தொடர்கள்
ஆன்மீகம்
பித்ரு சாபம் போக்கும் ஸ்ரீ ஸ்தல சயன பெருமாள் கோவில், திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்)…!! - ஆரூர் சுந்தரசேகர்.

Sri Sthala Sayana Perumal Temple,

108 திவ்ய தேசங்களில் 63 வது திவ்யதேசமான அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராகத் ஸ்தல சயன பெருமாள் வெறும் தரையில் புஜங்க சயனத்தில் கிடந்த கோலத்தில் அருள்புரிந்து வருகிறார். இக்கோயில் தாயாருக்கு “நிலமங்கை தாயார்” என்று பெயர். மற்ற கோயில்களில் இருப்பது போல் தாமரை மீது அமர்ந்திருப்பதற்குப் பதிலாக தனி சந்நிதியில் தரையில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
இந்த பெருமாள் தன் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இதனால் இந்த கோயிலிலுள்ள பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உற்சவர் பெருமாளுக்கு உலகிய நின்றான் என்று பெயர். கோயிலில் பெருமாளின் காலடியில் புண்டரீக ரிஷி அமர்ந்திருப்பதைக் காணலாம். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரின் அவதார ஸ்தலம். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்த ஸ்தலம் "அர்த்த சேது" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்தலமான திருக்கடல்மலை "மகாபலிபுரம்" என்றும் "மாமல்லபுரம்" என்றும் அழைக்கின்றனர்.

Sri Sthala Sayana Perumal Temple,

ஸ்தல புராணம்:
இன்றைய மாமல்லபுரம் கடற்கரையானது, ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. இதில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார். புண்டரீக மகரிஷி பாற்கடல் பரந்தாமனின் மீது அளவற்ற பக்தியால் அருகிலுள்ள குளத்தில் உள்ள தாமரை மலர்களைக் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணன் திருவடிகளுக்குச் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களைக் கூடையில் கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் இருந்தது. பக்தி பெருக்கால் தன் இரண்டு கைகளால் கடல் நீரை இரவு பகலாக அன்னம், அகாரம் இன்றி வெளியே இறைத்தார். “பரந்தாமா! நான் உன் மீது கொண்ட பக்தி உண்மையானால், இந்த கடல் நீர் வற்றட்டும். எனக்குப் பாதை கிடைக்கட்டும். இந்தப்பூக்கள் அதுவரை வாடாமல் இருக்கட்டும்,"என்றார். இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த பெருமாள் ஒரு முதியவர் வடிவில் வந்து, கடல் நீரை இறைப்பதற்கான காரணம் கேட்டார். அதற்கு புண்டரீக மகரிஷி பாற்கடல் செல்ல பாதை ஏற்படுத்துவதாகக் கூறினார். உடனே முதியவராக வந்த பெருமாள் தனக்கு உணவு தயார் செய்து கொடுத்தால் தானும் சேர்ந்து இறைப்பதாகக் கூறினார். உடனே மகரிஷி மகிழ்ந்து விரைவில் இரண்டு பேரும் சேர்ந்து இறைத்தால் இந்தக்கடல் வற்றி விடும் என்று எண்ணி மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து விட்டு உணவு தயார் செய்யச் சென்றார்.
உணவு தயார் செய்து திரும்ப வந்து பார்க்கையில் ‘ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில்' வெறும் தரையில் பெருமாள் காட்சியளித்தார். அதிர்ந்து போன புண்டரீக மகரிஷி ஆதிசேஷன் மீது கிடப்பவர் வெறும் தரையில் கிடக்கிறாரே என்று மனம் வருந்தித் தான் பறித்து வைத்த தாமரை மலர்களைச் சமர்ப்பித்து திருவடி அருகிலேயே நிரந்தரமாக அமரும் வரத்தைப் பெற்றார். இன்றளவும் இத்திருத்தலத்தில் திருவடி அருகே தாமரை மலரையும் ,புண்டரீக முனிவர் அமர்ந்துள்ளதையும் காணலாம் . தரை தலத்தில் சயனித்திருப்பதால் “ஸ்தல சயன பெருமாள் “என்று அழைக்கப்படுகிறார் .

Sri Sthala Sayana Perumal Temple,

ஸ்தல வரலாறு:
சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் 14ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் ஆகம விதிப்படி இக்கோயிலைக் கட்டி பெருமாளை வழிபட்டு வந்ததாகத் தல வரலாறு கூறுகிறது. பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களைக் கடல் சூழ்ந்து கொண்டது. கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

Sri Sthala Sayana Perumal Temple,

ஸ்தல அமைப்பு:
சயன கோலத்தில் பெருமாள் காட்சி அளிக்கும் ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். பன்னிரண்டு ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் ஸ்தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் தனிச் சந்நிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர், இராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. கடன் தொல்லை தீரும் லட்சுமி நரசிம்மரின் சந்நிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்' பதிக்கப்பட்டுள்ளது.
புஷ்கரணி: இரண்டு புஷ்கரணிகள் உள்ளன
1.புண்டரீக புஷ்கரணி, 2.கருட நதி.
விமானம்: தாகனக்ருதி (ஆனந்த விமானம்)
உற்சவர்: ஸ்தல சயன பெருமாள் (உலா குய்ய நின்றான்)
தாயார்: இக்கோயிலில் உள்ள தாயார் தனி சந்நிதியில் தரையில் (மற்ற கோயில்களில் இருப்பது போல் தாமரை மீது அமர்ந்திருப்பதற்குப் பதிலாக) அமர்ந்துள்ளார். தாயாருக்கு “நிலமங்கை தாயார்” என்று பெயர்.

Sri Sthala Sayana Perumal Temple,

திருவிழாக்கள்:
சித்திரை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். புண்டரீக புஷ்கரிணி தீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறும். பிரதோஷம், பெருமாள் நட்சத்திர தினம், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளைகளில் லட்சுமி நரசிம்மருக்குப் பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ருணவிமோசன ஸ்தோத்திரம்’கூறினால் வாழ்வு சிறக்கும். கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம். பூதத்தாழ்வாரின் அவதார உற்சவமும் முக்கியமான திருவிழாவாகும்.

பரிகார ஸ்தலம் :
பெருமாள் நிலத்தில் சயனகோலத்தில் வீற்றிருக்கும் ஒரே திவ்யதேசம். இத்தலத்தில் வந்து நிலத்தில் சயனித்திற்கும் பெருமாளையும், தாயாரையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நிலம் ,வீடு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது . மற்றும் பித்ரு சாபம் போக்கும் தலமாகவும் விளங்குகிறது. திருமணத்தடை நீங்கவும் இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புஷ்கரணி தெப்பக் குளத்தில் நீராடி மஹாளய அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் காசி, கயா, இராமேஸ்வரத்தில் கிடைக்கும் புண்ணியத்தை விடப் பல மடங்கு புண்ணியமும், மனநிறைவும், மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

Sri Sthala Sayana Perumal Temple,


கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை: காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை: மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கோயிலுக்குச் செல்லும் வழி:
சென்னையின் புறநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மகாபலிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
சாலை வழியாக - ஸ்ரீ ஸ்தல சயனப் பெருமாள் கோயில் சென்னையில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) சென்னையில் இருந்து மகாபலிபுரத்திற்கு அடிக்கடி பேருந்து சேவை உள்ளது. சென்னையில் இருந்து ECR வழியாகப் பாண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும் .

பித்ரு சாபம், நிலம் ,வீடு சம்பந்தமான பிரச்சனைகள் தீர்க்கும் திருக்கடல்மல்லை ஸ்ரீ ஸ்தல சயன பெருமாளைத் தரிசித்துப் பலனடைவோம்!!