தொடர்கள்
அனுபவம்
காக்கா-சத்தியபாமா ஒப்பிலி

20230829205838213.jpeg

எங்கள் ஊரில் காக்கா என்று ஒருவன் இருந்தான். அவனுக்கு எப்படி அந்த பெயர் வந்ததென்று யாருக்கும் தெரியாது. அவனையும் சேர்த்து. அழகான பெயருக்கு அவசியமில்லாத காலம் அது.

எனக்கு அந்த பெயர் வைத்திருந்தால் சந்தோஷப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் அவனின் அந்த பெயர் பிடிக்கும். அவன் அதைப்பற்றி கவலைப் படாததாலேயே அவனுடைய அந்த பெயர் எனக்குப் பிடிக்கும். சரி இது எதற்கு இப்பொழுது? அந்த காக்காய் என்ற பெயருக்காகத்தான்.

அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்?

அந்த பெயரில் நான் சிலரை நேர்காணல் செய்யப்போகிறேன். நிஜாமாக இல்லை. உடான்ஸ்.

யார் அந்த சிலர்? நம் அரசியல் சொல் வீரர்கள் தாம்.

நம் நாட்டில் அவர்களுக்கா பஞ்சம்?

முதலில் யார்? எது என்று தெரியாமலேயே அழிக்கவேண்டும் என்று சூளுரையிட்ட நம் கழகத்தின் சின்ன பிள்ளை தான்.

இனி நேர்காணல்


காக்காய்: சௌக்கியமா தம்பி?


சி. பி ( சின்ன பிள்ளை): எனக்கென்ன அமக்களமா இருக்கேன். நாடே என்ன பத்தி தானே பேசுது!


காக்காய்: போர்ல சண்டை போட்டு நாட்ட காப்பாதின ரேஞ்ச்கு பேசறீங்க! சந்தோஷம்.


சி. பி: பின்ன, எவ்வளவு முக்கியமான விஷயத்த கேட்டுறுக்கேன். மத்திய அரசே கலங்கி போச்சு!


காக்காய்: அப்படியா? யாரு சொன்னாங்க?


சி. பி: யாரு சொல்லணும். இங்க மக்கள் என் வீரத்த நினைச்சு கொண்டாடுறாங்க.


காக்காய்: மகிழ்ச்சி! எனக்கு உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி தான்! நீங்க எத அழிக்கணும்னு நினைக்கிறீங்க?


சி. பி: சனாதனத்த தான்.


காக்காய்: அப்படின்னா என்னங்க?


சி. பி: சாதி பிரிவு


காக்காய்: அதத்தான் காங்காலமா சொல்லிட்டு இருக்காங்களே எல்லா கட்சியும். நீங்க புதுசா என்ன அழிக்கப் போறீங்க?


சி.பி: வர்ணாஸ்ரமம்.


காக்காய்: அப்படின்னா?


சி. பி: மக்களை வர்ணங்களா பிரிச்சி,ஒரு சிலர மேல எழ விடாம, ஒரு சில ஆதிக்க கும்பல் ஆளுகிறது.


காக்காய்: நீங்க எந்த வர்ணம்? ஆதியிலேர்ந்து ஆளுகிற வர்ணமா?


சி.பி: நீங்க பிரச்சனைய திசை திருப்ப முயற்சி பண்றீங்க!


காக்காய்: சரி விடுங்க! சனாதனத்தை அழிக்கணும்னா என்ன முயற்சி எடுப்பீங்க?


சி.பி: அது...அது.. யோசிக்கணும்.


காக்காய்: ஏம்பா? ஜாதியே கிடையாது. இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்ன்னு சொல்லிடலாமா?


சி. பி: ம்ம்ம்... என்ன சொல்றீங்க ஒன்னும் புரியல!


காக்காய்: ஹிந்தி வேண்டாம் சரி. தமிழும் புரியலையே.


சி. பி: ஓ! இது வட மொழி இல்லையா?


காக்காய்: எது?! அய்யோ! சரி விடுங்க! அடுத்த மாநாட்டுல என்ன பேசப் போறீங்க!


சி பி: அதுக்கு ஒரு பஞ்ச் வைச்சிறுக்கேன். மத்திய அரசு ஆடப் போகுது.


காக்காய்: உங்க கட்சியுமே கொஞ்சம் ஆடிப் போயிருக்குன்னு கேள்வி பட்டேன்! அப்பா பயப்படறாராமே!


சி பி: நீ என்ன வேணா பேசு தம்பி நான் பாத்துக்கிறேன் ன்னு சொல்லிட்டாரு.


காக்காய்: சரிதானே! வேற என்ன சொல்லமுடியும் ஒரு அப்பாவால?


சி பி: நீங்க எதோ பொடி வைச்சு பேசற மாதிரியே இருக்கு!


காக்காய்: அப்படியா? வளர்றீங்க தம்பி! சந்தோஷம். அடுத்த அறிவிப்பு எப்போ வரும்?


சி பி: வரும்! இந்தியா பேர் மாத்தறாங்களாமே! நம்ம சேரன் தானே இமய மலைக்கு போய் கொடி நாட்டினார்! சேரனா, சோழனா, பாண்டியனா?


காக்காய்: பெரிய விஷயம் எல்லாம் பேசறீங்க. எனக்கு தெரியாது தம்பி. யாருவேனா இருந்துட்டு போகட்டும்! அதுனால என்ன?


சி பி: நம்ம நாட்டோட பேர இந்த மூணு மன்னர்கள் பேரா வைக்கணும். எப்படி வைக்கலாம்?
சேசோபா நாடு, பாசோசே நாடு? காதுக்கு நல்லா இல்லாயே! என் மக்களோட கலந்து யோசிச்சு முடிவுக்கு வரணும்.


காக்காய்: தம்பி, நான் ஒன்னு சொல்லட்டுமா, நாட்டு நலனுக்காக! நீங்க தயவு செஞ்சு நீட் டுக்கு போராட போங்க! இதெல்லாம் வேண்டாம். நமக்கெதுக்கு.


சி பி: அதெப்படி நான் முயற்சியில் சற்றும் மனம் தளரா அசோக சக்ரவர்த்தி.


காக்காய்: அய்யோ தம்பி அது விக்ரமாதித்யன். என்னால முடியல. நான் கிளம்பறேன்.


சி பி: ஏன்? நீ ரொம்ப பேசற! சனாதன லிஸ்ட் ல உன் பேரு தான் மொதல்ல!


அப்பறம் நான் ஏன் அங்க இருக்கப் போறேன்.