தொடர்கள்
அழகு
பூ நாரைகள் ஏன் வரவில்லை - ப.ஒப்பிலி

2023040608265648.jpeg

பொதுவாகவே தமிழ் மாதம் பங்குனியின் கடைசீ வாரம் வந்தாலே பறவை இன ஆராய்ச்சியாளர்களுக்கும்,பறவையின ஆர்வலர்களுக்கும் கொண்டாட்டம்தான். ஏனெனில், இந்த காலத்தில்தான் பெரும் பூ நாரை (Greater flamingo) திருவள்ளூரில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயம், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் சிற்றோடை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கில் வலசை (migrate) வரும். இதை தவிர தமிழகத்தின் பல நீர்நிலைகளிலும் இப்பறவைகள் பல ஆயிரக்கணக்கில் வரும்.

இந்த பங்குனி மாத கடைசி வாரம், பறவையின ஆராய்ச்சியாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏனெனில், ஆயிரக்கணக்கில் வரும் பெரும் பூ நாரைகள் சில நூறு எண்ணிக்கையிலேதான் வந்திருந்தன. இம்மாதிரி குறைந்த எண்ணிக்கையில் பெரும் பூ நாரைகள் வலசை வருவது சமீப காலங்களில் இதுவே முதன் முறை என்கின்றனர் அவர்கள்.

20230406082729158.jpeg

மும்பை இயற்கை வரலாற்று சங்கத்தின் துணை தலைவர் ச பாலச்சந்திரன் அவர்கள் கூறுகையில் வலசை வரும் பெரும் பூ நாரைகள் எண்ணிக்கை சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சிறிய எண்ணிக்கையில் வரவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேதான் நிலைமை என்கிறார் அவர். நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பறவைகள் சரணாலயம், திருநெல்வேலியில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கன்னியாகுமாரி மாவட்டத்திலும் பெரும் பூ நாரைகள் சிறிய எண்ணிக்கையில்தான் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பாலச்சந்திரன் மற்றும் அவருடன் பணி புரியும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் கோடியக்கரையில் (Kodiakkarai) 40,000 பெரும் பூ நாரைகளை கண்டு பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த வருடம் கோடிக்கரையில் வெறும் 400 நாரைகளை மட்டுமே பார்த்ததாக கூறுகின்றனர்.

பாலச்சந்திரன் கூறுகையில் கடந்த வருடம் ஜனவரி மாதத்திலும், மீண்டும் பிப்ரவரி மாதத்திலும் இரண்டு முறை மழை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மழைக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிந்து விட்டது. இதனால், நீர் நிலைகளில் பூ நாரைகள் உணவுகளான சிறிய மீன்கள், மற்றும் சில உணவு வகைகள் கிடைப்பது குறைந்துவிட்டது. இதன் காரணமாக பூ நாரைகள் வரத்து குறைந்திருக்கலாம் என கூறுகிறார் பாலச்சந்திரன்.

20230406082757519.jpeg

மற்றொரு பறவையின ஆராய்ச்சியாளர் வ சாந்தாராம் கூறுகையில் கடந்த வருடம் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பருவ மழை இயல்பை விட கூடுதலாக பெய்தது. இதனால் பெரும் பூ நாரைகளுக்கு வேண்டிய அளவு உணவுகள் கிடைத்துவிட்டது. எனவே பெரும் பூ நாரைகள் தங்கள் வலசை பயணத்தை ரத்து செய்திருக்கலாம், என்கிறார் அவர்.

பறவையின ஆர்வலர் கே வீ ஆர் கே திருநாரணன் கூறுகையில் பள்ளிக்கரணை, கோவளம் சிற்றோடை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பல ஆயிர கணக்கான பெரும் பூ நாரைகள் வலசை வந்தன. ஆனால் இந்த ஆண்டு மிக குறைந்த எண்ணிக்கையில் அவைகளை கண்டதாக கூறுகிறார் அவர்.

பெரும் பூ நாரைகள் குறித்து பாலச்சந்திரன் மேலும் ஒரு புதிய தகவலை கூறினார். பொதுவாகவே பறவையின ஆர்வலர்கள் தமிழகத்திற்கு பூ நாரைகள் குஜராத்தின் கட்ச் பகுதியிலிருந்துதான் வலசை வருகின்றன என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பெரும் பூ நாரைகள் அசர்பைஜான், துர்க்மினிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் வலசை வருகின்றன. பாலச்சந்திரன் ஒரு பூ நாரை கூட்டத்தில் சில பறவைகளுக்கு வளையம் பொறுத்தியுள்ளார். இந்த வளையம் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளின் பறவையின ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து பாலச்சந்திரன் அவர்களுக்கு சில தகவல்களை அனுப்பியுள்ளனர். எனவே பெரும் பூ நாரைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து வலசை வருவது தெரியவந்துள்ளது என்கிறார் அவர்.

இந்த பெரும் பூ நாரைகள் ஆந்திர பிரதேச மாநிலத்தின் பழவேற்காடு பகுதிகளில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வலசை வரும். இது குறித்து சூலூர்பேட்டை பகுதி வன அலுவலர்கள் கூறும் போது எங்கள் பகுதியில் பெரும் பூ நாரைகள் எப்போதும்போல நல்ல எண்ணிக்கையிலேதான் வந்தன. அதானால் பெரும் பூ நாரைகள் வலசை அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என்கின்றனர் அவர்கள்.