தொடர்கள்
பொது
பெங்களூரு இரண்டாவது இடம் - மாலா ஶ்ரீ

20230021064432256.jpg

சர்வதேச உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் தரவரிசை பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த 'டாப்-10' பட்டியலில் பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. இப்பட்டியலில் டெல்லி மற்றும், சென்னை விமான நிலையங்களும், இந்தியாவின் 3 தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.

இந்தியாவில் விமானத்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்ட நகரங்களைத் தவிர்த்து, பிற நகரங்களுக்கும் புதிய விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. டெல்லி, சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு சர்வதேச விமான நிலையங்கள் நவீனப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உலகிலேயே தலைசிறந்த சர்வதேச விமான நிலையங்களின் 2022-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இந்த 'டாப்-10' பட்டியலில் பெங்களூரு, டெல்லி சர்வதேச விமான நிலையங்கள் முக்கிய இடம் பிடித்தது. இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், "பொதுவாக விமானங்களைப் பொறுத்தவரை சரியான நேரத்தில் இயக்கப்பட வேண்டியது அவசியம். இது பயணிகளுக்கு மட்டுமல்ல, விமான நிறுவனங்களுக்கும் நல்லதுதான்.

20230021064749767.jpg

ஏனெனில், சிறிது நேர தாமதமாக விமானம் இயங்கினாலும் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும். இதனால் முறையாக நேரத்தைக் கடைப்பிடித்து இயக்கும் சர்வதேச விமானநிலைய தரவரிசை பட்டியலில் டாப்-10 இடம்பிடித்த பெங்களூரு, டெல்லி விமானநிலைய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். இதுதவிர, இந்தியாவின் இண்டிகோ, ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகிய 3 தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இயங்கும் 'டாப்-10' விமான நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளது!" என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகின் 'டாப்-10' விமானநிலையங்களின் தரவரிசை பட்டியலில், பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 2-வது இடமும், புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 7-வது இடமும் பிடித்துள்ளது. இந்த 2 விமான நிலையங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை. சரியான நேரத்தில் விமானங்களை இயக்குவதில் கெம்பேகவுடா விமான நிலையம் 84.08 சதவிகிதமும், புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 81.84 சதவிகிதமும் பெற்றுள்ளது.

அதேபோல், சர்வதேச 'டாப்-10' ஏர்லைன்ஸ் தரவரிசை பட்டியலில், இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ் 84.11 சதவிகிதம் பெற்று, 5-வது இடத்தை பிடித்துள்ளது. ஏர் ஏசியா இந்தியா 83.7 சதவிகிதத்துடன் 6-வது இடத்தை பிடித்தது. மேலும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் 80.98 சதவிகிதத்துடன் 9-வது இடத்தில் உள்ளது. ஏற்கெனவே ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஏர்லைன்ஸ்களில் டாடா குழுமம் முதலீடு செய்துள்ள நிலையில், இந்த 2 ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் விரைவில் ஏர் இந்தியா டாடா குழும நிறுவனத்துடன் இணையப் போகிறது எனக் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, புகழ்பெற்ற ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் தெற்காசிய நாடுகளில் சிறந்த விமானநிலைய பட்டியலை வெளியிட்டது. இதில் நேரத்தைப் பின்பற்றுவது மட்டுமின்றி, பல்வேறு அம்சங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏர் இந்தியா உச்சா விவகாரத்தில் கடுமையாக இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் மார்க் வாங்கி முன்னே வந்திருக்குமோ ???

சின்ன சின்ன விஷயங்கள் இந்த தர வரிசை பட்டியலை பாதிக்காது போலும்.

யார் முன்னாடி வருவது பின்னாடி வருவது இருக்கட்டும். பயணிகளை பாதுகாப்பாக கூட்டிட்டுப் போங்கப்பா. அது ஒன்னு போதும்.