தொடர்கள்
சோகம்
எம்.எஸ்.சுவாமிநாதன் ! மாலா ஶ்ரீ

20230830000356133.jpeg

கும்பகோணத்தில் கடந்த 1925-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7-ம் தேதி டாக்டர் எம்.கே.சாம்பசிவன்-பார்வதி தங்கம்மாள் தம்பதியின் 2-வது மகனாகப் பிறந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். அங்கு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் விலங்கியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். பின்னர் வேளாண் அறிவியல் மற்றம் மரபியல் படிப்பைத் தொடர்ந்தார். இவரது தந்தை மருத்துவர் என்பதால், சுவாமிநாதனும் டாக்டராகி, அவர்களின் மருத்துவமனையை கவனித்துக் கொள்ள வேண்டும் என பெற்றோர் விரும்பினர். எனினும், கடந்த 1942-ம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் சுவாமிநாதனை மனதளவில் பெரிதும் பாதித்தது.

இதைத் தொடர்ந்து, கோவை வேளாண் கல்லூரியில் இளங்கலை பட்டமும், டெல்லியில் வேளாண் அறிவியல் மற்றும் மரபணு பயிர்கள் குறித்து முதுகலைப் பட்டமும் சுவாமிநாதன் பெற்றிருக்கிறார். பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயின்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இந்தியாவின் பசுமை புரட்சியை முன்னெடுத்து நடத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இதன்மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்றார். பின்னர் இவர் வேளாண்துறை செயலாளர், மத்திய திட்டக்குழு துணை தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 1960-ம் ஆண்டு பசுமை புரட்சி ஏற்பட்டது. அச்சமயத்தில், அதிக மகசூல் தரும் விதைகள், இயந்திரமயமாக்கப்பட்ட நவீன பண்ணை கருவிகள், நீர்ப்பாசன முறைகள், களைகொல்லிகள், உரங்கள் போன்ற புதுமைகளின் வேலைவாய்ப்பு மூலம் இந்திய விவசாயத்தை ஒரு நவீன தொழில்முறை அமைப்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் மாற்றியமைத்தார். இதன்மூலம் இந்திய வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, இந்தியாவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறவைத்துள்ளார். இதனால் அவர் ‘இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்-

மேலும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக கடந்த 1972-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டுவரை செயல்பட்டு வந்திருக்கிறார். எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு 3 பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், ஆசியாவின் நோபல் என போற்றப்படும் ‘மகசேசே’ விருதையும் பெற்றுள்ளார். பின்னர் சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையைத் துவங்கி, அதன்மூலம் விவசாயத்தில் பல்வேறு அதிநவீன கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் புதிய ரக உணவு பயிர்கள் மற்றும் அதன் அதிக மகசூல் குறித்து மத்திய அரசுக்கு வழங்கி வந்துள்ளார்.

இவரது மனைவியும் எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலருமான மீனா சுவாமிநாதன், கடந்த ஆண்டு மார்ச் மாதம் மரணமடைந்தார். இத்தம்பதிக்கு சௌம்யா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் என்ற 3 மகள்களும் 5 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது 90-வது வயதிலும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் சுறுசுறுப்புடன் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி தனது 98-வது வயதில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனியில் உள்ள தனது இல்லத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான வேளாண் மாணவர்களும் முனைவர்களும் நேரில் சென்று மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடந்த 29-ம் தேதி மாலை அவரது உடலுக்கு அரசு சார்பில் காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.