வகிதாவுக்கும் எனக்கும் திருமணமாகி 37வருடங்கள் ஆகின்றன. வகிதா
ஒன்பது குழந்தைகள் உள்ள வீட்டில் ஆறாவதாக பிறந்தவள். வகிதாவை அல்லது
வகிதாவின் தங்கையை யாராவது ஒருவரைதான் முதுகலை பட்டபடிப்பு படிக்க
வைக்க முடியும் என வகிதாவின் தந்தை அறிவித்த போது தங்கைக்காக முதுகலை பட்டப்படிப்பை விட்டுக் கொடுத்தாள் வகிதா.
எங்களுக்கு திருமணமாகும் வரை வகிதாவுக்கு தமிழ்இலக்கியம் பற்றி
பாலபாடம் கூட தெரியாது.
ஆனால் திருமணத்திற்கு பின் வகிதா எழுதும் என் வலதுகை ஆனாள். நான்
எழுதி தரும் கதைகளை கணினியில் தட்டச்சு செய்து மானிட்டர் பார்த்து திருத்தி
பத்திரிகைகளுக்கு மின்னஞ்சல் அனுப்புவது அவள்தான். அவளுக்கு ஞாபகசக்தி
அதிகம். நான் முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய ஒருகதையை பற்றி கேட்டால்
வரி விடாமல் ஒப்பிப்பாள்.
பல்கலைபணியில் இருந்தபோது கதைகள் எழுதியதற்காக இருமுறை
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டேன். சிக்கலான தருணங்களில் குடும்பத்தை
தங்குதடையின்றி நிர்வகித்தாள். நான் அரசியல் நையாண்டி சிறுகதைகள் எழுதும்
போதெல்லாம் வீட்டின் மீது கல்லெறிவார்கள் போனிலும் நேரிலும் மிரட்டுவார்கள்.
சிறிதும் பயமின்றி பிரச்சனைகளை தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்வாள்.
கறிக்குழம்பு வைத்தால் அவளுக்கு ஒரே ஒரு கறித்துண்டு போதும் என்பாள்.
பண்டிகைகளுக்கு நானும் குழந்தைகளும் நான்கைந்து செட் ட்ரஸ் எடுத்தால் தனக்கு
ஒரே ஒரு செட்போதும் என்பாள்.
சிக்கனவாதி கணக்கில் கெட்டிக்காரி
என்னை பற்றி அவளது சகோதர சகோதரிகள் யாராவது குறை சொல்லி
விட்டால் வகிதா கொதித்தெழுவாள். ‘அவரை பற்றி ஒரு வார்த்தை தவறாக பேச
யாருக்கும் உரிமையில்லை’ என்பாள்.
பெற்ற தாயின் மீது எல்லையில்லா அன்பும் அபிமானமும் உள்ளவள்.
அம்மாவை விருந்துபசரிப்பில் திணறடித்து விடுவாள் வகிதா.
தங்கையை அண்ணன்மகனை அக்காள்மகளை உறவினர் மகனை வகிதா
வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தாள். கல்வி என்று யார் வந்தாலும் பேருதவி
புரிவாள் வகிதா.
வகிதாவின் உயிர் தோழி ஸ்டெல்லாவும் சந்திராவும். ஸ்டெல்லா இறந்து
விட்டாள். சந்திராவுடன் வாரத்தில் நான்கு தடவைகளாவது போனில் பேசி விடுவாள்.
பல்கலை பணியின் போது என்னுடன் பணிபுரிந்த கலிவரதனின் மனைவி
அர்ச்சனாம்மா நட்பானார். இன்னும் இருவரின் நட்பு தொடர்கிறது.
இந்த மூவர் தவிர உலகின் அனைவரிடமும் மிதமான நட்புதான். யாரிடமும்
மிக நெருங்கி செல்லமாட்டாள் மிக விலகி செல்லவும் மாட்டாள்.
தினமும் தினமலர் வாசிப்பாள் ஒரு வரிவிட மாட்டாள்.
மகள் ஜாஸ்மினை படிக்க வைத்து நான்கு பட்டங்கள் வாங்க வைத்தாள். மகன்
நிலாமகன் முதுகலைபல் மருத்துவம் படிக்க வைத்தாள்.
மகளுக்கு திருநெல்வேலியில் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைத்தாள். பேத்தி
ஜன்னத்துல் பிர்தௌஸை மூன்று வருடங்கள் தன் கஸ்டடியில் வைத்து வளர்த்தாள்.
மகனுக்கு பள்ளபட்டியில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தாள்.
மகனும் மருமகளும் கோயம்புத்தூரில் டென்டல் கிளினிக் வைத்தனர்.
ஓய்வுபெற்று நானும் வகிதாவும் சிதம்பரத்தில் சில வருடங்கள்
தன்னந்தனியாக இருந்தோம். பின் மகனின் வேண்டுகோளை ஏற்று மகனோடு வந்து
தங்கி விட்டோம்.
-இதோ மகனுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஆகின்றன.
மருமகளை பற்றி ஒரு வார்த்தை வகிதா குறை சொன்னதில்லை. மருமகளும்
வகிதாவை பற்றி ஒருவார்த்தை ஆவலாதி சொன்னதில்லை.
வகிதா வீட்டு சமையல் செய்வாள். பேரன் முகமது அர்ஹானை பார்த்துக்
கொள்வாள். எனக்கு கதைகளை டிடிபி செய்து கொடுப்பாள்.
போனமாதம் மகன் நிலாமகனுக்கு குவைத்தில் பல்மருத்துவர் பணி கிடைத்து
பறந்து போய் விட்டான். கிளினிக்கை டாக்டர் மருமகள் பார்த்துக் கொள்கிறாள்.
மருமகளும் பேரனும் மூன்று நாட்கள் தங்கிவர பள்ளபட்டி சென்று
விட்டார்கள். அந்த இடைவெளியில் நானும் வகிதாவும் கோழிக்கோடு ஒரு நாள்
சுற்றுலா சென்று வர திட்டமிட்டோம். ரயில் நிலையம் சென்றோம். ரயில் கேன்சல்
என்றார்கள்.
வீடு திரும்பினோம்.
“வகிதா!”
“என்னப்பா?”
“இன்னைக்கி ஒருநாள் சமைக்காம ஜாலியா ஹோட்டல் அன்னபூர்ணால
சாப்பிடுவோம்.. பொன்னியின் செல்வன் 2 பார்ப்போம். ஐஸ்கிரீம் முழுங்குவோம்
ஃபன் மால் சுற்றுவோம். நுங்கு தின்போம். பலாப்பழம் கடிப்போம். கிசுமிசுபழம்
முந்திரிபருப்பு வாங்கி கொறிப்போம் நாளை கோவை குற்றாலம் குளிக்கப்
போவோம்!”
“பொன்னியின் செல்வன் திரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் நடிச்ச படம்தானே?”
“ஆமாம்!”
“இது இரண்டாவது பாகமா?”
“ஆமாம்!”
‘ஒண்ணை நீளமா எடுத்து இரண்டா வெட்டி விக்ரான்க போல..”
“இருக்கும் இருக்கும்!”
“டிக்கட் எவ்வளவு?”
“நாம ரெண்டு பேருக்கும் சேத்து 480ரூபாய்.”
“தேவையா? டிவில போடும் போது பாத்துப்பேனே..”
“நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து படம் பாத்து ரொம்ப நாளாகுது பாப்பா.
தினம் தினம் வேலைவேலைன்னு மெனக்கிடுற உனக்கு அவுட்லெட் வேண்டாம்..
தவிர கல்கியின் மீது எனக்கு மெஹா அபிமானம் உண்டு..”
“சரி வருகிறேன்… தியேட்டர்ல கூல்ட்ரிங்ஸ், பாப்கார்ன், பப்ஸ் வாங்கி காசை
கரியாக்கக் கூடாது!”
“ஓகே!”
“ஒரே படம்தான் பாக்க வருவேன்.. வா அப்படியே யாத்திசையும்
பாத்திருவோம்னு கூப்பிடக்கூடாது!”
“யாத்திசை அருமையான படம். பொன்னியின் செல்வன் ரிலிஸுக்காக
யாத்திசையை எல்லா தியேட்டர்காரன்களும் எடுத்திட்டான்க!”
கேஸ் அடுப்பை அமர்த்தினாள். மின்விசிறி விளக்குகளின் ஸ்விட்ச்களை ஆப்
செய்தாள். வீட்டின் உள்கதவையும் வெளிக்கதவையும் தனித்தனி பூட்டுகளால்
பூட்டினாள்.
எதிர்வீட்டில் சாவியை கொடுத்தாள்.
சாலையில் தள்ளுவண்டியில் பலாச்சுளைகளை கண்ணாடி பெட்டியில் வைத்து
விற்றுக் கொண்டிருந்தான் ஒருவன்.
“பாப்பா உனக்கு பலாப்பழம் ரொம்ப பிடிக்குமே வாங்கி தருகிறேன்
சாப்ட்டுக்கிட்டே தியேட்டருக்கு வா…“
“யானை விலை குதிரை விலை சொல்வான்”
“பலாச்சுளை எப்படிப்பா?
“கால்கிலோ அம்பது ரூபா..”
“கால்கிலோவுக்கு எட்டு சுளை நிக்கும். அன்புநகர் போற வழில முழு
பலாப்பழம் விக்ரான். பழம் 150ரூபாய். நூறு சுளைகளுக்கு மேல கிடைக்கும். நாம
மட்டுமின்றி மருமகளும் தின்னலாம். பக்கத்து வீடுகளுக்கு கொடுக்கலாம். மீந்த
பலாச்சுளைகளை காயவச்சு சிப்ஸ் போடலாம். பலா கொட்டைகளை கறியோடு
போட்டு உங்களுக்கு சூப்பர் கறிக்குழம்பு வச்சு தரேன். எனக்கு இந்த பலாசுளை
வேணாங்க வாங்க போகலாம்”
தலையாட்டியபடி கிளம்பினேன்.
அந்த தியேட்டர் காம்ப்ளக்ஸில் நான்கு தியேட்டர்கள். நான்கிலும்
பொன்னியின் செல்வன் 2 போட்டிருந்தார்கள்.
படம் பார்க்க மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். கல்கியின்
பொன்னியின் செல்வனை பாராயணம் செய்திருந்த கிழடுகட்டைகள் மஞ்சள்
பையுடன் காத்திருந்தனர். மொத்ததில் தியேட்டர்கள் திருவிழாக்கோலம்
பூண்டிருந்தன.
திறன்பேசியில் உள்ள நுழைவு சீட்டை காண்பித்துவிட்டு நானும் வகிதாவும்
உள்ளே போனோம்.
டைட்டில் போடும்போது விசிலும் ஆரவாரமும் மிகைத்தன. பக்கவாட்டில்
வகிதா முகத்தை பார்த்தேன். ஜென்துறவியை போல அமர்ந்திருந்தாள். படம் ஓடிய
165 நிமிடங்களில் ஒரு பத்துதடவையாவது மனைவியின் ரீயாக்ஷன்களை
நோட்டமிட்டேன்.
நத்திங் ஸ்பெஷல்.
படம் முடிந்து ஸ்கூட்டி பெப்பை ஸ்டாரட் செய்யும் போது வினவினேன்.
“பாப்பா படம் எப்படி?”
“இம்..”
“என்ன இப்டி சொல்லிட்ட? ஆதித்ய கரிகாலனும் நந்தினியும் தற்கொலை
பண்ணி செத்து போறமாதிரி காட்டிருக்காங்களே. ஆதித்யகரிகாலன் பூணூல் போட்டு
இருக்ற மாதிரி காட்டியிருக்காங்களே இது நியாயமா? கல்கியின் ஆன்மா இவங்களை
மன்னிக்காது!”
‘ஏ முகநூல் போராளியே! படம் பாக்க வந்த. உன்னை ரெண்டே முக்கால்
மணிநேரம் என்டர்டெயின் பண்ணியாச்சு. . கல்கியின் கதையே ஒரு புனைவுதான்.
மணிரத்னத்தின் படம் புனைவுக்குள் ஒரு புனைவு. பணியாரத்தை தின்ன சொன்னா
பணியாரத்தின் ஓட்டைகளை எண்ணிக்கிட்டு இருக்க?”
சமாதானமானேன்.
“எனக்கு ஐஸ்கிரீம் வேணாம். தொண்டை கட்டிக்கும். ஒரு நுங்குபத்து ரூபா
விலை அதிகம். ஃபன் மால் வேண்டாம். ஒரிஜினல் குற்றாலத்துக்காரி எனக்கு இந்த
மினி குற்றாலம் ஒரு ஜுஜுபி.” நூற்றி ஐம்பது ரூபாய்க்கு ஒரு பலாபழம் வாங்கி
கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
“நெய் ரோஸ்ட்டும் தேங்காய் சட்னியும் புதினா சட்னியும் தக்காளி சட்னியும்
நான் செஞ்சு தரேன் சாப்பிடுங்க. அன்னபூர்ணா என்கிட்ட தோத்திடும். சமையலுக்கு
பிறகு எனக்கு பேரனின் துணிகளை துவைக்ற வேலை இருக்கு. பாப்பா போப்பான்னு
என்னை தொந்தரவு பண்ணாம போய் கதை எழுதுங்க!’‘
ஆடம்பரசெலவுகள் இல்லாமல் 37வருடங்கள் குடும்பத்தை வகிதா நகர்த்தி
வரும் வித்தை கண்கூடானது.
Leave a comment
Upload