தொடர்கள்
அழகு
வேல்ஸும் பரதமும்  - கோமதி

20230405190846298.jpeg

கலை என்பது நாடு, மொழி, கலாச்சாரம் என இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்று நாம் படித்திருந்தாலும், நேரில் அதைக் காணும் பொழு ஏற்படும் அந்த உணர்வை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தான் ரெக்ஸ்ஸம் - வேல்ஸில் நடைபெற்ற பன்முக கலாச்சார நிகழ்ச்சி எனக்கு அளித்தது. ஆப்ரிக்க நடனம்,சீன நாட்டு நடனம், சால்சா என்ற இந்த நீண்ட பட்டியலில் நமது தமிழ் நாட்டின் பாரம்பரிய நடனமான பரதமும் இடம் பெற்றிருந்தது. இந்நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் இந்த பழமையான கலை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருந்தது என்றே கூறல் வேண்டும். அங்கு எழுந்த ஆரவாரம், இக்கலைக்கு கிடைத்த அங்கீகாரம், வைத்த கண்ணை எடுக்காமல் இதனை ரசித்த மக்கள் கூட்டம் என என் வியப்பின் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.

20230405190917871.jpeg

கலாசாகரா யு.கே மற்றும் பாலம் ஆர்ட்ஸ் இணைந்து இந்த பரதநாட்டிய நிகழுவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிதி ரௌத்தூர், வர்ஷா பாலசுப்ரமணியன் மற்றும் பாரதி கார்த்திகேயன் கலாசகரா யு.கே நடனப்பள்ளியில் பரதம் பயிலும் மாணவியர் இதில் பங்கு கொண்டு சிறப்பித்தனர். இவர்களது நடனம் காண்போரை மெய்மறக்க செய்யும் வகையில் அமைந்தது என்றே கூற வேண்டும். ஒவ்வொரு நடனத்திற்கு முன்மும் அந்த நடனம் பற்றிய குறிப்பை தங்களுடைய அபிநயம் மூலம் விளக்கியது கூடுதல் சிறப்பு. பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லமால் அங்கு கூடியிருந்த அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் இவர்களது கலைத்திறன் அமைந்திருந்தது என்றே கூற வேண்டும். இதற்கான முழு பாராட்டுதல்களும் இவர்களது குரு உஷா ராகவன் அவர்களையே சாரும்.

20230405190948551.jpeg

(கிருஷ்ணபிரியா பாலம் ஆர்ட்ஸ்)

கலாசாகரா யு.கே என்னும் கலை நிறுவனம் லண்டனில் நிறுவப்பட்டு கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நடனம் சார்ந்த பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது. மற்றும் பல மாணவிகள் சிறப்பாக பரதநாட்டியம் பயிலும் இடமாகவும் திகழ்கிறது. இந்திய கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டு என்றும் துடிப்புடன் செயல்படுபவர் திருமதி. உஷா ராகவன் அவர்கள். சிறுமியர் முதல் பெண்கள் வரை என இவரிடம் நடனம் பயில்பவர் ஏராளம். நடனம் கற்பிப்பதை தன்னுடைய மூச்சாக எண்ணி செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவரது பணி எவ்வளவு சிறப்பு மிகுந்தது என்பது இவரது மாணவியர் நடனம் ஆடும்பொழுது நம் கண் முன்னே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

பாலம் ஆர்ட்ஸ் என்னும் அமைப்பு அமெரிக்காவில் துவங்கப்பெற்று இப்பொழுது ரெக்ஸ்ஹாமை மையமாகக் கொண்டு செயல்படும் மின்னியல் தகவல் சாதனத் துறையாகும்.திருமதி. க்ரிஷ்ணப்ரியா அவர்களால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியக் கலைகளை வெளிநாடுகளில் பரப்புவதற்கும், மற்றும் வெளிநாடுகளில் இந்தக் கலையை பயிலும் மாணவ மாணவியர்க்கு தங்கள் திறனை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற பாலமாகவும் அமைந்துள்ளது என்றே கூறல் வேண்டும். பாரதநாட்டியம் மட்டும் அல்லாது குச்சிப்புடி,களரி என பலவித கலைகளையும் பாலம் ஆர்ட்ஸ் ஊக்குவித்துக்கொண்டே உள்ளது.

20230405191027196.jpeg

(உஷா ராகவன்)

உஷா ராகவன் அவர்களும் பாலம் ஆர்ட்ஸும் இனைந்து கோவிட் தருணத்தில் 30 மணி நேரத்திற்கும் மேல் தொடர் மாரத்தான் நிகழ்த்தி சாதனை படைத்தனர். பல நாடுகளிலிருந்தும் நடனக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். "Unite for India" என்ற தலைப்பில் இவர்கள் நிதி திரட்டி அதனை பல்வேறு மாநிலங்களுக்கும் நன்கொடையாக அளித்து சாதனை படைத்தனர். இவர்களின் இந்த செயல் மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

இந்த நிகழ்வை ஐ டி.வி வேல்ஸ் குறிப்பிட்டது கூடுதல் சிறப்பம்சமாகும்.

தொன்மையான நம்முடைய பாரம்பரியமும், பரதக் கலையும் என்றும் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும் என்ற நம்பிக்கை திண்ணமாகும் விதமாக அமைந்திருந்தது இந்த நிகழ்வு.

இந்தியக் கலைகளை காப்பாற்றுவதில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் தான் செய்கிறார்கள் என்ற கருத்து உண்மைதானோ என்று தோன்றுகிறது.