாண்டவம் மூலம் கொண்டாடுவோம் என்று முனைந்தது சண்முகானந்த சபாவும் ஶ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனமும்.
சிவசங்கரி கடந்த 54 ஆண்டுகளாக எழுதி வருகிறார். நாவல்கள், சிறுகதைகள், பயணக் குறிப்புகள் மற்றும் சுயசரிதைகள் என எல்லா வகையிலும் அவரது எழுத்து பரிணமித்துள்ளது.
மூத்த குடிமக்களின் பிரச்சனைகள், போதைப் பழக்கம், மதுப்பழக்கம், சிறுவர் துஷ்பிரயோகம், கண் தானம் மற்றும் பணிபுரியும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்ற சமூகப் பிரச்சனைகள் குறித்த அவரது நாவல்கள், கதைகள் மற்றும் கட்டுரைகள் சமூகத்தில் பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாசகர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகளை திறம்பட கையாளவும் உதவியது என்பது அனைத்து தமிழ் வாசகர்களும் ஆமோதிக்கக் கூடியதே.
சிவசங்கரியின் படைப்புகள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது, இதில் எட்டு பேராசிரியர்கள் மற்றும் ஐந்து பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன, இன்று வரை 80 க்கும் மேற்பட்ட M.Phil & Phd மாணவர்கள் அவரது கதைகளை ஆராய்ச்சி செய்துள்ளனர்.
கஸ்தூரி சீனிவாசன் விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது, கொல்கத்தாவின் பாரதிய பாஷா பரிஷத் விருது, பிரேம்சந்த் விருது உள்ளிட்ட பல புகழ்பெற்ற விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்த பாராட்டு விழா நடந்து கொண்டிருக்கும் போதே சரஸ்வதி சம்மான் விருது பெற்ற தகவல் அவருக்கு கிடைத்தது.
ஆங்கில ஃபெமினா இதழின் பொன்விழா நினைவு இதழால், இந்தியாவில் தாக்கம் செலுத்திய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய 50 பெண்களில் ஒருவராக அவர் கொண்டாடப்பட்டார். சர்வதேச பெண்கள் சங்கத்தால் விமன் ஆஃப் த இயர் 1999-2000 என்றும் கொண்டாடப்பட்டார்.
ஆகஸ்ட் 2000 இல் நூலகத்தின் இருநூறாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், காங்கிரஸின் அமெரிக்க நூலகத்தின் காப்பகங்களுக்காக அவர்களின் சொந்தக் குரலில் படைப்புகள் பதிவு செய்யப்பட்ட நான்கு எழுத்தாளர்களில் ஒருவராக சிவசங்கரி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிவசங்கரி தனது தொண்டு அறக்கட்டளை மூலம் பல் வித சேவைகளை ஆதரித்து வருகிறார்.
இலக்கியத்தின் மூலம் இந்தியாவை இணப்போம்- இது ஒரு மெகா இலக்கியத் திட்டம் - இது இந்திய இலக்கியத்தில் முதன்முறையாக, அவர் 16 ஆண்டுகளாக செய்த தவத்தின் விளைவு.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளைச் சேர்ந்த துணிச்சலான எழுத்தாளர்களின் நேர்காணல்கள், அந்தந்த எழுத்தாளரின் ஆக்கப்பூர்வப் பணியுடன், பல்வேறு பிராந்தியங்களின் பயணக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. அந்தந்த மொழியின் கலாச்சாரம் மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக ஒவ்வொரு படைப்பாளரின் ஆழமான கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது.
நான்கு தொகுதிகளின் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் –
தெற்கிலிருந்து :- மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகள்
கிழக்கேயிருந்து :- பெங்காலி, மணிப்பூரி, ஒரியா, அசாமிஸ் மற்றும் இந்திய நேபாளி எனும் ஐந்து மொழிகள்
மேற்கிலிருந்து :- மராட்டி, குஜராத்தி, கொங்கனி மற்றும் சிந்தி என நான்கு மொழிகள்
வடக்கிலிருந்து :- இந்தி, உருது, பஞ்சாபி, காஷ்மீரி மற்றும் சமஸ்கிருதம் என ஐந்து மொழிகள்
ஆக நான்கு தொகுதிகளின் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் அன்று வெளியடப்பட்டன.
அவரது பயணக்கட்டுரைகள், அவரது நேர்காணல்கள், அவர் தேடிய ஒவ்வொரு இலக்கியத்தின் மேலோட்டமான ஒரு தெளிவு அனைத்தும் ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்துகின்றன.
ஒற்றுமை
நமது எழுத்தாளர்களும் கவிஞர்களும் இன்று நம் நாட்டைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்கு தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தும் அக்கறை. மக்களின் சிந்தனையை மாற்றுவதற்கும், இந்தப் பிரச்சனைகளை அகற்றுவதற்கும் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களால் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்ய முடியும் என்று அவர் தனது திட்டத்தின் மூலம் உணர்கிறார்.
பாராட்டுக்குவியல்களையும் வாழ்த்துக்களையும் பெற்ற சிவசங்கரி தனது ஆக்கத்தைப்பற்றி பேசினார்.
ஸ்ரீராம் ஃபினான்ஸ் இந்த புத்தக தொகுப்புகளின் சுமார் 400 பிரதிகளை நாடெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள், பெரிய நூலகங்களுக்கு அனுப்பி வைத்தது அவரால் மறக்கமுடியாதது என்கிறார்.
நரநாராயணன் என்ற அசாமீஸ் ராஜா. ஒரு இரவுக்குள் பாகவதத்தை எழுதித்தரவேண்டும் என்று கூற அன்றிருந்த ஒரு புலவர் குணமாலா என்ற தலைப்பில் அதை செய்தும் தந்திருக்கிறாராம். யானையைப் பானைக்குள் அடக்குவது என்பது முடியுமா என்றால் முடியும் என்ற உணர்வு அசாமீஸ் இலக்கியத்தை ஆராயச் சென்ற போது கிடைத்ததை நினைவு கூர்ந்தார். அதாவது தனது 16 வருட தவத்தைக் கூற அவருக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டதைத் தான் அவ்விதம் கூறினார்.
நாங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும் இணைக்கப்படவில்லை. போன் இல்லை. விமானப் பயணமும் அதிகச் செலவு ஆகும். தொடர்பு மிகவும் மெதுவாக இருந்தது.
பெண், கலாச்சாரம், இளைஞர்கள் என்ற ஒரு பொது தலைப்புகளில் இலக்கியம் படைத்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
ஒரு மண்ணின் வாசனை, மக்கள், மொழி, கலை, கலாச்சாரம், ஆகியவற்றை அறிய வேண்டுமென்றால் அந்த மண்ணில் பிறந்த மொழியில் உள்ள இலக்கியத்தைப் படைத்த படைப்பாளியின் மூலமே அறியலாம் என்று முன் மொழிகிறார். எத்தனை பலமான கண்ணோட்டம்.
அன்று இந்த தலைப்புகளில் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுப்பதே கடினம். லைப்ரரிகளில் தேடினேன். நோட்ஸ் எடுப்பேன்.
- அடித்தள செய்தி சேகரித்தல்
- களப்பணி
- தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த எழுத்தாளர்கள் வசிக்கும் இடங்களை அடைவது, தொலைதூரப் பகுதிகளில் பலர், மிகவும் ஏழ்மையானவர்கள், வாழ சரியான இடம் கூட இல்லை.
- அவர்களுடன் இருந்து,அவர்களுடனான நேர்காணல்களை டேப் செய்வது அவற்றை மொழிபெயர்ப்பது
16 வருட தவம் இது. தனி ஒரு மனுஷியாக செயல்பட்டேன். அனைத்து செலவும் எனது சொந்த செலவுதான். அந்த கால ஒலி நாடா கொண்டு பதிவு செய்யப்படும் டேப் ரெகொர்டர் இரண்டு, போட்டோ எடுக்க பிலிம் ரோல் நிரப்பப்பட்ட இரண்டு காமிராக்கள் எழுத நோட்டுப் புத்தகங்கள், அந்தந்த எழுத்தாளரைப் பற்றி முன் கூட்டியே சேகரித்த தகவல்கள் என எனது ஒவ்வொரு பயணமும் இருக்கும் என்றார்.
எனக்கு இன்று 81 வயது. நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
எனக்கு 4 குழந்தைகள் இருப்பதாக நான் சொல்கிறேன், KITL இன் நான்கு பகுதிகள்.
நமது இந்தியாவின் நீளம் மற்றும் அகலத்தை உள்ளடக்கிய இந்த பணியில் 102 எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை நேரில் சந்தித்ததை பெருமையாக கூறினார்.
அது ஒரு பாரத தரிசனம்.
இலக்கியத்தில் புது புது கோணங்களைத் தெரிந்துகொண்டேன். புழு பட்டாம்பூச்சியாய் ஆவது போலே.
பாரத இலக்கியம் பல மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
எழுத்தாளர் எழுதிவிட்டு இறந்து விடுகிறார். ஆனால் அவரது படைப்பை வாசகன் படிப்பதன் மூலம் அந்த படைப்பு வாழ்கிறது.
ஒரு வட இந்திய எழுத்தாளன் பிண எரிப்பு கூடத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். அவரையும் பேட்டி எடுத்தேன். அவர்களது பின்னணி மிகவும் பின்தங்கியது. ஏழ்மை வறுமை அவர்களது சொத்து. அன்றாடங்காய்ச்சியாய் இருப்பர்.
முடிவில் இந்த பாரத எழுத்தாளர்களைக் கண்ட பின் எழுத்தில் புது புது கண்ணோட்டங்கள் மிளிர்வதைக் கண்டேன். இதற்கென ஆயிரமாயிரம் மைல்களை வானத்திலும் நிலத்திலும் பறந்தும் கடந்தும் நடந்தும் சென்றேன்.
அனுமார் மாதிரி முடியாது ஆனால் அணில் மாதிரியாவது நாம் சமூக சேவையை நமது கடமையாக்கிக்கொளவது அவசியம். தேசீயம் எனது மூச்சு என்றும் ஓங்கி உரைத்து தனது உரை முடித்தார்.
அருணா சாயிராம் முதல் நாள் 5 மணி நேரம் பல் வேறு மொழிகளில் பாடல்களை பயிற்சி மேற்கொண்டாராம். அன்று இரண்டு மணி நேரத்தில் சுமார் மராட்டி, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, பன்மொழி கலந்த ஒரு மெட்லி, காஷ்மீரி, தமிழ், மலயாளம், மராட்டி என பன் மொழி இசை விருந்தை கொடுத்துவிட்டார்.
சிவசங்கரி இலக்கியம் மூலம் இந்தியாவை இணைக்கும் இமாலய பணி செய்தார் எனில் அவருக்கு இணையாக அருணா சாயிராம் அவர்கள் இசை மூலம் இந்தியாவை இணைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சக்ரவர்த்தி, நாங்களும் அனைத்து இந்தியாவிலுள்ள சிறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நிதிக் கடன்கள் தந்து தொழில் வளர்ச்சிக்கு உதவி வருகிறோம் என்றார். ஆம், ஸ்ரீராம் ஃபைனான்ஸும் நிதி மூலம் இந்தியாவை இணைத்து வருகின்றனர் என்பதே உண்மை.
(கேள்விகளை அனுப்புங்கள் பதில் அனுப்புகிறேன் - சிவசங்கரியுடன் பால்கி)
எழுத்தாளர் சிவசங்கரியிடம் நேர்காணல் கேட்ட போது உங்கள் கேள்விகளை எழுதி அனுப்புங்கள் பதில் அனுப்புகிறேன் என்றார்.
அவர் பதில் கிடைத்தவுடன் பிரசுரிக்கப்படும். காத்திருக்கிறோம்.
Leave a comment
Upload