ஒவ்வொரு நோயாளிக்கும் மருத்துவரை காணும் பொழுது அவர் கடவுளின் பிம்பமாகவே தோற்றமளிக்கிறார். மருத்துவரின் பரிவான பேச்சும், நம்பிக்கையுமே அந்த நோயிலிருந்து ஒருவரை வெளிக்கொணரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் சிறுநீரகத் துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்து பலருக்கும் விடிவெள்ளியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். நிதானமான இவரது பேச்சு, கனிவோடு கண்டிப்பும் கலந்த இவரது மருத்துவம் பலராலும் பெரிதும் பாராட்டி பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
சேப்பியன் பவுண்டேஷன் என்னும் இவரது தொண்டு நிறுவன விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததின் பேச்சு மருத்துவர் ராஜன் அவர்களை பற்றி அறியும் ஆவலை தூண்ட விகடகவிக்காக மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டேன்.. இனி....
தங்களுடைய பள்ளிப் பருவம் மற்றும் கல்லூரி படிப்பு பற்றி கூற இயலுமா?
நான் பிறந்து வளர்ந்தது பம்பாயில், அந்தக் காலத்தில் நாம் மும்பையை பம்பாய் என்றுதான் அழைப்போம். நான் படித்தது, சவுத் இந்தியன் வெல்பார் சொசைட்டி உயர்நிலைப் பள்ளி. என் தந்தை நான் தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பியதால் அங்கு சேர்ந்து படித்தேன். நாங்கள் காட்கோபர் என்னும் இடத்தில வசித்து வந்தோம். இந்தப் பள்ளி வடாலாவில் இருக்கிறது, இரண்டு தொடர்வண்டிகள் (train) மாறி தான் செல்ல வேண்டும். அது ஒரு சாதாரண பள்ளி, நடுத்தர மற்றும் அதற்கு கீழ் இருக்கும் மாணவர்கள் தான் அங்கு கல்வி பயில வருவார்கள். கான்வென்ட் மாதிரியோ அல்லது பணக்கார குழந்தைகள் அங்கு வர மாட்டார்கள். ஆனால் அந்தப் பள்ளியில் தமிழ் மொழி அல்லது மலையாளம் கற்கும் வாய்ப்பு இருந்தது. அதன் பின்னர், ஜெய் ஹிந்த் கல்லூரியில் சேர்ந்தேன். அதுவும் தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வே. என்னுடைய தேர்வு முடிவு பற்றி தெரிந்து கொள்வதற்காக என் தந்தை அவரது நண்பர், ஹிந்து பத்திரிகையில் பணிபுரிபவர். அவரைத் தொடர்பு கொண்டார். அப்பொழுது அவர் தங்கள் மகன் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகவும் ஜெய் ஹிந்த் கல்லூரியில் சேரச் சொல்லியும் ஆலோசனை வழங்கினார். அப்பொழுது நாங்கள் செம்பூரில் வசித்து வந்தோம். அந்தக் கல்லூரி செல்வது தொலைவாக இருந்தாலும், டாப் கல்லூரியாக அது விளங்கியதால் அங்கு சேர்ந்தேன். பொதுவாக அந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு அறிவியல் படித்தவர்கள் IIT சென்று விடுவார்கள். இன்டெர்மீடியேட் முடித்தவர்கள் மருத்துவம் படிக்கச் சென்று விடுவார்கள்.
இளம் வயதிலேயே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்ததா ?
அப்படிச் சொல்ல முடியாது, ஆர்வம் இருந்தது என்று கூற இயலாது. ஒரு முறை பள்ளியில் கட்டுரை எழுதும் பொழுது நான் ஒரு அரசியல்வாதியாக வேண்டும் என்று தான் எழுதி இருந்தேன். எனவே மருத்துவத் துறையில் வர வேண்டும் என்பது என் லட்சியம் அல்ல . ஆனால் எங்கள் வீட்டில் இன்ஜினியரிங், அக்கௌன்டன்ட் என பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றிருந்தனர் . மருத்துவம் ஒன்று தான் மிஞ்சி இருந்தது. எனவே குடும்பத்தில் அனைவருமாக நான் மருத்துவம் படிப்பது என்று முடிவு செய்தோம். நான் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் சேர்க்கை எளிதாக இருந்தது. இன்டெர்மீடியேட் சயின்ஸில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாக வந்தேன். மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை நேர்காணல் என்பது அந்தக் காலத்தில் இல்லை. யார் யாருக்கு சேர்க்கை கிடைத்தது என்ற விவரத்தை சேர்க்கை பலகையில் அறிவித்து விடுவார்கள். K.M. மருத்துவமனையில் சேர்ந்தேன், அன்று அதுவே நமது இந்திய நாட்டின் மிகச் சிறந்த நிறுவனம். நம்பர் 1 என்று கூட சொல்லலாம். என்னுடைய மருத்துவப் படிப்பும் உதவித்தொகை கிடைத்ததால் இலவசமாகவே படித்து முடித்தேன். உடை, உணவு, புத்தகம் வாங்கிய செலவு போக என் கையில் பணம் இருந்தது என்றே கூறலாம். மருத்துவப் படிப்பிலும் நான் கோல்ட் மெடல் பெற்றேன். அப்பொழுது எல்லாம் மருத்துவர்களுடைய மகன்களோ/மகள்களோ தான் கோல்ட் மெடல் பெறுவார்கள். சாதாரண மாணவன் பெறுவது என்பது அரிது. ஆனால் என்னுடைய பேராசிரியர் எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். அறுவை சிகிச்சை நடைமுறையில் (Surgery Practicals) நான் பம்பாய் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவனாக வந்தேன். அதே போன்று மொத்த மதிப்பெண்களிலும் முதல் ரேங்க் எடுத்திருந்தேன்.
சிறுநீரகத் துறையை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்?
முன்பு கூறியது போன்று மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கியதால் நான் எந்தத் துறை கேட்டிருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பிருந்தது. நான் இருதய நிபுணராக வேண்டும் என்று தான் எண்ணி இருந்தேன். முதல் மாணவனாக வருபவர் எப்பொழுதும் துறைத் தலைவரின் கீழ் சேர வேண்டும். Dr.நாயர் என்பவர் தான் இருதய நிபுணர் மற்றும் துறை தலைவராகவும் இருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டார். Dr.ஆச்சார்யா என்பர் துறை தலைவரானார், அவர் ஒரு சிறுநீரக மருத்துவர். நான் அவருக்கு கீழ் என்னுடைய படிப்பை தொடர்ந்தேன். அப்படித் தான் இந்த துறைக்குள் வந்தேன், ஆனால் வந்த பின்னர் இதில் எனக்கு மிகவும் ஆர்வம் ஏற்பட்டது. எத்தகைய கடினமான துறை என்பதும் விளங்கியது. ஏனென்றால் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். சிறுநீரகத்தின் வேலை என்றால் அனைவரும் என்ன கூறுவார் - கழிவுப்பொருள் நீக்குதல் என்று. அது மட்டும் அல்ல, நம் உடம்பில் உள்ள உள் சூழலை (Internal Environment) செவ்வனே பராமரிப்பது சிறுநீரகம் தான். எனவே சிறுநீரகம் சீராக செயல் படுவது மிகவும் முக்கியமான ஒன்று. 1983 இல் படிப்பு முடித்து அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்தேன். அந்த வருடம் தான் அப்போலோ மருத்துவமனை துவங்கி இருந்தனர். என் தந்தைக்கு தெரிந்த ஒருத்தர் சென்னையில் மிகப் பெரிய புதுமையான மருத்துவமனை தொடங்கி இருக்கிறார்கள், உங்கள் மகன் அங்கே சேரக்கூடாதா என்று கூறினார். அதனால் தான் அப்போலோவில் சேர்ந்தேன். Dr.Mani என்பவர் அப்பொழுது ஒரு சிறந்த சிறுநீரக மருத்துவர், நான் அவரிடம் பணிபுரிய ஆசைப்பட்டேன். அவரை அணுகிய பொழுது அவரும் அப்போலோ மருத்துவமனைக்கு செல்வதாகவும், வேண்டுமென்றால் என்னையும் அங்கு வந்து அவரோடு வேலை பார்க்கும் படியும் கூறினார்.
சிறுநீரகத் துறையில் உங்களின் சாதனைகள், தங்களின் தொண்டு நிறுவனங்கள் பற்றி ?
1984இல் பணி புரிந்து கொண்டிருந்தபொழு, Dr.மணி அவர்கள் ஒரு முறை என்னை அழைத்து நான் நேரத்தை வீணடிப்பதாகவும், நானே சுயமாக வேலை செய்யும் திறமை இருப்பதாகவும் கூறினார். நீ எங்கு வேண்டுமோ சேர்ந்து கொள், நானே சிபாரிசு செய்கிறேன் என்றும் கூறினார். எனவே நான் தனியாக விஜயா மருத்துவமனையில் என்னுடைய பயிற்சி ஆரம்பித்தேன். அப்பொழுது சென்னையில் மொத்தம் நான்கு அல்லது ஐந்து சிறுநீரக மருத்துவர்கள் தான் இருந்தனர். எனவே எங்கே கூப்பிட்டாலும் சென்று விடுவேன். டயாலிசிஸ் யூனிட் (சிறுநீர் பிரித்தல்) பலவற்றை ஆரம்பித்தோம். அது மட்டுமல்ல Voluntary Health Service சென்னை அடையாறில் உள்ளது, முதல் இருபத்தைந்து நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தோம். குறிப்பாக இதில் "Dialysis without blood group match" அதாவது ரத்த பொருத்தம் இல்லாமல் சிறுநீரக மாற்று சிகிச்சை நான் தான் அறிமுகம் செய்து வைத்தேன். இதில் எனக்கு மிகவும் ஆர்வம் இருந்தது. 1997யில் ஜப்பானியர்கள் இந்த துறையில் கோடி கட்டிப் பறந்து கொண்டிருந்தனர். நான் அவர்களை தொடர்புகொண்டு, டோக்கியோவிற்கு நேரில் சென்று பார்த்து வியந்தேன், எவ்வாறு இவர்களால் மட்டும் இது சாத்தியமாகிறது. அமெரிக்கர்களாலும், இங்கிலாந்துக்காரர்களாலும் செய்ய முடியாதது இவர்கள் எப்படி செய்கிறார்கள் என்ற வினா என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அதை நேரில் சென்று கற்றேன். Dr,தோமா , Dr,டோனபே அவர்கள் தான் எனக்கு வழிகாட்டியாகவும், மிகுந்த உதவியும் செய்தனர். இந்தியாவிற்கு வந்து இதை அறிமுகம் செய்து வைத்தேன், இன்று இதை பலரும் செய்கின்றனர். ஆனால், இதற்கு நானே முன்னோடி என்று கூறலாம். தொழில்நுட்பம் மூலம் உடம்பில் உள்ள அந்த ஆன்டிபாடிஸ் அனைத்தையும் எடுத்து விடுவதன் மூலம் இது சாத்தியமாகிறது. இரண்டாவது, சிஸ்டினோசிஸ் என்ற ஒரு அபூர்வ நோய், அநாதை நோய் என்று கூட சொல்லலாம். அநாதை நோய் என்று ஏன் கூறுகிறோம் என்றால் உலகத்திலேயே கிட்டத்தட்ட இரண்டாயிரம் நோயாளிகள் தான் உள்ளனர். மருந்து இருக்கிறது, ஆனால் மிகவும் விலை உயர்ந்தது. இதை கண்டுபிடிப்பது என்பது கடினம். ஆரம்பத்தில், சின்ன வயதில் கண்டுபிடிக்க வேண்டும்.சிறுநீரகத்தை பரிசோதிப்பதன் மூலம் இதை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடித்து இதற்கு மருந்து கொடுத்து சிறுநீரகம் பழுதடைவதை தடுக்கலாம். இந்தியாவில் இதற்கு ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து குழந்தைகள் இதில் சேர்ந்துள்ளனர், அவர்களுக்கு பண உதவி, மருந்தை ஐரோப்பவிருந்து வரவழைக்க வேண்டிய வழிமுறைகளை செய்துகொண்டிருக்கிறோம். இவர்களுக்கு டயாலிஸிஸ், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கும் உதவி செய்கிறோம். சிஸ்டினோசிஸ் பவுண்டேஷன் ஆப் இந்தியாவிற்கு தலைவராகவும் உள்ளேன். 1997இல் பாலாஜி எஜூகேஷனல் டிரஸ்ட் ஆரம்பித்தேன், சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காகவும், டயாலிஸிஸ் மற்றும் அறுவை சிகிச்சைக்கும் எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி செய்து வருகிறோம் . இப்பொழுது சேப்பியன் பவுண்டேஷன் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருக்கிறது.
சிறுநீரக செயலிழப்பு வராமல் எவ்வாறு தடுப்பது?
இதைத் தடுப்பதற்கு சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும், அந்த பரிசோதனையில் ஆல்புமின் அல்லது ப்ரோடீன் கசிவு பாசிட்டிவ் என்று வந்தால் நம்முடைய சிறுநீரகத்தில் ஒரு ஓட்டை இருக்கிறது என்று அர்த்தம். அதன் பின்னர் தான் உங்களுக்கு ரத்தப் பரிசோதையில் தெரிய வரும்.இதை நாம் ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்து விட்டால் பயாப்ஸி, டயாலிஸிஸ் இல்லாமல் செய்து தடுக்க முடியும். என்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் இதை செய்து கொண்டிருக்கிறோம். ஜப்பானியர்களுடன் பழகிய பொழுதான் இதை தடுப்பது எளிது என்று உணர்ந்தேன். அவர்கள் தான் உலக அரங்கில் மிக அதிகமான அளவில் சிறுநீரக நோயை தடுத்துள்ளனர். அங்கு டயாலிஸிஸ் செய்யும் நோயாளிகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் தான் அதிகரித்துள்ளனர் . இது எப்படி சாத்தியம் என்று பார்த்தால் அங்கு பள்ளியில் ஒவ்வொரு வருடமும் எல்லா மாணவர்களும் தங்கள் சிறுநீரை பரிசோதிக்க வேண்டும். ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிப்பதால் அவர்களால் தடுக்க முடிந்தது. இதையே நாங்களும் செய்யத் துவங்கி உள்ளோம். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு உரை நிகழ்த்தி, பின் ஒரு ஸ்ட்ரிப் கொடுப்போம். இதன் மூலம் ப்ரோடீன் கசிவு இருப்பதை எளிதாக கண்டறியலாம். இதற்கு பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எங்களுக்கு ஒத்துழைக்கிறார்கள், உதவி செய்கிறார்கள். அடுத்த மிக முக்கியமான ஒன்று - உப்பு குறைத்து சாப்பிடுதல். உலகத்திலேயே நம்பர் ஒன் உயிர்கொல்லி என்று பார்த்தால் ரத்த அழுத்தமும் அதன் மூலம் வரும் பிரச்சனைகளும். ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் அல்லது சிறுநீரகம் செயலிழப்பு இவை தான் பொதுவான பாதிப்புகள். WHO ஆய்வின் படி ஆண்டுதோறும் தொன்னூறு கோடி மக்கள் இதனால் உயிரிழக்கின்றனர். இதற்கு உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதே காரணம். உப்பு அதிகம் சேர்க்கும் பொழுது நிச்சயம் ரத்த குழாயில் பாதிப்பு ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் ரத்த அழுத்தம் 130/90 என்பது சாதாரணமானது என்று கூறுகிறோம், ஆனால் பழங்காலத்தில் 90/60 தான் இருந்திருக்கிறது. தலைமுறை தலைமுறையாக நாம் உப்பு சாப்பிடுவதை அதிகரித்துக்கொண்டே வந்துவிட்டோம். உப்பு என்பது பொருள் கெடாமல் இருப்பதற்கு பயன் படுத்தப்பட்டது, அன்றைக்கு அதன் தேவை இருந்தது. இன்று நமக்கு உணவு கெடாமல் பார்த்துக் கொள்ள பல வழிகள் உள்ளன, அதோடு பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளது. எனவே உப்பு குறைப்பது என்பது மிகவும் அவசியம். WHO பரிந்துரையின் படி நாம் ஐந்து கிராம் உப்பு தான் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள் 10-15 கிராம் சாப்பிடுகிறார்கள். இது மிகவும் அதிகம். எனவே நீங்கள் அன்றாட வாழ்வில் உப்பை குறைத்து சாப்பிடுங்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.உப்பு அதிகமாக சாப்பிடுகிறீர்களா இல்லையா என்பதை சிறுநீரக பரிசோதனையில், சோடியம் அளவை வைத்து எளிதாக கண்டறியலாம். ரத்த அழுத்தம் இருந்தால் மட்டும் தான் உப்பு குறைத்து சாப்பிட வேண்டும் என்பது இல்லை. இதனால் பல நன்மைகள் உள்ளன - சிறுநீரகக் கல் வராமல் தடுப்பது, எலும்பு தேய்மானம் என பல ஆதாயங்கள் உள்ளன.
இந்தியாவின் மருத்துவம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருப்பதாக கருதுகிறீர்களா?
கண்டிப்பாக, இந்திய மருத்துவம் என்பது இன்று மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து சிகிச்சைகளும் இந்தியாவிலும் உள்ளது. ஆனால் இதில் உள்ள பாதகம் என்னவென்றால் ஒரே மாதிரியான மருத்துவம்/சிகிச்சை இருப்பதில்லை. ஒழுங்குமுறை அல்லது தர கட்டுப்பாடு என்பது மருத்துவத்தின் சவாலாகவே இருக்கிறது. இதற்கு ஆகும் செலவு என்பதும் ஒரு காரணம். பணம் இல்லாததால் சமரசம் செய்கிறார்கள். உதாரணமாக இரத்த பரிசோதனை என்பது எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆய்வக தரப்படுத்தல்(Laboratory Standardisation) என்பது இல்லை. அடுத்து நம்முடைய மருத்துவமனையின் சுகாதாரம் மிகப் பெரிய சவால், நம்முடைய மக்கள் தொகை கூட இதற்கு காரணம் என்று கூறலாம். எனவே இங்கு அறிவு, வசதி அனைத்தும் உள்ளது, ஆனால் அவற்றை எவ்வாறு அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு கொண்டு சேர்ப்பது என்பது கடினமான வேலை.
உங்களுக்கு பிடித்த கதாசிரியர், பொழுதுபோக்கு ?
தமிழில் எனக்கு, எழுத்தாளர் தேவன் மிகவும் பிடிக்கும்.எனக்கு நகைச்சுவை வகையின் மீது ஈடுபாடு அதிகம். அவரது துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜெகநாத், வீட்டை கட்டிப்பார் படித்திருக்கிறேன். அவருடைய அனைத்து புத்தகங்களும் படித்துள்ளேன்.என்னுடைய பொழுது போக்கு என்றால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி , நீச்சல் பிடிக்கும். நேரம் கிடைத்தால் கோல்ப் விளையாடுவேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடனான தங்களின் நட்பு?
நான் அவரை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முன்பு சந்தித்தேன்.முதல் தடவை பார்க்கும் பொழுதே அவருடைய ஈர்ப்பு, ஒளி என்னை பிரமிக்க வைத்து. நோய்வாய்ப்பட்டு இருந்த பொழுதும் அவருடைய அந்த ஆரா/ஒளி என்று சொல்வோமே அது குறையவே இல்லை. அந்த சந்திப்பிற்கு பின் நெருங்கிய நண்பராகி விட்டார். எனவே அவர் நண்பர் என்றே கூற வேண்டும். அவரிடம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எனக்கு மிகவும் பிடித்தது, "நீங்கள் என்ன சொல்கிறீர்களோ நான் அதை கடைபிடிப்பேன், விளக்கம் எதுவும் தேவை இல்லை. ஏதாவது தப்பு செய்தால் கூறுங்கள் " என்று சொல்லுவார். அவர் ஒரு மிகவும் ஒழுக்கமான மனிதர். என்னுடைய மிக நெருங்கிய நண்பர்.
வருங்கால மருத்துவர்களுக்கு தங்கள் அறிவுரை?
இன்றைக்கு மருத்துவ துறையில் சம்பாதிப்பது என்பது எல்லோருடைய அக்கறை, கவலையாக உள்ளது. சம்பாதிப்பது என்று வரும் பொழுது நோயாளிகளிடம் ஏற்படும் இரக்கம் போய்விடும் (Compassion to Patient). இது மிகவும் முக்கியம். ஒரு நோயாளி குணமடைய வேண்டும் என்று நாம் நினைத்தால் நிச்சயம் அதற்கான வழியை கண்டுபிடிக்க இயலும். அவர்களிடம் பணம் இல்லை என்றாலும் நம்மால் அதற்கான வழியை கண்டறிய முடியும். எனவே நோயாளிகளிடம் இரக்கம், மற்றும் சரியான மருத்துவம் இவை இரண்டும் முக்கியம் என நான் கருதுகிறேன்.
Leave a comment
Upload