கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மிகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் 2023-ம் ஆண்டுக்கான 18 நாள் சித்திரை திருவிழா, கடந்த மாதம் 17ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று முதல் நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி முக்கிய நிகழ்வான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர். இவர்கள் தங்களை மணப்பெண் போல் அலங்கரித்து கொண்டு, கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டு, விடிய விடிய உற்சாகத்துடன் கும்மியடித்து கொண்டாடினர்.
முன்னதாக விழுப்புரத்தில் திருநங்கைகளின் ‘மிஸ் அழகி’ போட்டி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த திருநங்கை உள்பட மேலும் 2 பேர் முதல் 3 இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிரீடம் அணிவித்து, பட்டம் வழங்கி பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி காலை கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரவான் தேரில் எழுந்தருளி வீதியுலாவாக வலம்வந்தார். தேரை திமுக எம்எல்ஏ மணிக்கண்ணன் உள்பட பலர் வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பலர், தங்களின் நிலங்களில் விளைந்த மணிலா, கம்பு, மாங்காய், முருங்கை காய்களை சூறைவிட்டனர். பின்னர் தேர் முக்கிய வீதிகள் வழியாக பந்தலடிக்கு சென்றது. அங்கு அரவான் களப்பலி நிகழ்ச்சி நடந்தது.
அங்கு கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழந்த திருநங்கைகள், அரவான் களப்பலியான துக்கம் தாங்காமல், தாங்கள் கட்டிய தாலியை அறுத்தும், வளையல்களை பூசாரி கையால் உடைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்த பொட்டை அழித்துக் கொண்டு ஒப்பாரி பாடல்களை பாடி ஓலமிட்டு அழுதனர். பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் மூழ்கி எழுந்து, வெள்ளை புடவை உடுத்தி, தங்களின் சொந்த ஊருக்கு சோகத்துடன் திரும்பி சென்றனர்.
கடந்த 3-ம் தேதி மாலை பலிச்சோறு படையலிடும் நிகழ்வு நடந்தது. இந்த சோற்றை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்ற ஐதீகம் உள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 4-ம் காலை விடையாற்றி நிகழ்ச்சியும், 5-ம் தேதி காலை தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் 18 நாள் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
Leave a comment
Upload